Advertisement

நொய்யல் தூர்வார ரூ.230 கோடி.. ஏப்பம் விடாமல் இருந்தால் சரி!

Share
பேரூர்:நொய்யல் ஆற்றை துார்வார அறிவிக்கப்பட்டுள்ள, ரூ.230 கோடியை லஞ்ச, லாவண்யங்களுக்கு இடமளிக்காமல், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, நிதியை சூழல் ஆர்வலர்களிடம் ஒப்படைக்காமல், விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு, அரசே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் வழியே, 151 கி.மீ., பயணித்து, காவிரியில் கலக்கிறது. நொய்யல் பயணிக்கும் வழியெங்கும், மழைநீர் வடிகால் வழியே சாக்கடை கழிவுநீர், சாயக்கழிவு நீர் கலக்கிறது.இத்துடன், ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல் உள்ளிட்டவற்றால் வழித்தடங்கள் மாயமாகி, கனமழை காலங்களில் மட்டுமே தென்படக்கூடிய ஆறாக மாறி விட்டது.ஜீவ நதியாக விளங்கிய நொய்யலை மீட்டெடுக்க, அரசு ரூ.230 கோடி ஒதுக்கியுள்ளது. இது, விவசாயிகள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே சமயம், நிதி முறையாக பயன்படுத்தப்படுமா என்ற அச்சமும், அவர்களிடம் எழுந்துள்ளது.விவசாயிகள் சிலரின் ஆக்கப்பூர்வ கருத்துக்கள் இங்கே...!
சும்மா துார்வாருவது வேஸ்ட்!நொய்யலை துார்வாரும் முன், 500 மீ.,க்கு, ஒன்று வீதம், பழைய நொய்யலின் அகலத்துக்கு தடுப்பு சுவர் கட்டினால், நொய்யல் பழைய நிலைக்கு திரும்பும். வெறுமனே துார்வாருவது வீண் செலவு. மத்திய அரசு உத்தரவின்படி, தன்னார்வலர்கள், சூழல் ஆர்வலர்கள் என, கூறிக் கொண்டு வருவோரை நிராகரித்து, அந்தந்த பகுதி விவசாயிகள் ஆதரவுடன், திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அப்போது தான், லஞ்ச, லாவண்யம் இல்லாமல், நிதி முறையாக பயன்படுத்தப்படும்.-அர்ஜூனன், 65 விவசாயி, நல்லுார் வயல்.தடுப்புச்சுவர் கட்டணும்!நொய்யல் மட்டுமல்ல, அதன் முக்கிய நீராதாரமான ஓடைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் மீட்டால் மட்டுமே, நொய்யல் ஜீவ நதியாக மாறும். 230 கோடி ரூபாயில், செடி கொடிகளை அகற்றி விட்டு சென்றால், வரும் காலங்களில் பழைய கதையே தொடரும். நொய்யலின் குறுக்கே, தடுப்புச்சுவர் கட்டினால், மணல் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.- ஞானவேல், 57விவசாயி, சந்தேகவுண்டன்பாளையம்.கர்நாடகாவை பார்த்து படிங்க!கர்நாடக ஆறுகளில் மழைநீர் அதிகரிக்கும் போது, 'பம்ப்' செய்து குளம், குட்டைகளில் தேக்குகின்றனர். நீரை விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். கழிவுநீரையும் சுத்திகரித்து, விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். இங்கு, அது போன்று இல்லாததால், மழைநீர் கடலில் வீணாகிறது; சாக்கடை நீர் நொய்யலில் கலக்கிறது. இதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.-பாப்புசாமி, 49விவசாயி, மேற்கு சித்திரைச்சாவடி குப்பை கொட்டுவோரை 'தட்டணும்'நொய்யல் கரையோரங்களில், பல நுாறு ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலம்ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அதை மீட்டு, குட்டைகள் அமைத்து, நொய்யலில் நீர் பெருக்கெடுக்கும் போது, 'பம்ப்' செய்து நிரப்பினால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். நொய்யலில் குப்பை கொட்டினால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- துரைசாமி, 57 விவசாயி, தொண்டாமுத்துார்.முதலில் ஆக்கிரமிப்பை அகற்றணும்!நம் முன்னோர், நொய்யலை உயிராக கருதினர். நாம், நம்முடைய சுய லாபத்துக்காக ஆக்கிரமித்துக் கொண்டோம். துார் வாரும் முன், நில அளவை செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவுக்கும், தடுப்பு சுவர் அமைத்து, 2 மீ.,க்கு உயர்த்த வேண்டும். கரைகளில், பனை மற்றும் பால் தரக்கூடிய மர விதைகளை நடவு செய்தால், புது மேகங்கள் உருவாகி, மழை பொழியும்.- லோகநாதன், 52 விவசாயி, பூலுவப்பட்டி கழிவு கலப்பதை தடுக்கணும்!மழைநீர் வடிகால் வழியே சாயம், சாக்கடை கழிவுநீர் கலக்காத வகையில், உள்ளாட்சி அமைப்பு சார்பில், 'சோக்பெல்ட்' அமைக்க வேண்டும். நொய்யல் பயணிக்கும் வழிகளில் வசிக்கும், விவசாயிகளின் கருத்தை கேட்டு, திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கரைகளில் உள்ள குப்பை கிடங்குகளை அகற்றி, வருங்கால சந்ததிக்கு நன்னீர் ஓடும், நொய்யலை விட்டு செல்ல வேண்டும்.-ஜெகநாதன், 53 விவசாயி, சித்திரைச்சாவடி மதகுகள் அமைக்க வேண்டும்!
வனங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, பயனுள்ள மரக்கன்றுகளை நட வேண்டும். நொய்யலுக்கு வரும் பள்ளவாரிகளில், 'செக் டேம்' அமைத்தால், அந்தந்த பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயரும். நொய்யலில் தடுப்புச்சுவர் அமைத்து, மதகுகள் அமைக்க வேண்டும். கடந்த ஆண்டு பெய்த மழையில், 1.50 லட்சம் கனஅடி நீர், கடலில் வீணாகியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.-விஸ்வநாதன், 52 விவசாயி, தென்னம்மநல்லுார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement