Advertisement

அவமானம் தேவையா?

'விபரம் தெரியாத அரசியல்வாதியாக இருக்கிறாரே... குழந்தைகளிடம் வாயை கொடுத்து வம்பில் மாட்டலாமா' என, அப்னா தளம் என்ற கட்சியின் முக்கிய தலைவரான அனுப்ரியா படேல் பற்றி, அவரது கட்சியினரே முணு முணுக்கின்றனர்.

இவரது கட்சிக்கு, உத்தர பிரதேச மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் செல்வாக்கு உள்ளது. இதனால், பா.ஜ., - காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகள், தேர்தல் சமயத்தில், இந்த கட்சிக்கு ஒரு சில தொகுதிகளை ஒதுக்கி, அவர்களது ஓட்டுகளை வளைப்பது வழக்கம். தற்போது, அப்னா தளம் கட்சி, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் உள்ளது. மோடியின், முதல் அமைச்சரவையில், அனுப்ரியா, இணை அமைச்சராக இருந்தார். தற்போது எம்.பி.,யாக இருந்தாலும், இவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. அனுப்ரியாவின் பிரதான அரசியல் எதிரி, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ். அவரது பெயரை கேட்டாலே, அனுப்ரியா, 'டென்ஷனாகி' விடுவார். சமீபத்தில், தன் தொகுதியான மிர்சாபூரில் உள்ள பள்ளிக்கு சென்ற அனுப்ரியா, குழந்தைகளிடம், 'உ.பி.,யில் உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்' என, கேட்டார். அடுத்த நொடியே, ஒரு குழந்தை, சற்றும் யோசிக்காமல், 'அகிலேஷ் யாதவ்' என, கூறியது. அனுப்ரியாவின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே; சத்தமில்லாமல், அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். சமாஜ்வாதி கட்சியினரோ, 'இந்த அம்மாவுக்கு, இந்த அவமானம் தேவையா...' என, கிண்டலடிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement