Advertisement

கல்லூரிகள் நீதிமன்றங்களாகச் செயல்படலாமா

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட வீடியோ காட்சி ஒன்று பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லுாரி மாணவியரின் செயல்பாட்டை பெற்றோர் சந்தேகிக்கும் வகையிலான மனநிலையை அந்த வீடியோ ஏற்படுத்தியது. அதில் அப்படி என்னதான் இருந்தது?தமிழக கடலோர மாவட்டம் ஒன்றில் அமைந்துள்ள கலைக்கல்லுாரியில் படிக்கும் மாணவிகள் சிலர் ஆண் நண்பர்களுடன் மது அருந்தும் காட்சிதான் அது. கல்லுாரி நிர்வாகம் விசாரணை நடத்தி மாணவியரை கல்லுாரியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது. இதுபோல் தென்காசி மாவட்டம் பள்ளி ஒன்றில் சில மாதங்களுக்கு முன் சீருடையுடன் மாணவி, மாணவியர் மது அருந்திய காட்சி உலா வந்தது.இவர்களும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஒழுக்கம்

'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்ற திருவள்ளுரின் வாக்கு மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் வளரும் பருவத்திலிருக்கும் மாணவ, மாணவியர் மது பழக்கத்தை நாடிச் செல்வது பெரும் மனவேதனையை ஏற்படுத்துவதோடு, அதற்கான காரணங்களையும், அதன் பின்விளைவுகளையும் நுட்பத்துடன் ஆய்வு செய்யவேண்டிய தருணம் இது.ஆணும், பெண்ணும் நிகரெனச் சூளுரைத்த பாரதியார், 'புதுமைப்பெண் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், நிமிர்ந்த ஞானச் செருக்கும்' உடையவளாக இருக்கவேண்டுமென விரும்பினார். ஆண்டாண்டு காலமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிர்வாகம், காவல், நீதி, பொருளாதாரம், மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கெடுப்பு ஆணுக்கு நிகராக விளங்க வேண்டுமென்று பாரதியார் கனவு கண்டார். அவரது கனவை நனவாக்கும் வகையில் பல்துறையில் திறமைகொண்ட பெண்கள் பலரை இன்றைய சமுதாயத்தில் காணமுடிகிறது.

பாரதி கண்ட புதுமைப்பெண்

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த சிவகங்கை மாவட்ட பெண் பொறியியல் பட்டதாரி ஒருவர் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்- 1 தேர்வில் மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்தார். தமிழ்நாட்டைச் சார்ந்த நீதிபதி பானுமதி உச்சநீதிமன்றத்தை அலங்கரிக்கும் முதல் பெண் நீதிபதி. தமிழ்நாட்டில் படித்து பட்டம் பெற்ற இந்திரா நுாயி என்ற பெண்மணி உலகளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய நிர்வாகிகளில் ஒருவர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தலைமையேற்று நடத்திவருபவர் டாக்டர் சாந்தா. இவர்கள் பாரதியார் கண்ட புதுமைப்பெண்கள். இப்பட்டியலில் இன்னும் பல புதுமைப்பெண்கள் இடம் பெறுவர்.அதேசமயம் மதியை மயக்கி வாழ்க்கையை சீரழிக்கும் மது அருந்தும் கலாசாரம் நிகழ்காலத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. தன் வாழ்நாள் முழுவதும் மாணவ, மாணவியரை சந்தித்து அவர்களுடன் உரையாடி அவர்களை இந்நாட்டின் நல்ல குடிமக்களாக உருவாக்கும் அரும்பணியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 1998ல் வடிவமைத்த தொலைநோக்கு திட்டமான 'விஷன் 2020'ல் நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வி அனைவருக்கும் வேண்டும் என்றும், அதுதான் இந்தியாவை வளர்ச்சி பாதையில் வழிநடத்திச் செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.2020-ம் ஆண்டை நாம் தொட்டுவிட்டோம். ஆனால் 'கலாம் கண்ட கனவு' ஏன் இன்னும் நனவாகவில்லை?தன் சொந்த விருப்பத்தின் பேரில் கல்லுாரிக்கு வெளியே மாணவிகள் சிலர் மது அருந்திய செயலுக்காக, இந்திய ஜனநாயகத்தை தீர்மானிக்கும் வாக்குரிமைக்கான வயதுடைய அந்த கல்லுாரி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் எத்தகையவை?

பெற்றோரின் நிலை

இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த அந்த மாணவிகளை கல்லுாரி நிர்வாகம் நிரந்தரமாக நீக்கிவிட்டது. அவர்களது கல்விப்பயணம் குறைமாத பிரசவமாக அழிவுற்றது. பிறந்தநாள் விழாவில் வாழ்த்த சென்ற மாணவிகளுக்கு மது விருந்து படைத்து உற்சாக கொண்டாட்டத்தை வீடியோ காட்சியாக பதிவுசெய்து, பின்னர் அதை சமூகஊடகங்கள் மூலம் பொது வெளியில் பகிரப்பட்டதன் பின்னணியில் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி நடந்ததா? என்பது புதிராகவே இருக்கிறது. தன் மகள் படித்து நல்ல வேலையில் சேர்ந்து அவளது குடும்ப வாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொள்வாள் எனக்கருதிய பெற்றோர்களின் நிலை என்ன? அந்த ஒருநாள் சம்பவத்தால் மாணவிகள் மீதான சமூகத்தின் பார்வை எப்படி இருக்கும்? அதிலிருந்து அந்த குடும்பங்கள் எப்படி புத்துயிர் பெறும்?
மாதா, பிதாவுக்கு அடுத்து வளரும் இளம்பருவத்தினரை நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பு உடையவர் குரு. இன்றைய சூழலில் இந்த பொறுப்பை தன்னகத்தே கொண்டவை பள்ளி, கல்லுாரிகள். மாணவ, மாணவியர்களை பாடங்களில் அதிக மதிப்பெண் பெறவைத்து பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு அவர்களை தயார்படுத்தும் நிறுவனங்களாக இன்றைய பள்ளி, கல்லுாரிகள் மாறிவிட்டன. 'நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வி' என்பதிலிருந்து நிகழ்கால கல்விமுறை சற்று சறுக்கிவிட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது.இம்மாதிரியான சூழலுக்கு இன்றைய கல்விமுறை மட்டும்தான் காரணம் என்றுக்கூற முடியாவிட்டாலும், ஆசிரியர்களும், கல்விநிர்வாகமும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதற்கு பல சம்பவங்களை சான்றாக கூறலாம்.பள்ளி, கல்லுாரிகளின் பொறுப்பு சில ஆண்டுகளுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி.,யில் ஒரு மாணவன் விடுதியில் தங்கிப் படித்தான். காலப்போக்கில் ஏற்பட்ட கெட்ட சகவாசத்தினால் அவன் போதை பொருளுக்கு அடிமையானான். அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதையறிந்த அவனது பேராசிரியர் அந்த மாணவனின் தந்தையை வரவழைத்து கொடுத்த ஆலோசனைபடி அந்த மாணவன் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றான். பின்னர் அவனது கல்வியை தொடர்ந்தான். பட்டம் பெற்றான். இச்சம்பவம் உணர்த்துவது என்ன?தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு தண்டனை வழங்கும் நீதிமன்றங்களாக பள்ளி, கல்லுாரிகள் மாறிவிடக்கூடாது. திசைமாறி சென்றவர்களை நல்வழிப்படுத்தி மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக அவர்களை இந்த சமுதாயத்தில் வாழவைக்கும் பொறுப்பு பள்ளி, கல்லுாரிகளுக்கு உண்டு.ஒருவகையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் 'கூல் லிப்' என்றபெயரில் ஒருவகையான போதைப் பொருள் பள்ளி மாணவர்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும், அதுபள்ளியின் சூழலைப் பெருமளவில் பாதிக்க செய்வதாகவும் பெற்றோர்கள் முணுமுணுக்கின்றனர். மது, போதைப் பொருட்களின் ஆதிக்கத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் சிக்காமல் இருந்தாலே எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும் என்பதில் ஐயமில்லை.- பெ. கண்ணப்பன்காவல்துறை முன்னாள் தலைவர்சென்னை. 94890 00111
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement