Advertisement

டவுட் தனபாலு

தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: தி.க.,வினர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி, பிழைப்பு நடத்துகின்றனர். பிற மத கடவுள்களை திட்டினால் சும்மா விடுவரா... ரஜினியை மிரட்டி பார்க்கின்றனர். ரஜினி நியாயவாதி; நல்ல மனிதர்; மனதில் பட்டதை, கள்ளம் கபடம் இல்லாமல் பேசுபவர். அவரின் ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது.


'டவுட்' தனபாலு: நீங்கள் இப்படி வெள்ளந்தியாக பேசுகிறீர்கள். இதைப் படித்த பிறகாவது, ஈ.வெ.ரா.,வுக்கு முட்டு கொடுக்கும் உங்கள் அமைச்சரவை சகாக்கள், மனம் திருந்த வேண்டும். நடிகர் ரஜினியை பற்றி சாதகமாக பேசினால் தான், மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை அறிந்து வைத்துள்ளீர்களோ என்ற, 'டவுட்' உங்கள் பேச்சில் தென்படுகிறது.


த.மா.கா., தலைவர் வாசன்: நாடு முழுவதும், 1,200 கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சேர்க்கப்படும், 25 சதவீத இடங்கள் போக, மீதம் உள்ள, 75 சதவீத இடங்களுக்கு, மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மற்றவர்களின் பிள்ளைகளைச் சேர்க்க முடியாத நிலை உள்ளது. எனவே, நாடு முழுவதும், 5,464 தாலுகாக்களில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைத்து, மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டும்.'டவுட்' தனபாலு: மத்திய அரசு நடத்தும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தரமான கல்வி கற்றுத் தரப்படுகிறது; பல மொழிகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுவதால் தான், அந்த பள்ளிகளை, அனைத்து தாலுகாக்களிலும் துவக்க வேண்டும் என்கிறீர்கள் என்பது, 'டவுட்' இல்லாமலேயே புரிகிறது. அப்படியே, தமிழகத்தில் தடை செய்துள்ள, 'நவோதயா வித்யாலயா' எனப்படும், பைசா செலவில்லாத மத்திய அரசு பள்ளிகளை துவக்கவும் வலியுறுத்துவீர்கள் என, நம்புவோம்.


பா.ம.க., தலைவர் ராமதாஸ்: சிவபெருமான் தமிழகத்தில் தான், 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும், அந்த நிகழ்வுகளிலும், தமிழிலேயே அவர் உரையாடியதாகவும், சிவனடியாளர்கள் கூறுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மதித்து, தஞ்சை பெரிய கோவிலில், தமிழில் குடமுழுக்கு செய்வது தானே, சரியான செயலாக இருக்க முடியும்.


'டவுட்' தனபாலு: கோவிலில் குடமுழுக்கு செய்வது, மன அமைதிக்காகத் தானே தவிர, மொழிகளை போற்றுவதற்காக அல்ல. நம் மாநில கோவில் வழிபாட்டில், தமிழ் மொழியும், சமஸ்கிருதமும் காலம் காலமாக இணைந்தே உள்ளது. அதை மாற்றிக் காட்டுகிறேன் என சவால் விட்டு, குழப்பம் விளைவிக்க நினைப்பவர்களுடன் நீங்களும் சேர்ந்து விட்டீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  தஞ்சை பெரிய கோவிலை கட்டி அந்தக்காலத்தில் முதல் குடமுழுக்கு செய்த ராஜராஜ சோழனே தமிழில்தான் கும்பா அபிஷேகம் செய்யவேண்டும் என்று வற்புத்தியதாக தகவல் இல்லை... இப்ப இவர்கள் செய்வது ஒட்டு அரசியல்..

 • Silambu Arasan - dharmapurl,இந்தியா

  . எங்கள் தமிழ்நாட்டில் தமிழில் குடமுழுக்கு செய்வது தானே சரியாக இருக்கும் அப்பொழுதுதான் எங்களுக்கு மன அமைதி தரும் ...

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  ரா. பாலாஜி ஆள் கண்ட சமுத்திரம் மோடியை டாடி என்பார், இன்று ரஜினிக்கு சாமரம், நாளைக்கு கமலுக்கு ஆலவட்டம் வீசுவார் இன்றும் பெருமாள் கோயில்களில் சேவா காலம் தமிழ் ஆகமத்துக்குரிய சம்ஸ்கிருத வேத பாகங்களுடன் தமிழ் பாசுரங்களுடன்தான் நடக்கிறது. எதையும் தள்ளவில்லை

 • Siva Prakasam - Chennai,இந்தியா

  கோவிலில் குடமுழுக்கு செய்வது, மன அமைதிக்காகத் தானே தவிர, மொழிகளை போற்றுவதற்காக அல்ல சாமி கும்பிடவரும் மக்களின் மன அமைதிக்காகவா அல்லது அர்ச்சகர்களின் மன அமைதிக்காகவா என சொல்லாமல் நழுவி விட்டீர்கள் என டவுட்டே இல்லாமல் தெரியுது. அதுசரி குடமுழுக்கு செய்வது தீட்டு கழியத்தான்னு சொன்னது பொய்யோ ?

  • karutthu - nainital,இந்தியா

   விவரமாக பதிலளிப்பான்

  • Raja Chockalingam - Madurai,இந்தியா

   உங்க அறிவுக்கு எட்டியதை சொல்கிறீர்கள்

Advertisement