Advertisement

டவுட் தனபாலு

தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி: தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது; நாட்டிலேயே, முதல் மாநிலமாக திகழ்கிறது. நிலைமை இப்படி இருக்க, பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எந்த அடிப்படையில், தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு மோசமாக இருக்கிறது என்று சொன்னார் என, தெரியவில்லை.

'டவுட்' தனபாலு: குமரி மாவட்டம், களியக்காவிளையில், பயங்கரவாதிகளால், போலீஸ் எஸ்.ஐ., சுட்டுக் கொல்லப்பட்டதை வைத்து, அவர் அப்படி சொல்லி இருந்தார். எனினும், கடந்த பல ஆண்டுகளாகவே... மத்திய அமைச்சராக அவர் இருக்கும் போதே, முதல்வரை சந்தித்து கூட, தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து, கவலை தெரிவித்திருக்கிறார் என்பதை, நீங்கள் எப்படி மறந்தீர்கள் என்பது தான், 'டவுட்' ஆக உள்ளது.

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: சமீபத்தில், அந்தமான் சென்றிருந்த போது, அங்குள்ள சுற்றுலா இடங்களை காணச் சென்றேன். அங்கு வந்திருந்த, தமிழகம், ஆந்திரா மற்றும் வட மாநில மக்கள், என்னுடன், 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 'தமிழகத்தின் அடுத்த முதல்வர் நீங்கள் தான்' என, வாழ்த்தினர்.

'டவுட்' தனபாலு: அந்தமானில் உங்களுடன், செல்பி எடுத்தவர்களும், வாழ்த்தியவர்களும், தமிழகத்தில் ஓட்டு போட மாட்டார்களே... போட்டோவுக்கு அவர்களுடன் சேர்ந்து நீங்கள், 'போஸ்' கொடுத்ததால், நன்றி உணர்ச்சியைக் காட்ட, அவ்வாறு கூறியிருப்பரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் கொளுத்தி போட்டதால், தமிழகத்தின் அமைதி பறிபோய் உள்ளது. இதனால், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பலத்த அடி வாங்கும் என்ற பேச்சு, இப்போதே அடிபடுகிறதே!

***

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., கூட்டறிக்கை: நம் கட்சி நிறுவனர், எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும், இடைத்தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், கட்சி அமோக வெற்றி பெற்றதை விளக்க வேண்டும். இதற்காக, மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை, ஐந்து நாட்கள் நடத்த வேண்டும்.

'டவுட்' தனபாலு: நல்ல விருந்துக்கு பின், சிறந்த துாக்கம் வரும் என்பது போல, உள்ளாட்சித் தேர்தல் வெற்றியால், தொண்டர்கள் சோம்பி இருந்து விடக் கூடாது என்பதால் தான், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள் என்பது, 'டவுட்' இல்லாமலேயே தெரிகிறது. எப்படியோ, இப்படி அடிக்கடி உசுப்பேற்றிக் கொண்டிருந்தால் தான், தொகுதி பக்கம், கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள் சென்று பார்ப்பர் என்பதும், உங்கள் எண்ணமாக இருக்குமோ!lll
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Aaaaa - Bbbbbb,இந்தியா

    நடுநிலை எப்போது அதிமுகவில் இணைந்தார்?

Advertisement