Advertisement

புளி சாகுபடியாளர்களுக்கு ஜாக்பாட்

கம்பம் : தேனிமாவட்டத்தில் புளிய மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குவதால் இந்தாண்டு அதிகமகசூல் கிடைக்கும் என சாகுபடியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கடந்த 25 ஆண்டுகளில் தேனி மாவட்டத்தில் புளி சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் தரிசு, மானாவாரி நிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. பூ பூக்கும் போது மட்டும் மழை இருக்க வேண்டும். அதற்கு பிறகு தண்ணீர் தேவைப்படாது. 200 நாட்களில் மகசூல் எடுக்கலாம். பராமரிப்பும் கிடையாது. பிகேஎம் 1 மற்றும் துரியன் ரகங்கள் அதிக சாகுபடி செய்யப்பட்டாலும், நாட்டு மரங்களுக்கே கிராக்கி அதிகம்.கம்பம், சுருளிப்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கூடலுார், உத்தமபாளையம், சின்னமனுார் பகுதிகள் அதிக சாகுபடி இடத்தை பிடிக்கின்றன. மற்ற பகுதிகளிலும் சாகுபடி உண்டு.


இந்தாண்டு புளி பம்பர் மகசூல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மரங்களில் சரம் சரமாக புளியம்பழங்கள் காய்த்து தொங்குகின்றன.தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ' பூ பூக்கும் சமயத்தில் பலத்த மழை இல்லாமல் சாரல் பெய்ததால் மரங்களில் நன்கு காய் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரலில் மகசூல் வரத் துவங்கும். அதிகம் மகசூல் கிடைக்கும் என்பதால் புளி சாகுபடியாளர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும்,' என்றனர். மழை அதிகரித்திருந்தால் புளியில் நோய் தாக்கி மகசூல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement