Advertisement

எதிர்பார்ப்பு! மலேரியா இல்லாத புதுச்சேரி... சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம்

Share
புதுச்சேரி : புதுச்சேரியை மலேரியா இல்லாத யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.


கொசுக்கள் மூலமாக பரவுகின்ற மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா, பைலேரியா உள்ளிட்ட நோய்களால் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில், புதுச்சேரியும் விதி விலக்கல்ல.சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் விழிப்புணர்வு பிரசாரமும் முடுக்கி விடப்படுகிறது. இருந்தபோதும், மக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொசுக்கள் மூலமாக நோய்கள் பரவுவது தொடர்கதையாக உள்ளது.


புதுச்சேரி சுகாதாரத் துறையின் தொடர் முயற்சியால், பைலேரியா (யானைக்கால்) பரவுவது கட்டுக்குள் வந்துள்ளது. பைலேரியா இல்லாத மாநிலமாக புதுச்சேரி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதியை, கடந்த 2019ம் ஆண்டில் புதுச்சேரி பெற்று விட்டது.இந்நிலையில், மலேரியாவும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மலேரியாவால் சிலர் பாதிக்கப்பட்டு இருந்தாலும், உள்ளூரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலமாக ஏற்படும் மலேரியா பாதிப்பே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.



மலேரியா தாக்கம் உள்ள பகுதிகளுக்கு சென்று நோயை தொற்றி வருபவர்கள், மலேரியா பாதிப்பில்லாத பகுதியாக அறிவிக்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.கடந்த 2018ம் ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தில் 54 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். இதில், 11 பேர் மட்டுமே புதுச்சேரியில் பாதிக்கப்பட்டனர்; மற்றவர்கள் வெளியூர்களுக்கு சென்று மலேரியாவை தொற்றி வந்தனர்.அதுபோல, கடந்த 2019ம் ஆண்டில், புதுச்சேரி மாநிலத்தில் 20 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். 18 பேர் மற்ற மாநிலங்களுக்கு சென்றதில் மலேரியா காய்ச்சலை தொற்றி வந்தனர்.புதுச்சேரி மாநிலத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர் மட்டுமே. அதாவது, புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், காரைக்காலை சேர்ந்த ஒருவருக்கும் மலேரியா பாதிப்பு ஏற்பட்டது.


மாகி, ஏனாம் பகுதிகளில் யாரும் பாதிக்கப்படவில்லை.இதுபோன்ற சூழ்நிலையில், மலேரியா இல்லாத புதுச்சேரியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கான பணிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.வரும் 2030ம் ஆண்டில், 'மலேரியா இல்லாத உலகம்' என்ற இலக்கை எட்டுவதற்காக உலக சுகாதார நிறுவனம் பணியாற்றி வருவது குறிப்பிடத் தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement