Advertisement

தானமாக பெற்ற இருதயம் 24 மணி நேரம் தாங்குமா...

தானமாக பெற்ற இருதயத்தை 24 மணி நேரம் வரை 'துடிப்பாக' வைத்திருக்கும் கருவியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது நடைமுறைக்கு வரும் போது, இருதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். மூளைச் சாவு அடைந்த சிலரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்படுகின்றன. இவர்களிடம் இருந்து இருதயத்தை வெளியே எடுத்த நான்கு மணி நேரத்துக்குள், இருதய மாற்று சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பொருத்த வேண்டும். தாமதமாக எடுத்து வரப்படும் நான்கில் மூன்று பங்கு இருதயங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடுகின்றன.

24 மணி நேரம்



இந்த சிக்கலுக்கு விரைவில் முடிவு கிடைக்க உள்ளது. இருதயத்தை அதிக நேரம் பாதுகாக்கும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். பன்றிகளின் இருதயத்தை வெளியே எடுத்து, ரத்த நாளங்களில் திரவத்தை செலுத்தி, ஆக்சிஜனையும் உட்புகச் செய்து, 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் இயங்கச் செய்து சாதித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். இந்த சோதனைக்கு 'யுல்லிசெஸ்' என பெயரிட்டுள்ளனர். சிறிய சூட்கேசில் இந்த கருவியை வைத்து, இருதயத்தை 24 மணி நேரத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். இந்த தொழில்நுட்பம் அடுத்த ஒரு ஆண்டுக்குள் மனித இருதயத்துக்கும் பயன்படுத்தும் நிலை வந்து விடும்.

இதுகுறித்து சான் ஆன்டோனியோவில் உள்ள டெக்சாஸ் பல்கலை., பேராசிரியர், டாக்டர் ரபேல் வெரேசா கூறியது:கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் இருதயத்தை ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்று பொருத்தினர். அடுத்த பத்தாண்டுகள் கழித்தும் இப்படித் தான் நடந்தது. தற்போது 24 மணி நேரம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பதால் உலகின் எந்த பகுதிக்கும் இருதயத்தை எளிதாக கொண்டு சென்று பல நோயாளிகளை காப்பாற்றி விடலாம். உடலின் மற்ற உறுப்புகளையும் இதுபோல சிறப்பான முறையில் பாதுகாத்து தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த கருவி உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்து எப்படி



தற்போது 24 மணி தனியாக பாதுகாக்கப்படும் பன்றி இருதயங்களை, வேறொரு பன்றிக்கு பொருத்தி சரியாக இயங்குகிறதா என அடுத்தகட்ட சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது சரியாக வரும்பட்சத்தில், அடுத்து மனித இருதயங்கள் எளிதாக இடம் மாறலாம்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement