Advertisement

ஐ.கே.எப்., பின்னலாடை கண்காட்சியில் புதுமை பூக்கட்டும்! வெளிநாட்டு வர்த்தகர்கள் அதிக ஆர்வம்

திருப்பூர்;புதுமையான ஆயத்த ஆடை ரகங்களுடன் திருப்பூரில் ஐ.கே.எப்., கண்காட்சி, நேற்று துவங்கியது; ஆடைகளை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை நடத்த, வெளிநாட்டு வர்த்தகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.பின்னலாடை துறையினருக்கு, ஏற்றுமதி வாய்ப்புக்களை பெற்றுத்தரும்வகையில், ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரில், ஐ.கே.எப்., கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.கே.எப்., அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், 47வது இந்தியா நிட்-பேர் கண்காட்சி, அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது. தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் கருணாகரன் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார்.ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஈஸ்வரன், ஐ.கே.எப்., துணை தலைவர் சண்முகசுந்தரம், எம்.எல்.ஏ., குணசேகரன், ஏ.இ.பி.சி., சிறப்பு அழைப்பாளர் சந்திரன் பங்கேற்றனர்.கண்காட்சியில், திருப்பூர், கோவை, டில்லி, கோல்கத்தா உட்பட நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களைச்சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 39 அரங்குகளில், ஆயத்த ஆடை ரகங்களை காட்சிப்படுத்தியுள்ளன.
வியர்வை உறிஞ்சும் தன்மை, கிருமி தொற்றாத தன்மைகளுடன் கூடிய விளையாட்டு ஆடை; பருத்தி மற்றும் மொடால்; பருத்தி மற்றும் பாலியெஸ்டர், விஸ்கோஸ் என, பல்வேறு செயற்கை நுாலிழை, கலப்பு நுாலிழையில் தயாரிக்கப்பட்ட ஆடை ரகங்கள். கொரிய துணியில் தயாரிக்கப்பட்ட சிறப்புவகை ஜாக்கெட் ரகங்கள்.லெகின்ஸ், இரவு நேர ஆடை, முற்றிலும் இயற்கையான வகையில் உருவாக்கப்பட்ட ஆடைகள், இளைஞர்கள் அதிகம் விரும்பும் ஜீன்ஸ், டெனிம் துணியில் தயாரிக்கப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான ஆடை ரகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.வர்த்தகர்கள் ஆர்வம்:கண்காட்சி துவக்க விழா நேரம் முதலே, பார்வையிடுவதற்காக, வெளிநாட்டு வர்த்தகர்களும், வர்த்தக முகமை நிறுவன பிரதிநிதிகளும், அரங்கிற்கு வரத்துவங்கிவிட்டனர்.முதல் நாளான நேற்று, அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, துபாய், மொரீஷியஸ், இலங்கையை சேர்ந்த, 10 வர்த்தகர்கள்; 40 வர்த்தக முகமை நிறுவன பிரதிநிதிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
ஆடை ரகங்களை பார்வையிட்ட வர்த்தகர்கள், அரங்கில் அமர்ந்து, உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் வர்த்தக பேச்சு நடத்தினர். ஆடையின் விலை மதிப்பு; நிறுவன உற்பத்தி திறன் என, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வழங்குவது குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். இந்த கண்காட்சி, இன்றும், நாளையும் நடக்கிறது. காலை, 9:30 முதல் இரவு, 7:00 மணி வரை பார்வையிடலாம்.
ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:உலகளாவிய வர்த்தகர்களின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. ஐ.கே.எப்., கண்காட்சியை புதிய வர்த்தகர்கள் அதிகளவில் பார்வையிட உள்ளனர். மூன்று நாள் கண்காட்சியில், மொத்தம் 40 வர்த்தகர்கள்; நுாறு வர்த்தக முகமை நிறுவன பிரதிநிதிகள் பார்வையிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.திருப்பூர் உட்பட இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தை வாய்ப்புகள்; வர்த்தகர் அறிமுகம் கிடைக்கும்; நீண்ட காலம் அடிப்படையில் ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் கிடைக்க கண்காட்சி கைகொடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement