Advertisement

டவுட் தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இலங்கை ராணுவத்திற்கு, 350 கோடி ரூபாயை வழங்க, மத்திய அரசு முன்வந்துள்ளது. ஈழத்தமிழர் படுகொலை விவகாரத்தில், இலங்கை அரசு குற்றவாளி. அந்த நாட்டிற்கு, இந்தியா நிதியுதவி வழங்குவது, அந்நாடு செய்த போர்க்குற்றத்திற்கு அளிக்கும் வெகுமதியாகவே கருதப்படும். எனவே, இலங்கைக்கு எந்த நிதியுதவியும் வழங்கக் கூடாது.


'டவுட்' தனபாலு: இதெல்லாம் ராஜதந்திரம்; தமிழக அரசியல் இல்லை. இந்தியா நிதியுதவி வழங்காவிட்டால், பல ஆயிரம் கோடியை கொட்டிக் கொடுக்க சீனா தயாராக உள்ளது; அப்படியே, ஏவுகணை தளத்தையும் அங்கே அமைத்து விடும். ஏதாவது பிரச்னை என்றால், அடுத்த, 20 கி.மீ.,யில் இருக்கும் நம் கதி என்ன என, நீங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. எல்லா விவகாரத்திலும் அரசியல்ரீதியாக பார்ப்பதே நம் கட்சியினர் செயலாகி விட்டது என்பதை, உங்களின் அறிக்கை, 'டவுட்' இல்லாமல் புரிய வைக்கிறது.



துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு: தமிழக முதல்வர், இ.பி.எஸ்., ஒரு விவசாயி போல, வயல் வெளியில் இறங்கி, வேலை பார்த்ததை, 'டிவி'யில் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். 'நான் ஒரு விவசாயி' என கூறி, தான் வந்த வழியை பெருமையாக பேசும் முதல்வருக்கு பாராட்டுகள்.



'டவுட்' தனபாலு: தான் ஒரு விவசாயி என்பதை துவக்கம் முதலே கூறி வருகிறார் முதல்வர் இ.பி.எஸ்., ஆனால், சில கட்சிகளின் தலைவர்கள், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதோடு சரி. அதன் பிறகு, மறந்தும் வயல் வெளிகளில் கால் வைத்து விட மாட்டார்கள். உங்களின் பாராட்டு, தமிழகத்தின் அந்த தலைவர்களுக்கு, 'இனிமேலாவது வயலில் இறங்க வேண்டும்' என்பதை உணர்த்தும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா: திராவிடர் கழகத்தின், ஈ.வெ.ரா., பற்றி, நடிகர் ரஜினிகாந்த் உண்மையை கூறி இருக்கிறார். ஹிந்து மதத்திற்கு எதிராகவே, ஈ.வெ.ரா., செயல்பட்டார். அதில் ஒன்றிரண்டை தான், ரஜினி கூறி இருந்தார். உண்மையை கூறியதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.


'டவுட்' தனபாலு: ஈ.வெ.ரா.,வின் பிற பேச்சுகள், அநாகரிக செயல்பாடுகள் பற்றியும் ரஜினி, அந்த மேடையில் பட்டியலிட்டு, விளக்கமாக பேசியிருந்தால், ரஜினியின் பேச்சால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், உண்மையை புரிந்து கொண்டிருப்பர். இப்படி, அரையும், குறையுமாக பேசியதால் தானோ என்னவோ, தி.க.,வினரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அவர் சற்று ஆதாரங்களை ஒழுங்காகச் சேகரித்துப் பேசியிருந்தால் இப்படி ‘ஆப்பு பிடுங்கிய’ மாதிரி எல்லார் வாயிலும் விழுந்திருக்க மாட்டார் கொஞ்சம் ஆர்வக்கோளாறு, அவ்வளவுதான்

Advertisement