Advertisement

தென்னையில் பசுந்தாள் ஊடுபயிர்கள்: மண் வளம் பெருக்க கைகொடுக்கும்

Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தென்னை விவசாயிகளிடையே பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.நீண்ட கால பயிரான தென்னை சாகுபடியில், அதிகளவிலான பாசனமும், உரமும் தேவைப்படுகிறது. தென்னை மண்ணின் சத்துக்களை வேர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து விடுவதால், மண் வளத்தை தொடர்ந்து பெருக்குதல் அவசியம்.
ரசாயன உரங்கள் மூலம் மண் வளத்தை மேம்படுத்த முடியாது. அதற்கு, பசுந்தாள் உர சாகுபடி அவசியம். தென்னையில் தக்கை பூண்டு, தட்டை பயறு, சித்தகத்தி, கொளுஞ்சி, சணப்பை உள்ளிட்ட பசுந்தாள் பயிர்கள் சாகுபடி செய்து, சரியான பருவத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் மண் வளத்தை பெருக்க முடியும். நிலத்தில் மடக்கி விடப்படும் பசுந்தாள் பயிர்களை, கண்களுக்குப் புலப்படாத பல கோடி நுண்ணுயிரிகள் தாக்கும். இப்படிச் சிதைவுறும் பயிர் வகைகளில் உள்ள பேரூட்ட, நுண்ணுாட்டச் சத்துகள் வெளியாகி, அடுத்துப் பயிரிடப்படும் பயிர்கள் செழித்து வளர உதவும்.நுண்ணுயிர்கள் பெருகும்போது, அவற்றிலிருந்து பலவித அங்கக அமிலங்கள், வளர்ச்சி ஊக்கிகள், நொதி மற்றும் சர்க்கரைப் பொருள்கள் வெளிப்படும். இவை, கரையாத நிலையிலுள்ள சத்துகளைக் கரைத்துப் பயிர்களுக்குக் கொடுத்து நன்கு வளரச் செய்யும். காற்று, நீர் மூலம் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கும். நிலத்தின் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படும். களைகள் கட்டுக்குள் இருக்கும். பொதுவாக, நீண்ட ஆணிவேரைக் கொண்ட பசுந்தாள் பயிர்கள், நிலத்தில் ஆழமாக ஊடுருவிச் சத்துகளைக் கிரகிப்பதுடன், இறுக்கமான பகுதிகளை இலகுவாக்கும்.இதனால், நிலத்தில் நீர் ஊடுருவும் தன்மை மிகுந்து, மழைநீரை அதிகளவு சேமிக்க முடியும். கோடையில் இந்தப் பயிர்கள் நிலப்போர்வையாக அமைந்து நிலத்திலுள்ள நீர் ஆவியாவதைத் தடுக்கும். இதன் விளைவாக, மண்ணின் ஆழத்திலுள்ள கேடு விளைக்கும் உப்பினங்கள் மேலே வராமல் தவிர்க்கப்படும்.மண்ணில் கரிமச்சத்து மிகுந்து, ரசாயன உரங்களைப் பயிர்கள் எடுத்துக்கொள்ளும் திறன் கூடும். பொதுவாக, நிலத்தில் இடப்படும் ரசாயன உரங்கள், ஆவியாதல், பாசன நீருடன் கரைந்து வெளியேறுதல் போன்ற பலவித இழப்புகளுக்கு உள்ளாகும்.
ஆனால், கரிமப் பொருள்கள் நிறைந்துள்ள நிலத்தில், இம்மாதிரியான இழப்புகள் குறைவதுடன், பயிர்களுக்கான சத்துகள் சீராகக் கிடைக்கும்.பசுந்தாள் உரப்பயிர்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை, 70 சதவீதம் வரை வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்தி, அதில் ஒரு பகுதியை நிலத்தில் சேர்க்கும். இவற்றை நிலத்தில் மடக்கி உழும் போது, ஏக்கருக்கு, 25- - 45 கிலோ தழைச்சத்து நிலத்துக்குக் கிடைக்கும்.எனவே, மண்வளத்தைப் பெருக்க, ஊடுபயிராக, பசுந்தாள் உரப்பயிர்களைச் சேர்த்துக் கொள்வது அவசியம். இவ்வாறு வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement