Advertisement

கை கொடுத்தது! படுகையணையில் தேக்கியுள்ள தண்ணீர்... கடலூருக்கு கூடுதல் குடிநீர் எடுக்க வாய்ப்பு

கடலுார் : தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ள படுகையணை நிரம்பி கை கொடுத்ததால், கடலுார் நகருக்கு கூடுதல் தண்ணீர் எடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. இதனால் தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அரசும் தண்ணீர் சேமிப்பிற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் நிலத்தடிநீரை பாதுகாக்க மழைநீரை சேமிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே இரு மாநில எல்லையில் ஓடும் தென்பெண்ணையாற்றில் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே கடந்த 2009ம் ஆண்டு படுகையணை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது. ஆனால், பாலத்தின் ஸ்திரத்தன்மை குறைவாக இருந்ததால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் சேமிக்க முடிந்தது. மற்ற ஆண்டுகளில் ஏதாவது ஒரு காரணத்தால் தண்ணீர் வெளியேறியது. இதனால் எந்த பயனும் ஏற்படாமல் இருந்தது.இந்நிலையில், படுகையணையை மீண்டும் சீரமைக்க புதுச்சேரி அரசு கடந்த ஆண்டு 4.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணியை துவக்கியது.

இதில் தரை, பக்கவாட்டில் தடுப்பு சுவர், தண்ணீர் விழும் இடத்தில் தடிமனான கான்கிரீட் சிலாப்புகள் போன்றவை போடப்பட்டது. மழைக்காலத்திற்கு முன், இந்த பணிகள் முடிக்கப்பட்டன.இதன் விளைவாக இந்த ஆண்டு பெய்த மழை நீர் முழு அளவில் சேகரிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக படுகையணையில் இருந்து தண்ணீர் தரைப்பாலத்தின் மேலாக வழிந்தோடியது. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் சாவடி தலைமை தண்ணீர் நிலையத்தில் இருந்து எடுக்க கூடிய தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு மேனிலை தொட்டிக்கு மட்டுமே நிரப்பப்பட்டு வந்த குடிநீர், தற்போது அண்ணாநகர், கே.கே.நகர், பத்மாவதி நகர் உள்ளிட்ட 4 மேனிலை தொட்டிக்கு கூடுதல் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவந்திபுரம் ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் தண்ணீர் எடுப்பது குறைக்கப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement