Advertisement

இப்படி செய்யலாமா?

'நம்மையெல்லாம், இப்படி சிக்கலில் மாட்ட வைத்து விட்டாரே. கொஞ்சம் யோசித்து பேசியிருக்க வேண்டாமா' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷாவை பற்றி புலம்புகின்றனர், மாநில அரசுகளின் முதல்வர்கள்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில், துணை ராணுவப் படை நிகழ்ச்சியில் பேசுகையில், 'துணை ராணுவப் படையினர், நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதால், மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், துணை ராணுவப் படையினருக்கு இனி, ஆண்டுக்கு, 100 நாட்கள் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அமித் ஷாவின் இந்த அறிவிப்பு, துணை ராணுவப் படையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அனைத்து மாநில முதல்வர்கள் வயிற்றிலும், புளியைக் கரைக்க வைத்துள்ளது. 'துணை ராணுவப் படையினருக்குச் சமமாக, நாங்களும் பணியாற்றுகிறோம்; எங்களுக்கும் வார விடுப்பு தர வேண்டும்' என, பல்வேறு மாநில போலீசாரும், அந்தந்த மாநில அரசுகளிடம் நெருக்கடி தரத் துவங்கியுள்ளனர்.

மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில், போலீசாருக்கு வார விடுப்பு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, மற்ற மாநில முதல்வர்களுக்கு, மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல், 'அமித் ஷா இப்படி செய்து விட்டாரே' என, புலம்பலுடன் விழி பிதுங்கி போயுள்ளனர், முதல்வர்கள்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement