Advertisement

ஆஹா... திருப்பூர் போல் வருமா! வங்கதேச பின்னலாடை துறை ரொம்ப மோசம்

Share
திருப்பூர்,:''வங்கதேச பின்னலாடைத்துறை மோசம்... திருப்பூர், இத்துறையில் சிறப்பிடம் வகிக்கிறது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், திருப்பூரின் சிறப்புகளை வெளிநாட்டு வர்த்தகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கவேண்டும்'' என்று, வங்கதேசம் சென்று திரும்பிய, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கூறினார்.வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த 14ல் துவங்கி 16ம் தேதி வரை நடந்த, 'பாலினப் பாகுபாடு களைதல்' குறித்த சர்வதேச கருத்தரங்கில், பல்வேறு நாட்டினர் பங்கேற்றனர்.
பெங்களூரு, திருச்சி மற்றும் திருப்பூரில் இருந்து, தொழிற்சங்க பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் சென்றிருந்தனர்.இதில் பங்கேற்ற, திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள்:கடந்த 2013ல், வங்கதேசம், ராணா பிளாசா வணிக வளாக கட்டடம் இடிந்து, ஆயிரத்து 134 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டில் நடந்த மற்றொரு தீ விபத்திலும், ஏராளமானோர் பலியாயினர். இச்சம்பவங்களுக்குப் பிறகும் அந்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், எந்த ஒரு கட்டட விதிமுறைகளையும், பின்பற்றுவது இல்லை. சாதாரண வணிக வளாகத்திலும், பாதுகாப்பற்ற கட்டடங்களிலும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களை இயக்குகின்றனர்.
திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஐ.எஸ்.ஐ., ஐ.எஸ்.ஓ., உள்ளிட்ட தரச்சான்றுகள் பெற்றிருக்கின்றன. வங்கதேசத்திலோ, பத்துக்கும் குறைவான நிறுவனங்களே இத்தகைய தரச்சான்றுகள் பெற்றிருக்கின்றன.திருப்பூரை ஒப்பிடும்போது, எல்லாவகையிலும் வங்கதேச பின்னலாடை துறை மோசமான நிலையில் உள்ளது.
தொழிலாளர் நலன் சார்ந்த விதிகளை பின்பற்றுவது; சாயக்கழிவை முழுமையாக சுத்திகரித்து, இயற்கை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது; பாதுகாப்பான கட்டடங்கள்; ஆண் - பெண் தொழிலாளரை சமமாக நடத்துவது என அனைத்திலும், திருப்பூரே சிறப்பிடம்வகிக்கிறது.ஆனாலும் கூட, வெளிநாட்டு வர்த்தகர்கள், திருப்பூருக்கு ஆர்டர் வழங்க தயங்குகின்றனர்; நாளுக்குநாள் கட்டுப்பாடுகளை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். விலை குறைவாக ஆடை தயாரித்து பெறலாம் என்கிற ஒரே காரணத்துக்காக, எல்லாவகையிலும் மோசமான நிலையில் உள்ள வங்கதேசத்துக்கு வர்த்தகர்கள் ஆர்டர்களை வாரி வழங்குகின்றனர்.
லாபம் ஈட்டுவதற்காக, வர்த்தகர்கள் வழங்கும் ஆர்டர்களை, வர்த்தக முகமை நிறுவனங்கள், குறைந்த விலைக்கு ஆடை தயாரிக்கும் வங்கதேச நிறுவனங்களுக்கு திருப்பிவிடுகின்றனர்; இந்த நிலை மாறவேண்டும்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், திருப்பூரின் சிறப்புகளை வெளிநாட்டு வர்த்தகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கவேண்டும். அதேபோல், நடுநிலை தன்னார்வலர்கள், வங்கதேசத்தின் தொழிலாளர் நிலை, சுற்றுச்சூழல் மாசு, பாதுகாப்பின்மையை உலக அரங்கில் உரக்கச் சொல்லவேண்டும்.
வர்த்தக மதிப்பில் மட்டும் நம்மைவிட உயர்ந்துநிற்கும் வங்கதேசத்தைப்பார்த்து, இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.'நிறுவனத்தில் அத்துமீறல்கள்'அவர் மேலும், கூறியதாவது:சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, வங்கதேசத்தில் ஐந்து நாட்கள் முகாமிட்டிருந்தேன். டாக்காவிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், அசுல்யா என்கிற இடம் உள்ளது; பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த நகரம். அசுல்யா நகருக்கு சென்று, பனியன் நிறுவன பெண் தொழிலாளிகளிடம் பேசினேன்.அங்குள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களில், பெண்கள் மீதான அத்துமீறல்கள் அதிகம் நடக்கின்றன; குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்துகின்றனர். சம்பளம், பதவி உயர்வு வழங்குவதில் பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
பெண்கள் வேலைக்கு சேரும்போது, கர்ப்பமாக இல்லை என உறுதி அளிக்ககோருகின்றனராம். அதிக விடுமுறை எடுப்பர்; உற்பத்தி வேகம் பாதிக்கும் என்பதால், கர்ப்பிணிகளை பணியில் சேர்ப்பதே இல்லை.சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர் கலப்பு, தோல் கழிவுகளால், டாக்காவில் உள்ள நதிகளெல்லாம், பாழ்பட்டு கிடக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்ததைவிட, தற்போது வங்கதேசத்தில் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்துள்ளது.வங்கதேச பத்திரிகையொன்றில், ஓர் அதிர்ச்சி செய்தி வெளியாகியிருந்தது. வாடகை தர தாமதமானதால், தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த, நான்குபேர், பெண்ணை பலாத்காரம் செய்து, நகைகளை திருடி சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement