Advertisement

அதிரடி! கிரிக்கெட் சூதாட்ட தரகர் சாவ்லா நாடு கடத்தல்

Share
புதுடில்லி: தென் ஆப்ரிக்க அணிக்கும், இந்திய அணிக்கும் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது நிகழ்ந்த சூதாட்டம் தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளியும், தரகருமான சஞ்சீவ் சாவ்லாவை, டில்லி போலீசார், பிரிட்டனில் இருந்து, நேற்று டில்லிக்கு அழைத்து வந்தனர்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, 2000ம் ஆண்டு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தது. தென் ஆப்ரிக்க அணிக்கு, ஹன்ஸி குரோன்யே கேப்டனாக இருந்தார். அப்போது, கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டம் நடப்பதாக புகார் எழுந்தது.

குடியுரிமை:விசாரணை நடத்திய டில்லி குற்றப்பிரிவு போலீசார், ஹன்ஸி குரோன்யேவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டனர். இதில், டில்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சீவ் சாவ்லா, 50, என்பவருடன், சூதாட்டம் தொடர்பாக குரோன்யே பேசியது உறுதி செய்யப்பட்டது. ஆனால், இந்த தகவலை, முதலில் குரோன்யே மறுத்தார்.

போலீஸ் தரப்பில் ஆவணங்கள் வெளியிடப்பட்டதை அடுத்து, குரோன்யே, குற்றத்தை ஒப்புக் கொண்டார். தானும், சில வீரர்களும் சேர்ந்து, தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தோற்பதற்காக, பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முகமது அசாருதீன், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியைச் சேர்ந்த கிப்ஸ், நிக்கி போயே உள்ளிட்டோர் பெயர்களும் இதில் அடிபட்டன.

இந்த சூதாட்டத்துக்கு இடைத்தரகராக செயல்பட்ட சஞ்சீவ் சாவ்லாவை போலீஸ் தேடியது. அவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரது இந்திய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிரிட்டன் பாஸ்போர்ட் பெற்று, அந்நாட்டு குடியுரிமையையும் பெற்றார். அவரை, நம் நாட்டுக்கு நாடு கடத்தி வருவதற்கு, டில்லி போலீசார் தொடர்ந்து முயற்சித்தனர்.

இதையடுத்து, 2016ல், பிரிட்டன் போலீசார், சஞ்சீவ் சாவ்லாவை கைது செய்தனர். தன்னை இந்திய அரசிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்காக, மனிதாபிமான ரீதியான காரணங்களை, அவர் முன்வைத்தார். இதற்கிடையே, பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம், சாவ்லாவை நாடு கடத்துவதற்கு, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றமும், நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சஞ்சீவ் சாவ்லா தாக்கல் செய்த மனுவை, கடந்த வாரம் நிராகரித்தது.

உத்தரவு:சஞ்சீவ் சாவ்லாவுக்கு, இந்திய சிறையில் போதிய பாதுகாப்பும், வசதியும் செய்து தருவதாக, மத்திய அரசு சார்பில், பிரிட்டன் நீதிமன்றத்தில், சமீபத்தில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, 28 நாட்களுக்குள், சாவ்லாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டில்லி குற்றப்பிரிவு போலீசார், பிரிட்டன் சென்றனர். உரிய ஆவணங்களை தாக்கல் செய்த பின், சஞ்சீவ் சாவ்லா, டில்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சஞ்சீவ் சாவ்லாவை, போலீசார் நேற்று டில்லி அழைத்து வந்தனர்.

பிரிட்டனுக்கும், நம் நாட்டுக்கும் இடையே, மிகப் பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை பரஸ்பரம் நாடு கடத்துவது தொடர்பான ஒப்பந்தம், 1992ல், கையெழுத்தானது. இதற்கு பின், முக்கிய குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர், நம் நாட்டுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுவது, இதுவே முதல் முறை என்பதால், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த குரோன்யே, 2002ல் நடந்த விமான விபத்தில் பலியானார்.

12 நாள் காவல்:டில்லி அழைத்து வரப்பட்ட சஞ்சீவ் சாவ்லா, டில்லி கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டில்லி போலீசார், 'இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த ஐந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளது. இதற்கு மூளையாகச் செயல்பட்டவர் சஞ்சீவ் சாவ்லா. அவரை, சில நகரங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது' என, போலீசார் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சஞ்சீவ் சாவ்லாவை, 12 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • blocked user - blocked,மயோட்

    சூப்பர்... இது போல இன்னும் பல குற்றவாளிகளை கொண்டுவந்து இந்திய ஸ்டைலில் விசாரிக்க வேண்டும்.

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    அய்யொ, இதுக்கு பின்னால, சிறுபான்மை அழிப்பு மற்றும் பெரும்பான்மை பயங்கரவாதம் ஒளிஞ்சிருக்கு...............மோடி இதுக்காகத்தான், வெளிநாட்டுக்கெல்லாம் சும்மா ஏரோபிளானில் சுத்திகிட்டு இருந்திருக்காரு...............வாங்கோ ட்ரைவிடால்ஸ், சிறுபான்மை காவலர் கூட்டம், மற்றும் பகுத்தறிவு பிலிஸ் எல்லாரும் வாங்கோ...மோடி இன்னைக்கு நல்லா வகையா சிக்கிட்டாரு......................................வாங்கோ பாய்ஸ்..........................டீம்காவின் முட்டுக்களே வாங்கோ....இருபது வருஷம் கழிச்சு ஒரு விசயத்தை எதுக்கு விசாரிக்கிறீங்க............. .........அதுவே சொல்லுது, உங்களோட காவி தீவிரவாத நோக்கத்தை .. எங்கணா , அப்போ நேத்து நடந்த கேஸை விசாரிக்கலாம்னா ,விசாரணைக்கே ஆளு வரல ......oh, அதுவும் சிறுபான்மை ஒழிப்புதானோ............................ அப்போ , நாளைக்கு நடக்குறதை விசாரிக்கிற அளவுக்கு ( CAA , NRC payangaram, பொதுத்துறை பங்கு விற்பனை, ரிலையன்ஸ் அதானி செய்யப்போகும் ஊழல்களை ) காவிக்கு அறிவு பத்தாது. ..திராவிட அறிவும் இல்லை......................ஐயோ பாவம் மோடி............................இன்னைக்கு வகையா மாட்டினார் எங்க சிறுபான்மை காவல் மற்றும் டீம்கா த்ராவிடால்ஸ் இடம்................... .............

Advertisement