Advertisement

எங்கேயும், எப்போதும் சந்தோஷம்!

'கொடுக்கிற தெய்வம், கூரையை பிய்த்து கொடுக்கும் என்பது இது தான் போலிருக்கிறது' என, மத்திய பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, பெண் எம்.எல்.ஏ.,வான, ராம்பாய் அஹிர்வாரை பற்றி, வயிற்றெரிச்சலுடன் கூறுகின்றனர், சக, எம்.எல்.ஏ.,க்கள்.
ராம்பாய், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக்கு, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தருகிறது. அந்த கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.சமீபகாலமாக, காங்கிரசுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறார் மாயாவதி. எதற்கெடுத்தாலும், 'கமல்நாத் ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன்' என, அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்தார். இந்த நேரத்தில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேட்டி அளித்தார் ராம்பாய். இதனால், டென்ஷனான மாயாவதி, எம்.எல்.ஏ., ராம்பாயை கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்வதாக அறிவித்தார்.
இந்த வாய்ப்புக்காகவே காத்திருந்த, ஆளும் கட்சியான காங்கிரஸ், ராம்பாயை, தன் வலைக்குள் இழுத்து வந்து விட்டது. 'பகுஜன் கட்சியிலிருந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரை, எங்கள் பக்கம் இழுத்து விட்டோம். இனி, மாயாவதி மிரட்டல் விடுக்க முடியாது' என, உற்சாகத்துடன் கூறுகின்றனர், காங்கிரசார்.ராம்பாய் காட்டில், பணமழை, அடைமழையாக பொழிவதை பார்த்து, சக எம்.எல்.ஏ.,க்களின் காதுகளில் இருந்து, புகை வரத் துவங்கியுள்ளது. ராம்பாயோ, 'எங்கேயும்... எப்போதும்... சந்தோஷம்' என, உற்சாகமாக வலம் வருகிறார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement