Advertisement

இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்

ராஜ்கோட்: ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான், கோஹ்லி, லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தனர்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த ரிஷாப் பன்டுக்குப் பதில் மணிஷ் பாண்டே இடம் பெற்றார். ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது ரோகித் சர்மா (42) அவுட்டானார். ஷிகர் தவான் ஒருநாள் அரங்கில் 29 வது அரைசதம் எட்டினார். இவர் 96 ரன்னுக்கு அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.


ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன் எடுக்க, கேப்டன் கோஹ்லி 78 ரன்னுக்கு கிளம்பினார். மணிஷ் பாண்டே (2) வந்த வேகத்தில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோகேஷ் ராகுல், 38வது பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 80 ரன்னுக்கு ரன் அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 340 ரன்கள் குவித்தது. ஜடேஜா (20), முகமது ஷமி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.


கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், வார்னர் ஜோடி துவக்கம் தந்தது. வார்னர் (15), மணிஷ் பாண்டேயின் ஒற்றைக் கை 'கேட்சில்' விரைவில் திரும்பினார். பின்ச் (33), சர்ச்சைக்குரிய முறையில் 'ஸ்டம்டு' ஆனார். பின் ஸ்மித், லபுசேன் இணைந்து ஒன்றும், இரண்டுமாக சேர்த்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஸ்மித் 24வது அரைசதம் அடிக்க, லபுசேன் 46 ரன்னுக்கு கிளம்பினார்.
தனது 9வது ஓவரை வீசிய குல்தீப் திருப்பம் தந்தார். 2வது பந்தில் கேரியை (18) அவுட்டாக்கிய இவர், 5வது பந்தில் அபாயகரமான ஸ்மித்தை (98) போல்டாக்க, ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கடைசி 42 பந்தில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 82 ரன்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் 44வது ஓவரை வீசிய ஷமி, டர்னர் (13), கம்மின்சை (0) அடுத்தடுத்த பந்துகளில் போல்டாக்கினார்.


கடைசியில் ஜாம்பா (6) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் 304 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 36 ரன்னில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Meenakshi - Chennai,இந்தியா

    போதும்பா ... இன்னும் ஒரு மேட்ச் இருக்கு.... அதுக்குள்ளயே ஆர்பாட்டமா.....

  • ஜெய் ஸ்ரீ ராம் -

    வாழ்த்துக்கள். மூன்று பேர் அடிபட்டு கொண்டார்களே அடுத்து போட்டி என்ன ஆகுமோ

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    என்ன அசத்தல் ஐயா. போனமுறை இந்தியா கேவலமாக தோல்வி. இன்று போராடி தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு. விளையாட்டில் சகஜம் வெற்றி, தோல்வி.

  • Raja Velu - coimbatore,இந்தியா

    India வின்

  • Nallavan Nallavan - Dhanbad,இந்தியா

    பாராட்டுக்கள் ..........

Advertisement