Advertisement

புழுதி பறக்க நடந்த கார் ரேஸ்

சென்னையில் இருந்து வேலுார் போகும் சாலையில் உள்ளது இருங்காட்டுக் கோட்டை இங்குள்ள கார் பந்தய மைதானத்தில் கடந்த சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் சர்வதேச கார் பந்தயம் நடைபெற்றது.

இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள உலகின் பல பகுதிகளில் இருந்தும் போட்டியாளர்கள் வந்திருந்தனர் போட்டியாளர்கள் என்றால் பெரும்பாலும் இருபது இருபத்தைந்து வயதிற்குட்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.

மதுரையை பூர்வீகமாகக் கொண்டவரும் தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான கோபால் தனது மகன் யுவன் சுந்தரமூர்த்தியை பந்தயத்திற்கு அழைத்து வந்திருந்தார்.யுவனுக்கு வயது பதினாறுதான் ஒன்பதாவது வயதில் இருந்து கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார், இவருக்கு சாதாரண ரோட்டில் கார் ஒட்டுவதற்கு லைசென்ஸ் கிடையாது ஆனால் சர்வதேச கார் பந்தய வீரர், இது ஒரு விநோதம்தான்.

மிக மிக செலவான மற்றும் ரிஸ்க்கான பொழுது போக்கு, இந்த பந்தயத்தை படம் எடுக்கச் செல்லும் பத்திரிகையாளர்களுக்கு தரும் அனுமதி அட்டையில் கூட, படம் எடுக்கும் போது விபத்து ஏதேனும் ஏற்பட்டு உடலுக்கோ உயிருக்கோ ஏதேனும் சேதம் ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது என்று எழுதியே அனுமதி கொடுக்கின்றனர்.
காதை பிளக்கும் சத்தத்துடன் இருநுாறில் இருந்து இருநுாற்றைம்பது கிலோமீட்டர் வேகத்தில் மைதானத்தில் கார்கள் பறப்பது போல செல்கிறது, ஒன்றை ஒன்று முந்தும் இடங்களிலும் வளைவுகளிலும் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயமும் ஏற்படுத்துகிறது.
பார்வையாளர்களுக்கு நல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர், தனியாக காலரி அமைத்திருந்தனர். சென்னையில் இருந்து செல்வது சற்று துாரம் என்றாலும் கார் மோட்டார் பைக்கில் காலரி நிறையும் அளவிற்கு பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
இரண்டு நாள் பந்தயத்தில் படம் எடுத்ததில் நிறைய பாடமும் கற்றுக் கொண்டேன் கற்றுக் கொடுத்தவர் பிஎஸ்எம்., கிருஷ் ஆவார், காதில் மட்டும் விர்..விர்ரென்று கார்கள் கடந்து போகும் போது ஏற்படும் சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டே இருந்தது.
எல்.முருகராஜ்
murugarajdinamalar.in
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement