Advertisement

உழவர்களையும், உழவையும் உயர்த்தி பிடிப்போம்

திருவிழாக்களில் தனித்தன்மையுடன் திகழும் பெருமை பொங்கலுக்கு உண்டு. காரணம், பொங்கல் பண்பாட்டைக் கட்ட உதவும் செங்கல். நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்படும் ஒற்றைப் பண்டிகையாக பொங்கலே திகழ்கிறது. அது வாயற்றவற்றிற்கும் அன்பு பாராட்டும் அற்புதத் தொன்மை கொண்ட பண்டிகை. ஆண்டு முழுவதும் உழைத்து, வயிற்றை நிரப்பி, நம் வாயில் புன்னகையை வரவழைக்கும் விவசாயிகளை உள்ளார்ந்த அன்புடன் நினைந்து உருகும் மகத்தான நிகழ்வு பொங்கல். அதனால் தான் அது ஜாதிகளைக் கடந்து, மதங்களை மறுதலித்து அனைத்துத் தரப்பினராலும் ஆராதிக்கப்படுகிறது.

தை வரவிற்காக காத்திருப்பு
நான் நினைத்துப் பார்க்கிறேன்... சலனவட்டங்களாய் பள்ளிப் பருவம் கண்களில் விரிகிறது. கிராமத்தில் அமைந்திருந்த வீட்டில் என் பள்ளிக்கல்வி நடந்ததால் பொங்கலை முழுமையாகச் சுவைக்கும் அனுபவம் ஏற்பட்டது. கரையின் மீது உறுமீனுக்குக்காகக் காத்திருக்கும் கொக்கு போல தையின் வரவிற்காகக் காத்திருக்கும் பலரை நான் கண்டிருக்கிறேன். அறுவடை நிகழ்கிற காலமே கையில் காசு புழங்கும் நேரம். அப்போதுதான் வீட்டிற்கு வெள்ளையடிக்க முடியும். பழுதான பொருட்களைக் கண்டெடுத்து துார எறிந்து அவற்றிற்குப் பதில் புதியனவற்றைத் தருவிக்க முடியும். புத்தாடைகள் உடுக்க முடியும்.

இல்லத்தில் இனிப்பு கலந்த சாதத்தை புத்தரிசியுடன் சமைக்கும் போது பொங்குவது சோறு மட்டுமல்ல, சோர்வடைந்த உள்ளமும் உற்சாகத்தால் பரவசமடையும். அதனால்தான் உழைப்பவர்களின் விடியல் பொங்கலில் தொடங்கும். கழனியில் உழைத்தவர்களுக்கு கதிர்களையும், மணிகளையும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள் விவசாயிகள்.

நான்கு நாட்கள் திருவிழா
எங்கள் இளம்பருவப் பொங்கல் நாட்கள் இனிமை வாய்ந்தவை... எந்தத் திருவிழாவும் நான்கு நாட்கள் தொடர்ந்து நடப்பதில்லை, பொங்கலைத் தவிர. அரையாண்டுத் தேர்வை பொங்கல் திருவிழா நாட்டுப்பண் பாடி நிறைவு செய்யும். அப்போது சந்தையில் பம்பரங்கள் வரத் தொடங்கும். சாட்டையில் சுழற்றி மயங்க வைப்பதில் நண்பர்களுக்குள் போட்டா போட்டி. அத்தனை வீடுகளும் வெள்ளை பூசி புது மெருகுடன் காட்சியளிக்கும். வீட்டு நெற்றிகளில் வேப்ப இலையும், பூலாப்பூவும் செருகப்பட்டு திலகமாய்த் திகழும். கரும்புச் செவ்வாளங்கள் கடைத்தெருவெல்லாம் மஞ்சள் கன்றுகளோடு மணம் வீசும்.

வீடுகளுக்கிடையே பெரிய கோலத்திற்காக போட்டிகள் நிகழும். பெண்கள் செம்மண் கட்டி அழகான கோலத்தால் வீதிகளையெல்லாம் பட்டுச் சரிகையைப்போல பளபளக்க வைப்பார்கள். பொங்கல் வாழ்த்துகள் கடைகள்தோறும் நிரம்பி வழியும். யார் யாருக்கு அனுப்புவது என வீட்டுப் பெரியவர்கள் பட்டியலிடுவார்கள். அதில் பக்கத்து வீட்டினர் பெயரும் தவறாமல் இடம்பெறும். அந்த வாழ்த்து அட்டைகளில் மாடுகளும், வயல்வெளிகளும், கிராமப் பகுதிகளும் முகம் காட்டி சிரிக்கும். யார் யார் அனுப்பினார்கள் என்று தேர்வு முடிவைப் பார்ப்பதைப்போல அஞ்சல்காரரை எதிர்பார்த்து தவமிருப்போம்.

