Advertisement

10 ஆயிரம்! காணும் பொங்கல் கொண்டாட்ட பாதுகாப்பில் போலீசார்.. தயார் நிலையில் ஆம்புலன்ஸ்

Share
சென்னை:காணும் பொங்கலை ஒட்டி, மெரினா கடற்கரை உட்பட, பல்வேறு இடங்களில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு, பல லட்சம் பேர் குடும்பத்துடன் வருகை தருவர்.இவர்களின் பாதுகாப்பிற்காக, 10 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களை, கூடுதல் கமிஷனர்கள், பிரேம் ஆனந்த் சின்ஹா, தினகரன் மற்றும் அருண் ஆகியோர் கண்காணித்து, தேவையான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.
மெரினா கடற்கரையில், இரண்டு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு மையங்களும், அணுகு சாலையில், 11 காவல் உதவி மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.மேலும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன; 140 நீச்சல் தெரிந்த நபர்களும், பாதுகாப்பு பணியில் தயாராக உள்ளனர்.
யாரும் கடல் அலையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 16க்கும் மேற்பட்ட குதிரைகளுடன் குதிரைப்படை வீரர்கள் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய ரோந்து வாகனங்களுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
உழைப்பாளர் சிலை மற்றும் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள, மணற்பரப்பில், 13 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.போலீசாரிடையே, 'வாட்ஸ் ஆப்' குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட, மூன்று ட்ரோன்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 12 இடங்களில், கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும், தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.மேலும், மக்கள் அதிகம் கூடும், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மற்றும் கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement