Advertisement

தரமான படங்களுக்கு பச்சை கொடி காட்டணும்!

என்.சாணக்கியன்,

மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்று, 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி...' என்ற பாடல் வரிகளில், 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' என்ற பாடல் வரியில், 'அண்ணா' என்ற வார்த்தை, 'சென்சார் போர்டு'ல் ஆட்சேபிக்கப் பட்டது. அதற்கு பதிலாக, திரு.வி.க., என்ற வரி சேர்க்கப்பட்டது.பாடல் வரிகளில், 'உதயசூரியன்' என்ற வார்த்தையே ஆட்சேபனைக்குரியது என, தடை செய்யப்பட்டது.

கதாநாயகியும், கதாநாயகனும் உதட்டோடு உதட்டை வைத்து, முத்தம் கொடுக்கும் காட்சிகள், வெட்டி எறியப்பட்டன; அரசை தாக்கி பேசப்படும் வசனங்கள் எல்லாம் நீக்கப்பட்டன.இன்று, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும், 'சென்சார் போர்டு' தம் கடமையை சரியாக செய்து, திரைப்படங்களை தணிக்கை செய்கிறதா? என்பது பெரிய கேள்விக்குறியாகி விட்டது.அந்த காலத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாம் கடும் தணிக்கைக்கு பின், வெளி வந்தன. இயக்குனர்கள் பீம்சிங், ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன் போன்றோரின் இயக்கத்தில் வெளியான படங்கள் தரமாக இருந்தன; குடும்பத்தோடு திரைப்படங்களை மக்கள் பார்த்து ரசித்தனர்.அந்த காலத்திலும், கே.பாலசந்தர் எடுத்த படங்களில் அபத்தமான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. ஒரே சமயத்தில் அம்மாவையும், மகளையும், 'ஹீரோ' காதலிப்பதாக இவரால் தான் காட்ட முடியும். 45 வயது பெண்ணை, 25 வயது வாலிபன் காதலிப்பதாக, இந்த மகானுபாவர் காட்டியது பெரிய அபத்தம் இல்லையா?எம்.ஜி.ஆர்., தன் படங்களில் திராவிடக் கொள்கைகளை பரப்பினார். இவர் நடித்த படங்கள் தான், 'சென்சார் போர்டின்' கடும் தணிக்கைக்கு பெரும்பாலும் உட்பட்டன.


இப்போது, வெளிவரும் படங்களில் வன்முறை காட்சிகளில் ரத்தம் ஆறாக ஓடுகிறது. பேய் படங்கள் நிறைய வெளியாகின்றன. பாடல்களில் இசை நயம் அழிந்து, ஓசை தான் அதிகம் ஒலிக்கிறது. இப்போது, 'பஞ்ச் டயலாக்' என்ற பெயரில், அரசை தாக்கி, 'ஹீரோ' வசனம் பேசுவது, தாராளமாக அனுமதிக்கப் படுகிறது. இரட்டை அர்த்தத்தில் பேசப்படும் வசனங்கள் தாராளமாக இடம் பெறுகின்றன.இதை எல்லாம், 'சென்சார் போர்டு' எப்படி வெட்டாமல் விட்டது என்பது தெரியவில்லை.

இதை திரைப்பட தணிக்கை குழு கண்டித்து, ஆட்சேபனை எழுப்பவில்லை. தரக்குறைவான படங்களை பார்க்கும் வாலிபர்கள் கூட்டம், கடிவாளம் இல்லா குதிரை தறி கெட்டு ஓடுவது போல, தவறான வழிக்கு சென்று விடுகின்றன.இனியாவது, தரமான படங்களுக்கு மட்டும் சென்சார் போர்டு பச்சை கொடி காட்ட வேண்டும்!

படிப்பை மட்டும்மாணவர்கள்கவனிக்கலாமே!
சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கல்விக் கூடத்தில் படிப்பு முடித்து, தங்கள் குழந்தைகள் வேலைக்கு செல்வர் என்ற நினைப்பில், பெற்றோர் கடன்களை வாங்குகின்றனர். தங்கள், காடு கரைகளை விற்று படிக்க வைக்கின்றனர்.அப்படி பாடுபட்ட உருவாக்கிய மாணவ சமுதாயம், இன்று வழக்கு, கோர்ட் என, அலைவது, கவலைப்பட கூடியது.

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், மாணவ சமுதாயத்தை பகடைக் காய்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்த கூடாது.சுதந்திர இந்தியாவில், ஒவ்வொரு தனி நபருக்கும், எல்லா விதத்திலும், சுதந்திரத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. கல்வி பயிலும் மாணவ சமுதாயம், எதற்கெடுத்தாலும் போராட நினைப்பதும், வகுப்புகளை புறக்கணித்து, அரசியல்வாதிகளுக்கு இணையாக தங்களை நினைப்பதும் தவறான செயல்.அதற்காக, மாணவ சமுதாயம் வெறும் கல்வி பயிலும் இயந்திரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய, சமூக வலை தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்; கையெழுத்து இயக்கங்கள் வாயிலாக, தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம்.இனி, வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்கள் நடத்தினால், தேர்வு எழுத அனுமதி மறுப்பு போன்ற விஷயங்கள் வந்தால் தான், இதற்கு விடை கிடைக்கும்.ஆதாயம் தேட, கல்லுாரிக்குள் நுழைந்து, மாணவர்களிடையே ஆவேசமாக பேசுகின்றனர், சில அரசியல்வாதிகள். இதில், உசுப்பு ஏறிய மாணவர்களை தங்கள் பக்கம் இழுக்கின்றனர்.


அவர்களை போராட்டங்களில் ஈடுபட செய்கின்றனர். அது தவிர, ஓட்டுச்சாவடிகளில் மாணவர்களை முகவர்களாக்கியும், அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வீணடிக்கின்றனர். எதிர்கால வாழ்க்கையை, கல்விக்காக மட்டும் செலவழித்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் வழியில், மாணவ சமுதாயம் செல்ல வேண்டும் என்பதே, பெற்றோரின் விருப்பம்!

பக்தர்கள் யாருக்கும்குற்ற உணர்வேகிடையாது!

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் உள்ள ஒரு சில தனியார் நடத்தும் கோவில்களை தவிர, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும், ஹிந்து கோவில்களில் பெரும்பாலும் ஊழல் நிரம்பியே காணப்படுகிறது.இதற்கு புகழ் பெற்ற பாடல் ஸ்தலமான, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலே எடுத்துக்காட்டு.


கி.பி., எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலின் சுற்றுப்புற சூழ்நிலை மிகவும் கேவலமாக உள்ளது. குப்பை தொட்டிகள் நிரம்பி, தேரடி வீதியிலிருந்து, கோவில் வரை, சாலைகளில் குப்பை சிதறிக் கிடக்கிறது.கோவிலுக்குச் செல்லும் வழியிலுள்ள, சிங்கராச்சாரி தெரு மற்றும், டி.பி., கோவில் தெருவிலுள்ள நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அங்குள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பால், பாதசாரிகள் தெருவில் இறங்கி நடக்க வேண்டி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளாலும், தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளாலும், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

கோவிலுக்கு வெளியே இந்த நிலையென்றால், உள்ளே நடைபெறும், சில நிர்வாக சீர்கேடுக ளால், பக்தர்கள் பலர் மனம் நொந்து போகின்றனர்.பார்த்தசாரதி கோவில் பிரசாதம் விற்கும் கடைகளை, அரசியல் கட்சியைச் சேர்ந்தோர் மட்டுமே, பல ஆண்டுகளாக ஏலம் எடுத்து நடத்தி வருகின்றனர். நிறைய வருமானம் தரும் இக்கடைகளை, வெளியாள் யாரும் ஏலம் எடுத்து, நடத்தி விட முடியாது.

இக்கடையில் விற்கப்படும் பலவித பிரசாதங்களை, வெளியே தயார் செய்து, கோவிலில், 'பிரசாதம்' என, விற்று பக்தர்களை ஏமாற்றுகின்றனர்; அறநிலையத் துறையினரும், இதற்கு துணை போகின்றனர்.கோவிலுக்கு வெளியே வைக்க வேண்டிய குப்பை கூடையை, உள்ளே வைத்திருப்பதால், பக்தர்கள் சிலர் எச்சில் துப்புகின்றனர். அதுமட்டுமின்றி, சாப்பிட்ட பின், காலி தொண்ணை மற்றும் இலைகளை அதனுள் போடுகின்றனர். பெருமாள் வீற்றிருக்கும் கோவிலில், இப்படியெல்லாம் அசுத்தம் செய்கிறோமே என்ற, குற்ற உணர்வே யாருக்கும் கிடையாது!
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.நாராயணன் திருவல்லிகேனி பார்த்தசாரதி கோயிலின் நிலைக்குறித்து கூறினார்கள்.அறநிலை கட்டுப்பாடில் இருக்கும் கோவிலின் வரவு செலவு குறித்த விவரங்களை பொது பக்தர்களுக்கு தெரிவிப்பது கிடையாது.நீதி மன்றங்கள் பல முறை தெரிவித்தாலும் அரசியல்வாதிகளின் தைரியத்தில் எதுவும் சரியாக வெளிவருவது இல்லை.சில சின்ன கோவில்கள் வசூல் செய்தவற்றை தெளிவாக டீ குடித்தது முதல் ஊர்வலம் செலவு வரை விவரம் தெரிவித்து அடுத்த முறை விழா நடத்த நோட்டிஸ் அடிக்கும்போது செலவு விபரத்தினை காண்பிக்கும் பழக்கம் வைத்துள்ளனர்.ஆனால் இவர்கள் நடத்துவது.......அவர்கள் வளர்ச்சியை முக்கிய நிலையாக எடுத்து செய்வார்கள்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    படிக்க செல்லும் மாணவர்களைக் கெடுத்த்துக் குட்டிச்சுவராக்க அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் என்றால், சக மாணவர்களே அனாவசிய பிரசனைகளிலிருந்து ஒதுங்கி இருக்கும் மாணவர்களை வெறுப்பேற்றியும், வன்முறையிலும் போராட்டங்களில் பங்கேற்க வைத்துவிடுகின்றனர் பெற்றவர்கள் பிள்ளைகளால் என்ன புகார் வருமோ, என்று காவல் நிலையம், கோர்ட் என்று அலைய வேண்டுமோ என்று பதற்றத்திலேயே இருக்க வேண்டியுள்ளது

Advertisement