அதில் ஒட்டப்பட்டிருக்கும் தபால் தலைகளை எச்சில் தடவி, எடுத்து சேகரிப்போம். வாசலில் வைக்கிற பொங்கலை அவ்வழியாக செல்லும் அனைவருக்கும் தளுக்கு இலையில் தருவது வழக்கம்.அக்கம்பக்கம் இருக்கும் மாடு வைத்திருப்பவர்கள் மாட்டுப் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவதைப் பார்ப்பதே அழகு. அவர்கள் தாங்கள் இருக்கும் கட்சியில் தங்கள் மாடுகளையும் கொம்புக்கு வண்ணம் தீட்டி சேர்த்து விடுவார்கள். கரிநாளன்று அம்மாபாளையம் மாரியம்மன் கோயிலில் எருது ஆட்டும் விழா. ஊரே திரண்டு நிற்கும். காணும் பொங்கல் இரவு சோகம் கப்பிக்கொள்ளும். மறுநாள் பள்ளி மறு திறப்பு. எந்தப் பாடத்தில் என்ன மதிப்பெண்ணோ என்கிற அச்சம் ஏற்படும். அவையெல்லாம் வசந்த காலங்கள்.

சடங்காகி விட்ட உற்ஸவம்
இன்று பொங்கல் என்பது சடங்காகி விட்டது. எதற்காக என்பது இன்றைய மாநகரப் பிள்ளைகளுக்குத் துளியும் தெரிவதில்லை. பகிர்வது அறவே இல்லை. பக்கத்து வீட்டினருக்கும் யாரோ அனுப்பிய வாழ்த்துக் குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு அகமகிழ்கிறோம். நேரத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆக்கிரமிப்பதால் விருந்தினர்கள் வருவதுமில்லை, நண்பர்கள் அளவளாவுவதுமில்லை. வாழ்த்து அட்டைகள் மறைந்து சமாதியாகி விட்டன. வெள்ளை அடிப்பது வசதி இருக்கும் போது. தீபாவளியைப்போல பொங்கலுக்கு யாரும் புத்தாடை எடுப்பதில்லை. சடங்குக்காக வாங்கப்படும் கரும்புகள் ஒருக்களித்து படுக்கவைக்கப்பட்டு, குக்கர் இடுப்பில் மஞ்சளைக் கட்டி, சன்னலைத் திறந்து சூரிய வெளிச்சத்தில் பொங்கல் தயாராகிறது.

பொங்கலோ பொங்கல் என்று கூக்குரலிட்டு மகிழ யாருமில்லை.வேளாண்மை இன்று கடைசிப் புகலிடமாக ஆகிவிட்டது. வயல்களை நிரப்பி வீட்டு மனைகளாக மாற்றிவிட்ட அவலம். கூட்டுக் குடும்பங்கள் சிதைந்ததால் வீடுகளின் எண்ணிக்கை அதிகம். பிதுங்கி வழியும் ஜனத்தொகையில் இளைப்பாறுவதற்கு மட்டுமே பொங்கல் விடுமுறை. பள்ளி மாணவர்களுக்கோ பொதுத் தேர்வைச் சந்திப்பதற்கு தயாரிக்கும் அவகாசம்.

வேளாண்மைக்கான பொற்காலம் காத்திருக்கிறது. இன்று வெளிநாடு சென்று வேலை பார்த்த பல இளைஞர்கள் பாதியில் உள்ளூர் திரும்பி உற்சாகத்துடன் விவசாயம் பார்ப்பதை பத்திரிகைகள் படம்பிடித்துப் போடுகின்றன. மறுபடியும் இயற்கை எரு, நாட்டுப் பசு, மரபு நாய்கள், உள்ளூர் ஆடுகள், செக்கில் ஆட்டிய எண்ணெய், மண்சார்ந்த நெல் வகைகள் என்று பழைமையை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கும் அவர்கள் வணிகமயமான வர்த்தகச் சூழலின் மீது கல்லெறிந்து சவால் விடுகிறார்கள்.விழிப்புணர்வு பெறும் இளைஞர்கள்நாம் எத்தனை பணம் சம்பாதித்தாலும் பசி வருகிறபோது கரன்சி நோட்டுகளை உண்ண முடியாது. கணினிச் சிப்சுகளை உண்டு வயிறு நிரம்பாது.

அதற்கு உருளைச் சிப்சுகளே அவசியம். இன்றிருக்கும் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். கணினியைவிட கழனி முக்கியம் என்பதையும், கணினியைக்கொண்டு கழனியை மேம்படுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்து வருகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு என்ன செய்வது என்பது தெரியாததால்தான் ஜல்லிக்கட்டை முன்னெடுத்த அவர்கள் அதற்குப் பிறகு பின்வாங்கி விட்டார்கள். அவர்களால் இளநீரை மட்டுமே அருந்துவோம் என்று திடமாக இருக்க முடியவில்லை.விவசாயத்தில் இளைஞர்கள்இத்தகைய சூழலில் மூன்று விதமான சிந்தனைகள் எழ செய்கின்றன.

வேளாண்மையே தெரியாமல் தலைமுறைகளை உருவாக்குவது வரைமுறை ஆகுமா! நாம் பொங்கலை அடுக்ககங்களில் கொண்டாட முடியாது. குழந்தைகளை அருகில் இருக்கும் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் வயல்வெளிகளையும், தோப்புகளையும் அறிமுகப்படுத்துவது அவசியம். கன்றுகளை நீவிப் பார்க்கவும், பொங்கல் வைப்பதை நேரில் பார்க்கவும் செய்வது நம் கடமை. அப்போதுதான் உண்ணுகிற ஒவ்வொரு கவளத்தையும் நன்றி உணர்வோடு நாம் ரசிக்க முடியும்.

இளைஞர்கள் வேளாண்மையைப் பெரிய அளவில் செய்ய முன்வர வேண்டும். கூட்டுப் பண்ணைகளின் அடிப்படையில் தொழில்நுட்பக் கருவிகளை பொதுவாக்கிக்கொண்டு மண்சார்ந்த மரபுகளையும் உள்வாங்கிக்கொண்டு வேளாண்மைக்கு அவர்கள் புத்துயிர் பாய்ச்ச வேண்டும். பிழைப்பாக இருக்கும் அதை பணியாக மாற்றி, சேவையாக உயர்த்தி, வழிபாடாக ஆக்கி உன்னதமான ஒன்றாக மீளாக்கம் செய்வது அவசியம்.விவசாய மரபினர்நேரடி விற்பனை, உயர்தரப் பண்ணைப் பொருட்கள், சிறந்த தொழில்நுட்பம், பருவ ஞானம் போன்றவற்றால் இதைச் சாத்தியமாக்கிக் காட்ட முடியும்.

நகரங்களுக்குப் பெயர்ந்த விவசாய மரபினர் ஓய்வு பெற்றதும் சொந்த ஊருக்குச் சென்று, விட்ட வேளாண்மையைத் தொடர்வது அவசியம். அவர்கள் தங்கள் நிலங்களை அப்படியே விட்டு வைத்தால் அவை எட்டாக் கனிகளாக ஆகிவிடும் என்பதை உணர்ந்து மிகுந்த நேசிப்புடன் உழவின் உன்னதங்களை நுகரத் தொடங்கினால் தனிமைச் சிறையிலிருந்து விடுபடுவதோடு எண்ணற்ற நோய்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.

பலரோடு பழகுவதாலும், இயற்கை சார்ந்த வாழ்க்கையை வாழ்வதாலும், தூய காற்றைச் சுவாசிப்பதாலும், மாசற்ற நீரைப் பருகுவதாலும் நீண்ட நெடு நாட்கள் நோயின்றியும், மருந்தின்றியும் வாழ முடியும். பொங்கல் பண்டிகை உண்மையான திருநாளாக மாறுவதற்கு உழவர்களையும், உழவையும் உயர்த்திப் பிடிப்பதே ஒரே வழி
.- வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.,சென்னை .iraianbuhotmail.com

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement