Advertisement

சிந்திக்க, சிரிக்க சிலேடைகள்

தமிழ்மொழிக்குப்பல சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று சொல் விளையாட்டு. சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் பல அர்த்தங் களை பெற்று ரசித்து மகிழலாம். திருமணமாகி தனிக்குடித்தனம் வந்த அன்று மனைவியிடம் கணவன் சொன்னான்.

'முதலில் இனிப்பாக எதுவும் செய்ய வேண்டும். பால்பாயாசம் செய்துவிடு' என்றான்.படித்து பட்டங்களைப் பெற்ற அவள் சமையல் கலையில் கவனம் செலுத்தாமலேயே இருந்து விட்டாள். இப்படியெல்லாம் பிரச்னை வரும் என்று எதிர்பார்த்து சமையல் செய்வது எப்படி என்ற புத்தகத்தை வாங்கி வைத்திருந்தாள். அந்த தைரியத்தில் அடுப்படிக்குள் புகுந்து புத்தகத்தைப் பிரித்தாள். முதல் பக்கத்திலேயே பால்பாயாசம் செய்வது எப்படி என இருந்தது. வேலையை ஆரம்பித்து விட்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து அடுப்படியில் இருந்து அவள் குரல் கேட்டது. 'பாயசம் ஒரு தரம், பாயசம் இரண்டு தரம், பாயசம் மூன்று தரம்'. முன் அறையில் இருந்த கணவன் ஓடோடி வந்து, 'ஏன் ஏலம் போடுகிறாய்' என கேட்டான். 'புத்தகத்தில் இருக்கிறபடிதான் செய்கிறேன். பாயசத்தை இறக்குவதற்கு முன்னால் ஏலம் போட்டு இறக்கவும் என போட்டிருக்கிறதே' என்றாள்.'அய்யோ! அது ஏலக்காய் போடணும் என அர்த்தம்'. அவனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.ஒன்று நடக்கும்! ஒன்று நடக்காது!

அண்ணாமலை ரெட்டியார் என்பவர் இரக்க குணம் படைத்தவர். ஒருநாள், ஏழை ஒருவன் அவரிடம் வந்து, 'ஐயா! என் வீட்டில் தெய்வத்திற்குப் படைக்க வேண்டும். தாங்கள்தாம் அரசரிடம் சொல்லி, எனக்கு ஓர் ஆடும், ஒரு மூடை அரிசியும் கிடைக்க அருள் செய்ய வேண்டும்' என்று வேண்டினான்.

உடனே அண்ணாமலை, 'நீ கேட்டதில் ஒன்றுதான் நடக்கும். இன்னொன்று நடக்காது' என்றார்.அவன், 'ஐயா! எப்படியாவது இரண்டும் எனக்குக் கிடைக்க நீங்கள் உதவ வேண்டும்' என கெஞ்சினான்.அவனின் வாடிய முகத்தைக் கண்டு, 'நான் என்ன சொல்லிவிட்டேன்? நீ கேட்ட இரண்டில் ஆடுதான் நடக்கும். அரிசி நடக்காது. இதைத்தானே சொன்னேன். நீ ஏன் வருந்த வேண்டும்' என்றார்.ரெட்டியாரின் சிலேடையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான் அவன்.அவரும் தாம் சொன்னது போலவே அரசரிடம் அவன் கேட்டவற்றைப் பரிசாக வாங்கித் தந்தார்.

பதிலுக்குப் பதில்ஆதினத் தலைவர் ஒருவர் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். புலவர்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. சிறிது நேரம் கழித்து கடைமடை என்ற ஊரைச் சேர்ந்த புலவர் அங்கு வந்து சேர்ந்தார். காலம் தாழ்த்தி வந்த அவரை மட்டந்தட்ட விரும்பிய ஆதினத் தலைவர், வாரும் கடைமடயரே என்றார்.

வாரும் என்ற பொருளும், மடையர்களில் கடைப்பட்டவரே வாரும் என்ற பொருளும் அவர் அழைப்பில் இருந்தன. இதற்குப் புலவர் என்ன மறுமொழி தரப் போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். அந்தப் புலவரும், 'வந்தேன் மடத் தலைவரே' என பதிலடி தந்தார். மடத் தலைவர் என்ற சொல் மடத்தின் தலைவர் என்ற பொருளையும் முட்டாள்களின் தலைவர் என்ற பொருளையும் தந்தன.

பாலை வணங்கிய புலவர்புலவர் ஒருவர் குடிப்பதற்காகக் குவளையில் பால் கொண்டுவந்து கொடுத்தாள் மனைவி. பாலை வாங்கிய புலவர் அதைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடத் தொடங்கினார். 'உங்களுக்கு எப்பொழுது விளையாடுவது என்றே தெரியாது. எதற்காகக் குடிக்க வேண்டிய பாலைக் கும்பிடுகிறீர்கள்?' என கோபத்துடன் கேட்டாள் மனைவி.'
பாற் கடலுள் சீனிவாசன் பள்ளி கொண்டுள்ள காட்சியைப் பார்த்தேன். அதனால் வணங்கினேன்' என்றார் அவர். அப்பொழுதுதான் மனைவி பாலைக் கவனித்தாள். அதில் எறும்பு மிதந்து கொண்டிருந்தது. தன் கணவரின் குறும்பு அப்பொழுதுதான் அவளுக்குப் புரிந்தது. பாலில் எறும்பு மிதப்பதைத்தான் பாற்கடலுள் சீனிவாசன் (சீனியிலே வாசம் செய்யும் எறும்பு) பள்ளி கொண்டுள்ளான் என்று குறிப்பாகச் சொல்லிய சிலேடையின் நயம் உணர்ந்து மகிழ்ந்தாள்.

பாலும் கசக்கவில்லைபுலவர் ஒருவர் கடும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தார். உறவினர்களும் நண்பர்களும் அவரைச் சூழ்ந்து நின்றார்கள். புலவரால் பால் குடிக்க முடியாது என்பதால் துணியைப் பாலில் தோய்த்து அவர் வாயில் வைத்து மெதுவாகப் பிழிந்தார் ஒருவர். ஆனால் புலவரோ பாலைக் குடிக்காமல் அதைத் துப்பி விட்டார்.அருகில் இருந்த அவர் நண்பர், 'என்ன பால் கசக்கிறதா?' என அன்புடன் கேட்டார். புலவரோ மெல்லிய குரலில், 'பாலும் கசக்கவில்லை. துணியும் கசக்கவில்லை (துவைக்கவில்லை)' என்றார்.

பிஞ்சு இருக்குபுலவர் ஒருவரின் பாடலைக் கேட்டு மகிழ்ந்த அரசன் மரம்,செடி,கொடிகள் வரையப்பெற்ற பொன்னாடை ஒன்றை அவருக்குப் பரிசு அளித்தான்.அதைப் பெற்றுக் கொண்ட புலவர் அந்த ஆடை நடுவில் சிறிது கிழிந்து இருப்பதை அரசனுக்கு உணர்த்த வேண்டும். அதே சமயத்தில் அவன் உள்ளமும் வருந்தக் கூடாது. என்ன செய்வது? என்று சிந்தித்தார் அவர்.'அரசே! நீங்கள் பரிசு அளித்த பொன்னாடையில் மரம் இருக்கிறது. கிளை இருக்கிறது. பூ இருக்கிறது; பிஞ்சும் இருக்கிறது'என கூறிகிழிந்திருந்த பகுதியைக் காட்டினார்.புலவரின் சொல்லாற்றலை வியந்த அரசன் அவருக்கு நல்ல பட்டாடையுடன் பரிசுகளையும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

விளக்கு மாற்றால் விளக்குகிறேன்பரிதிமாற் கலைஞர் செய்யுள் இலக்கணப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது மாணவன் ஒருவன் எழுந்து, 'ஐயா! நீங்கள் நடத்தியதில் எழுத்து புரிகிறது. சீர் புரிகிறது. தளை புரிகிறது. தொடை புரிகிறது. ஆனால் தொடைக்கு மேல் ஒன்றும் புரியவில்லை. அதைச் சற்று விளக்கமாகக் கூறுங்கள்' என்று குறும்பாகக் கேட்டான்.பரிதிமாற் கலைஞர், 'தனியே என் அறைக்கு வா. விளக்குமாற்றால் விளக்குகிறேன்' என்றார்.விளக்குமாற்றால் என்பது இரு பொருள் உடையது. துடைப்பத்தால் என்பது ஒரு பொருள். விளக்கும் ஆற்றலால் என்பது இன்னொரு பொருள்.

பிடித்தால் சண்டை'தையல்காரரே! ஏன் அந்த ஆள் வந்து உங்ககிட்ட சண்டை போடற மாதிரி கத்திட்டுப் போறார்?''தீபாவளிக்கு நான் தைத்துக் கொடுத்த சட்டை அவருக்கு ரொம்ப பிடிக்குதாம். அதற்காகச் சண்டை போட்டுட்டுப் போறார்'.'நீங்க தைச்ச சட்டை அவருக்குப் பிடித்தால் மகிழ்ச்சி அல்லவா பட வேண்டும். எதற்காகச் சண்டை போடுகிறார்?'அவர், 'சட்டை உடம்புக்குப் பிடிக்கிறது' என்றார்.இவர் மனதுக்குப் பிடிக்கிறது என்று நினைத்துக் கொண்டார்.கி.வா.ஜகந்நாதன்

கி.வா.ஜகந்நாதன் சிலேடையாகப் பேசுவதில் வல்லவர். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டார். ரயிலில் வந்து காலையில் இறங்கினார். அவரை வரவேற்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு மாலை அணிவித்தார்கள். உடனே கி.வா.ஜ சொன்னார். 'அடடே! காலையிலேயே மாலை வந்துவிட்டதே!'

மாலை என்பதற்கு சாயங்காலம் என்ற பொருளும் உண்டு. இரவு நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது அவருக்கு ஒரு பையை பரிசாகக் கொடுத்தார்கள். உடனே அவர் சொன்னார், 'என்னை தலைவனாக அழைத்தீர்கள். இப்போது பையனாக அனுப்புகிறீர்கள்'. பை வைத்திருப்பதால் அவர் பையனாம். ஒரு சொற்பொழிவுக்குப் போன அவர் தனது நண்பர் வீட்டில் தங்கினார். இரவு உணவு படைத்த நண்பன் மனைவி, நாளை காலை உணவுக்கு என்ன சிற்றுண்டி செய்ய வேண்டும் என்று கேட்டார். உடனே, 'என் பெயரிலேயே இருக்கிறதே' என்றார் கி.வா.ஜ. அதெப்படி? என்று கேட்டார்கள்.

'என் பெயர் ஜகந்நாதன்தானே. ஜகந்நாதன் எங்கிருக்கிறார். பூரியில் இருக்கிறார். அதையே செய்துவிடுங்கள்' என்றார். ஒடிசா மாநிலத்தில் பூரி என்ற ஊரில் உள்ள ஆலயத்தில் இருக்கிற கடவுள்தான் ஜகந்நாதன். இப்படி பல சிலேடைகளைச் சொல்லி மகிழ்ச்சியூட்டியவர் கி.வா.ஜ.ஓரெழுத்தின் மகிமை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.

'தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் தற்பெரு'மை' தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ பொறா'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ பழ'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் அரு'மை'யான எழுத்துகள் என்று சொல்லிவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில 'மை'கள் உள்ளன. கய'மை', பொய்'மை', மட'மை', வேற்று'மை' ஆகியவை. கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.'எழுத்தாளர்கள் தொட்டு எழுத வேண்டிய மைகள் என்னென்ன தெரியுமா?நன் 'மை' தரக்கூடிய நேர்'மை', புது'மை', செம்'மை', உண்'மை'. இவற்றின் மூலம் இவர்கள் நீக்கவேண்டியவை எவை தெரியுமா? வறு'மை', ஏழ்'மை', கல்லா'மை' ஆகியவையே' என பேசி முடித்தார். அவை ஆரவாரம் செய்தது.

முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை98430 62817
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement