Advertisement

கவுண்டமணி, ஜோக்கை நினைவுபடுத்திய கட்சிகள்!

''முன்ஜாமின் பாதுகாப்புடன், யானை வேட்டை நடக்குதாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''என்ன ஓய் சொல்றீர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''கோவை, ஈரோடு மாவட்டங்கள்ள, காட்டு யானைகள வேட்டையாடுறது அதிகமாயிடுச்சுங்க... இதுல, 19 யானைகள் இறந்தது சம்பந்தமா, நீதிமன்றத்துல வழக்கு நடக்குதுங்க...''சம்பந்தப்பட்டவங்க, முன்ஜாமின் வாங்கிட்டு நிம்மதியா இருக்காங்க... இப்ப மீண்டும், யானை வேட்டையில அவங்க இறங்கியிருக்காங்க... அரசியல்வாதிகள் பின்புலம் இருக்குறதால, இந்த கும்பல் மேல கை வைக்க, வனத்துறை அதிகாரிங்க பயப்படுறாங்க...''மத்திய அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்தா தான், யானைகளை காப்பாத்த முடியுமுன்னு பேசிக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''சான்றிதழுக்கு, 5 லட்சம் ரூபாய் கேக்குறாங்க பா...'' என, அடுத்த விஷயத்திற்கு மாறினார், அன்வர்பாய்.''என்ன ஏதுன்னு விவரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''சென்னை பள்ளிக்கரணையில, முறையா அனுமதி வாங்கி ஒருத்தர், மூன்று மாடி கட்டடம் கட்டுறாருங்க... இதுக்காக, சி.எம்.டி.ஏ., அமலாக்க பிரிவுல, பணி நிறைவு சான்றிதழ் வாங்கணும் பா...''இதுக்காக, சி.எம்.டி.ஏ., அமலாக்க பிரிவு திட்ட உதவியாளர் ஒருத்தர், கட்டட உரிமையாளருக்கு கிட்ட, 5 லட்ச ரூபாய் கேட்டுருக்காரு... அவரு, 'ஷாக்' ஆகிட்டாரு... அமைச்சர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பெயர்கள சொல்லி, பணம் கேட்குறராம்... இதுபத்தி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''பேசாம இருந்திருக்கலாம் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''என்ன வே, புதிர் போடுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''உள்ளாட்சித் தேர்தல்ல, தி.மு.க., கூட்டணியில, காங்கிரசுக்கு போதுமான இடங்கள் ஒதுக்கலை... இது, கூட்டணி தர்மம் இல்லைன்னு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும், சட்டசபை காங்கிரஸ் தலைவர், கே.ஆர்.ராமசாமியும் அறிக்கை விட்டா ஓய்...''எது டா சாக்குன்னு காத்துண்டு இருந்த, தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்கள், 'காங்கிரசை கழற்றி விட்டுடுங்கோ'ன்னு, ஸ்டாலினை, 'கம்பெல்' பண்ணிருக்கா ஓய்... ''தமிழகத்துல, தி.மு.க.,வை விட்டா, காங்கிரசுக்கு வேற வழியே இல்லை... அத, இதச் சொல்லி மிரட்டி, 'சீட்' வாங்கவும் முடியாது... தனிச்சு போட்டியிட்டா, 'டிபாசிட்' கிடைக்காது... இந்த நிலைமையில, இருக்கற ஒரே கட்சியையும் முறைச்சுக்கலாமா ஓய்...''அறிக்கை விட்டதுக்காக, காங்., மேலிடம், தமிழக தலைவர் மேல கோபப் பட்டுருக்கு... இதனால அழகிரி, காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, ஆரணி எம்.பி., விஷ்ணுபிரசாத் ஆகியோர், நேத்து, அறிவாலயத்துக்கு போய், ஸ்டாலினை சந்திச்சு, சமாதானம் பேசியிருக்கா ஓய்...''ஸ்டாலின், மேலும் கீழும் தலையாட்டி, அவங்களை வழியனுப்பிருக்கார்... வெளில வந்த அழகிரி, 'எங்களுக்குள்ள எந்த பிரச்னையும் இல்லை'ன்னு பேட்டி கொடுத்துட்டார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.'அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா...'' என, கவுண்டமணியின், 'டயலாகை' கூறியபடி, இடத்தை காலி செய்தார், அன்வர்பாய்.நண்பர்களும் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

முதல்வரின் கருணைக்கு காத்திருக்கும் டாக்டர்கள்!
''பாரட்டு விழாவுக்கு யாருமே வராம, தோழர்கள் நொந்து போயிட்டாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''கம்யூனிஸ்ட் கட்சி தகவலாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''ஆமாம்... திருப்பூர் லோக்சபா தொகுதியில ஜெயிச்ச, இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயனுக்கு, சமீபத்துல பாராட்டு விழா நடந்துச்சு... இதுல, தி.க., தலைவர் வீரமணி கலந்துக்கிட்டாரு பா...''விழாவுக்கு, தி.மு.க., - காங்., கட்சியினர் அதிகமா வருவாங்கன்னு, கம்யூ.,க்கள் காத்திருந்தாங்க... ஆனா, எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரலை பா...''விசாரிச்சதுல, 'அந்த விழாவுல யாரும் கலந்துக்க கூடாது'ன்னு, தி.மு.க.,வினருக்கு மேலிடத்துல இருந்து உத்தரவு வந்தது தெரிஞ்சது... எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராததால, வீரமணியும், 'அப்செட்' ஆகிட்டாரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''மனசுல, பட்சி ஏதோ தகவல் சொல்லுதே...'' என்ற, அண்ணாச்சி, ''கான்ட்ராக்டரே, சேர்மன் ஆயிட்டாருல்லா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.''எந்த ஊருல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றிய சேர்மனா, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெகதீசன் ஜெயிச்சிருக்காரு... இவர், கட்சியில, ஜெ., பேரவை மாவட்ட இணைச் செயலரா இருக்காரு வே...''அவிநாசி ஒன்றியத்துல நடக்குற எல்லா வளர்ச்சி பணிகளையும், இவர் தான் கான்ட்ராக்ட் எடுத்து செஞ்சிட்டு இருந்தாரு... 2011 உள்ளாட்சி தேர்தல்ல, தன் மனைவியை சேர்மன் ஆக்குனாரு வே..''இந்த முறை, இவரது ஒன்றியத்தை, பொதுப் பிரிவுக்கு மாத்திட்டதால, ஜெகதீசனே களம் இறங்கி, ஜெயிச்சு, சேர்மனாகவும் உட்கார்ந்துட்டாரு... 'கான்ட்ராக்ட் எடுத்த இடத்துல இருந்தவர், கொடுக்குற இடத்துக்கு மாறிட்டதால, இனி இவர் வச்சது தான் சட்டம்'னு, அந்தப் பகுதி மக்கள் பேசிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''முதல்வரின் கருணைக்காக காத்துண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சம்பள உயர்வு உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்புல, போன வருஷம் அக்டோபர், நவம்பர்ல, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினாளோல்லியோ... முதல்வர், கோரிக்கையை ஏற்று, போராட்டத்தை டாக்டர்கள் கைவிட்டா ஓய்...''ஆனாலும், போராட்டத்துல ஈடுபட்டதா, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், பெண் டாக்டர்கள், சிறப்பு டாக்டர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள்னு, 100க்கும் மேற்பட்டவங்களை, அதிரடியா இடமாற்றம் பண்ணிட்டா ஓய்...''குடும்பம், குழந்தைகளை தனியா விட்டுட்டு, வேற வேற ஊர்கள்ல வேலை பாக்கறதால, டாக்டர்கள் பலரும் மன உளைச்சல்ல இருக்கா... இதனால, சிகிச்சை பணிகளும் பாதிக்கப்படறது...''அதனால, தங்களை பழைய இடங்களுக்கே மாத்தணும்னு, முதல்வருக்கு டாக்டர்கள் கோரிக்கை வச்சிருக்கா... பொங்கல் பரிசா, இடமாறுதல் கிடைக்கும்னு காத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.நாயர், கல்லாவை நோக்கி நகர, பெரியவர்கள் கிளம்பினர்.தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement