Advertisement

நேரடி கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாக... புகார்! வெளி மார்க்கெட் நெல் வியாபாரிகளுக்கு முன்னுரிமை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு மழை பெய்ததால், சம்பா போக நெல் நல்ல விளைச்சலை கண்டுள்ளது.காவிரி டெல்டா பகுதி மட்டுமின்றி, டெல்டா அல்லாத பகுதியிலும், நெல் விளைச்சல் கை கொடுத்துள்ளது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல்லை, விற்பனை செய்வதற்காக, ஆங்காங்கே 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றில் சன்ன ரகம் ஒரு கிலோ 19.05 ரூபாய்க்கும், மோட்டா ரகம் 18.65 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

சன்னரகம் அறுவடை செய்யும் விவசாயிகள், வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து விடுகின்றனர். ஆனால் மோட்டா ரகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தால்தான் அதிக விலை கிடைக்கிறது. அதனால் விவசாயிகள் போட்டி போட்டிக்கொண்டு கொள்முதல் நிலையங்களை தேடி வருகின்றனர். அவர்களிடம் நெல் மூட்டையை உடனே கொள்முதல் செய்ய, மூட்டை ஒன்றுக்கு, ரூ. 45 லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இந்த தொகையை முன் கூட்டியே கொடுத்தால்தான் விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடை போடப்படுகின்றன. இல்லையென்றால் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எப்.சி.ஐ., குடோனில் இருந்து சாக்கு கட்டு எடுத்து வருவதற்கான வாகன வாடகை, கொள்முதல் செய்யப்படும் நெல்லை லாரிகளில் ஏற்றி குடோனுக்கு எடுத்துச்செல்ல டிரைவர்களுக்கு இனாம், எடைபோடும் தொழிலாளர்கள் என ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படும் பட்டியல் நீள் கிறது. வேறு வழியின்றி விவசாயிகள் ஊழியர்கள் கேட்கின்ற தொகையை கொடுத்துவிட்டு, நெல்லை விற்பனை செய்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க, விவசாயிகளை விட, வியாபாரிகளிடம் நெல்லை வாங்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மார்க்கெட் கமிட்டி மற்றும் வெளி மார்க்கெட்டில், ஒரு மூட்டை 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நெல்லை, வாங்கும் வியாபாரி, அதை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கிறார். இதன் மூலம் ஒரு மூட்டைக்கு, கூடுதலாக 300 ரூபாய் கிடைக்கும்.

எனவே ஒரு வியாபாரி கமிட்டி மற்றும் வெளி மார்க்கெட்டில் 200 மூட்டை நெல்லை வாங்கி, அவற்றை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தால், ரூ. 60 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. இந்த வியாபாரிகள் ஊரியர்களை கவனிப்பதால், வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்ய ஊழியர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் தரப்பில் விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன் குமாரிடம் புகார் செய்யப் பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    அதனால் என்ன? தி.மு.க ஆட்சியிலேயே இது போல நடந்திருக்குதுன்னு எடப்பாடியாரை விட்டு சட்ட சபையில் விளாசச் சொல்லிட்டா போச்சு. அதே டி.என்.பி.எஸ்.சி ஊழல் டெக்னிக்தான்.

Advertisement