Advertisement

மாநகராட்சி... என்னாச்சு? பின்பெஞ்சில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்:மார்க்கெட்டிங் உத்தி தெரியாததே சிக்கல்

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் செயலாக்கத்தில், மத்திய அரசு வெளியிட்ட மதிப்பெண் அடிப்படையிலான, 'ரேங்க்' பட்டியலில், 23வது இடத்துக்கு, கோவை மாநகராட்சி தள்ளப்பட்டதால், அதிகாரிகள், 'அப்செட்' ஆகியுள்ளனர்.
இதற்கான காரணங்கள், அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளன.'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம், சமீபத்தில் விசாகபட்டினத்தில் நடந்தது; சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, கோவைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அப்போது, மதிப்பெண் அடிப்படையில் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, 'ரேங்க்' அறிவிக்கப்பட்டது.
அதில், 329.75 மதிப்பெண்களுடன், திருப்பூர் மாநகராட்சி மூன்றாமிடம், 263.24 மதிப்பெண்களுடன், வேலுார் மாநகராட்சி பத்தாமிடம் பெற்றிருந்தன. 179.9 மதிப்பெண்களுடன், 23வது இடத்துக்கு கோவை மாநகராட்சி பின்னுக்குச் சென்றிருந்தது.
2018ல் திட்ட செயலாக்கத்தில், அகில இந்திய அளவில், கோவை மாநகராட்சி, ஒன்பதாவது இடத்திலும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றிருந்தது.தமிழக அளவில் ஒவ்வொரு மாதமும் மதிப்பீடு செய்யும்போது, கோவையே முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. ஆனால், அகில இந்திய அளவிலான 'ரேங்க்' பட்டியலில், பின்னுக்குச் சென்றது, மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனெனில், ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில், 2017ல் தான் திருப்பூர் இணைக்கப்பட்டது. இரு ஆண்டுக்குள் திட்ட அறிக்கை தயாரித்து, அரசிடம் ஒப்புதல் பெற்று, 'டெண்டர்' கோரப்பட்டு, பணிகளை செய்திருக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்தபோது, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் மற்றும் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், திருப்பூருக்கு 'ரேங்க்' கிடைத்துஇருப்பதாக, தெரிவித்தனர்.
பொறுத்திருந்து பாருங்க!கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கோவையில், 48 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு திட்டமும் மிகப்பெரியவை. அவை பயன்பாட்டுக்கு வரும்போது, அகில இந்திய அளவில் பல்வேறு நகரங்களுக்கு முன்னுதாரணமாக திகழும். சில திட்டங்கள் பல்வேறு அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த வேண்டியிருப்பதால், தாமதமாகிறது.
'மத்திய அரசின் திட்டங்களுக்கு, ஆன்-லைனில், ஆவணங்களை பதிவேற்றம் செய்வதை வைத்து, மதிப்பெண் அடிப்படையில், 'ரேங்க்' வழங்கப்படுகிறது. ஆவணங்களை பதிவேற்றம் செய்தால், மதிப்பெண் வழங்குவது சரியான நடைமுறையாக இருக்காது; கள ஆய்வு செய்து, மதிப்பிடுவதே சரியாக இருக்கும்.'தற்போது, பொதுமக்கள் ஓட்டளிக்கும் முறையை, மத்திய அரசு கையாள்கிறது. ஆன்-லைனில் எங்கிருந்தாலும், யார் வேண்டுமானாலும் பதிவிடலாம்.
நகரத்தின் சூழலை அவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதும் தெரியாது. கள ஆய்வு செய்து, தர வரிசைப்படுத்துவதே சிறந்ததாக இருக்கும்' என்றனர்.மார்க்கெட்டிங் முக்கியமுங்க!பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:n திட்ட செயலாக்கத்தில், கோவை மாநகராட்சி பின்தங்கியிருப்பது உண்மையே. ஏனெனில், 69 இடங்களில், குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் கட்ட முடிவு செய்தோம்.
6 இடங்களில் மட்டுமே செயல்படுகிறது. இருப்பினும் ஒரு இடத்தில் கூட இன்னும் உரம் தயாரித்து, மக்களுக்கு வழங்கப்படவில்லை.n திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில், வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. மக்கள் தரப்பில் எதிர்ப்பு, சுகாதாரப்பிரிவு, பொறியியல் பிரிவினரிடம் இணக்கம் இல்லாததால், 43 இடங்களில் நிறுத்தி விடலாமா என்கிற எண்ணமும் இருக்கிறது.n 'மாதிரி சாலை திட்டம், 2016ல் துவக்கப்பட்டது; நான்கு ஆண்டுகளாகி விட்டது; இன்னும் அமைந்தபாடில்லை. ஏராளமான திட்டங்களை அறிவித்து, 'டெண்டர்' கோரி விட்டோம்; பெரும்பாலானவை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை; மக்கள் பயன்பாட்டுக்கும் வரவில்லை.
மற்ற நகரங்களை போல், நாமும் பூங்காக்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆனால், ஆவணப்படுத்தி, பதிவேற்றம் செய்ய தவறி விட்டோம். இதுபோன்ற காரணங்களால், 'ரேங்க்' பட்டியலில் பின்தங்கியிருக்கிறோம்' என்றார்.இது திருப்பூர் ஜெயித்த கதை!திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறியதாவது:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ.948 கோடியில், 26 பணிகள் செய்யப்படுகின்றன.
வார்டுக்கு ஒன்று வீதம், 60 இடங்களில் குப்பையில் உரம் தயாரிக்கும் திட்டம் துவக்கினோம்; 20 இடங்களில் வெற்றிகரமாக முடித்து, 500 டன் உரம் தயாரித்து, பொதுமக்களுக்கு வழங்கினோம்.மூன்று இடங்களில், 'ஸ்மார்ட்' பூங்கா அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்து விட்டது. பல திட்டங்களுக்கு, 'டெண்டர்' கோரி, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. டெண்டர் கோருதல்; திட்டங்கள் செயல்படுத்துதல்; பயன்பாட்டுக்கு வருதல் என பல்வேறு விகிதங்களில் கணக்கிட்டு, மதிப்பெண் அடிப்படையில், திருப்பூருக்கு மூன்றாவது 'ரேங்க்' வழங்கப்பட்டது. டெண்டர் கோருதல், திட்ட செயலாக்கத்தில், மற்ற நகரங்கள் பின்தங்கியிருக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ram -

    வாழ தகுதியற்ற இடம் கோவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. பெரிய குளத்து நீர் அருந்த லாயக்கு இல்லை. இதுக்கு போய் பல கோடி பணம் செலவு செய்வது வீண் வேலை. இப்படி வாங்கிய கடனை எப்போது கட்டி முடிப்பீர்கள். நகரமும், நகர வாசிகளும் மிளிர வாய்ப்பே இல்லை.

Advertisement