Advertisement

சார் பதிவாளர் இடமாறுதலுக்கு ரூ.1 கோடி பேரம்!

Share
''ஹேப்பி வாலன்டைன்ஸ் டே...'' என, மொபைல் போனை, 'கட்' செய்தபடியே, உற்சாகமாக பெஞ்சுக்கு வந்த அண்ணாச்சியை, அனைவரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பார்த்தனர். ''என்னவே, 'திருதிரு'ன்னு முழிக்கீய... என் பேரனுக்கு வாழ்த்து சொன்னேன்... எனக்கு அவன் பிரெண்டு மாதிரி...'' எனக் கூறி, நண்பர்களை சகஜ நிலைக்கு திருப்பிய அண்ணாச்சி, ''கட்டி முடிச்சு, மூணு வருஷமாகியும் திறக்கல வே...'' என, விஷயத்திற்கு வந்தார்.

''எந்த கட்டடத்தைங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோவில் சார்புல, 1 கோடி ரூபாய்ல, பக்தர்கள் தங்கும் விடுதி, 95 லட்சம் ரூபாய் செலவுல, திருமண மண்டபம் கட்டி, மூணு வருஷமாயிட்டு... ஆனா, இன்னும் திறக்காம, பூட்டியே வச்சிருக்காவ வே...''திருப்போரூர், எம்.எல்.ஏ.,வா, எங்க கட்சிக்காரர் இதயவர்மன் இருக்கிறதால தான், திறக்காம இழுத்தடிக்காவன்னு, தி.மு.க.,வினர் புகார் சொல்லுதாவ... இந்த கட்டடங்களை திறந்தா, கோவிலுக்கு வாடகையா, மாசத்துக்கு பல லட்சம் ரூபாய் வரும்... அதைக் கூட கணக்கு பார்க்காம, கட்டடங்களை பூட்டி போட்டு, பாழடிச்சிட்டு இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

''எல்லாரையும் கூப்பிட்டு, ஏகத்துக்கும் எகிறிட்டு போயிருக்காருங்க...'' என, அடுத்த மேட்டருக்குள் புகுந்தார் அந்தோணிசாமி. ''யாருக்கு யார் ஓய், 'டோஸ்' விட்டது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சமீபத்துல நடந்த உள்ளாட்சி தேர்தல்ல, திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சியை, தி.மு.க., பிடிச்சது... மாவட்டத்துல இருக்கிற, 18 ஒன்றியங்கள்ல, 13ஐ தி.மு.க., கைப்பத்திடுச்சுங்க... ''மாவட்டத்துக்கு வந்த உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, 'மாஜி' அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கூப்பிட்டு பேசியிருக்கார்... அக்ரி, இப்ப மாநில விவசாய பிரிவு செயலர், மாவட்ட ஆவின் தலைவர் பதவிகளை வச்சிருக்கார்... கூடுதலா, மாவட்டச் செயலர் பதவியும் கேட்டிருக்காருங்க... ''கடுப்பான வேலுமணி, 'மத்தவங்களுக்கு எந்தப் பதவியையும் விட்டு தர மாட்டீங்க... எல்லா பதவியும் உங்களுக்கே தான் வேணுமா'ன்னு சத்தம் போட்டிருக்காருங்க... அதே மாதிரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜன், அறநிலைய துறை அமைச்சர் ராமச்சந்திரன்னு, எல்லாரையும் தனித்தனியா கூப்பிட்டு, 'மண்டகப்படி' நடத்திட்டு போயிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''வளமான இடங்களை பிடிக்க, போட்டி நடக்குது பா...'' என, கடைசி தகவலுக்கு நகர்ந்தார், அன்வர்பாய்.

''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தமிழகத்துல, நிறைய வசூல் வேட்டை நடந்த சார் பதிவாளர் அலுவலகங்கள்ல, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், 'ரெய்டு' நடத்தினாங்க... புகார்ல சிக்குன பல சார் பதிவாளர்கள், அதிரடியா இடம் மாற்றப்பட்டாங்க பா... ''இதனால, காலியான அந்த இடங்களை, இன்னும் நிரப்பாம வச்சிருக்காங்க... வசூல் கொட்டுற இந்த இடங்களை பிடிக்க, சார் பதிவாளர்கள் மத்தியில, போட்டா போட்டி நடக்குது... ஒரு சில இடங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரைக்கும் கூட குடுத்து, 'டிரான்ஸ்பர்' வாங்கத் தயாரா இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''ஒரு கோடி குடுக்கிறவங்க, ஒட்டிக்கு ரெட்டியா எடுக்க தானே பார்ப்பாங்க...'' என, புலம்பியபடியே அந்தோணிசாமி நடக்க, மற்றவர்களும் எழுந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • பிரபு -

    கூட்டுறவு துறை தணிக்கை துறை இதுப்போன்ற லஞ்சம் கொடுத்து பதவி உயர்வு பெறுவது

Advertisement