Advertisement

தரணி போற்றும் தமிழர் திருவிழா!

Share
உலகத்தில் எத்தனையோ திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் எல்லாம் பரம்பரையாக, பாரம்பரியமாக கொண்டாடி வரும் திருவிழா 'தமிழர் திருவிழா' எனும் 'பொங்கல் திருவிழா'.

பொங்கல் திருவிழாவின் தனிச்சிறப்பே தை முதல் தேதியில் வருவது தான். 'தை மாதம்' என்றாலே 'விழா மாதம்' என்பார்கள். சபரிமலை ஐயப்பனின் மகரஜோதி தரிசனம், பழநி தைப்பூசம், தை வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்கு பூஜை, தை அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா, திருநெல்வேலி நெல்லையப்பருக்கு 'லட்ச தீப விழா', நம்மாழ்வாருக்கு மோட்சம் கிட்டியது, திருநீலகண்டருக்கும், தாயுமான சுவாமிகளுக்கும் முக்தி கிட்டியது உள்ளிட்ட பல்வேறு அற்புதங்கள் நிறைந்ததாக தை போற்றி வணங்கப்படுகிறது.

வழி பிறக்கும்
மங்களகரமான மார்கழி மாதம் முடிந்து தை வருவதால் மார்கழி மாதப் பனியையும், கோடை காலத்தின் ஆரம்பம் என்பதால் சிறிது வெப்பத்தையும் தாங்கி நிற்கும். மார்கழியில் அறுவடை முடிந்து வருமானம் கைக்கு வருவதால் தை மாதத்தில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அதனால் இந்த மாதத்தில் மங்கள காரியங்கள் நிறைய நடைபெறும். அதற்காகத்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். மார்கழியில் அறுவடை முடிந்து வருமானம் கிடைப்பதால், அந்த வருமானத்திற்கு மூலகாரணமான மண்ணுக்கும், அதில் உழைத்த மாடு மற்றும் மனிதர்களுக்கும், பயிர்களுக்கு உயிரூட்டி நல்ல விளைச்சலை தந்த சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து வழிபாடு செய்வது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். அதுவே பொங்கல் திருவிழாவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பொங்கலோ பொங்கல்
மனிதன் முதலில் தன்னால் நெருங்க முடியாத சூரியனுக்கு பயந்து சூரியனை வணங்கினான். இயற்கை சிரித்தால் தான் மனிதன் சிரிக்கின்றான். அவன் மனம் மகிழ்ச்சியில் பொங்குகின்றது. அந்த இயற்கைக்கு உயிரூட்டி வளப்படுத்துவது சூரியன், பூமிக்கு அடிப்படை சூரியன். எனவே, சூரியனை மையமாக வைத்தே காலம் நிர்ணயம் செய்யப்படுகின்றது. தை மாதத்தில் முதல் தேதியில் சூரியன் மகர ராசிக்கு வந்து வடக்கே திரும்புகின்றது. ஆகவே தை முதல் நாளை 'மகரசங்கராந்தி' என கொண்டாடி வந்தனர்.தமிழர்களுக்காக உருவாக்கிய திருவள்ளுவர் ஆண்டும் தை முதல் தேதியில் தான் வருகின்றது.

சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, பங்குனி, கார்த்திகை, மார்கழி, மாசி, என எல்லா மாதங்களிலும் பொங்கல் வைக்கப்படுகின்றன. காவல் தெய்வங்களுக்கும், குல தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்து திருவிழாக்களும் நடக்கின்றன. இருந்தாலும் இயற்கையோடு இணைந்த தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல் ஆகியவைகளுக்கு இருக்கும் சிறப்பு வேறு எந்த பொங்கலுக்கும் இல்லை.

நாயகனாக மாடு
தமிழ் மக்கள் காலங்காலமாக கொண்டாடும் இந்த பொங்கல் போகி பண்டிகையுடன் ஆரம்பிக்கிறது. தை மாதத்திற்கு முதல் நாள் வீடு, வாசல்களை சுத்தப்படுத்தி, வெள்ளையடித்து, நோய்கள் பாதிக்காத வண்ணம் காப்புக்கட்டி வரவேற்க ஆயத்தமாகின்றனர். தை பிறந்தவுடன், பொங்கல் படைத்து சூரியனுக்கு நன்றி தெரிவித்து வணங்குவார்கள். இதனை 'மனப் பொங்கல்' என்பர். மனிதர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் என்றும் கூறலாம். மறுநாள் இந்த மண்ணில் நாளெல்லாம் நமக்காக உழைத்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கப் பொங்கல் வைத்து மாட்டுக்கு ஊட்டி மகிழ்வர்.


அன்றைய விழாவிற்கு கதாநாயகன் மாடுகள் தான். அன்று மாடுகளை குளிப்பாட்டி நன்கு அலங்கரித்து அதற்காகப் பொங்கல் படைத்து மகிழ்வார்கள், வணங்குவார்கள்.மாடு பிடி வீரர்அன்று புதுமாப்பிள்ளைகளுக்கு இருக்கும் மிடுக்கு மாடுகளிடமும் இருக்கும். தொத்தல் மாட்டுக்குக்கூட வீரம், கோபம் இருக்கும். அன்று மாட்டுக்கு முன் பொங்கல் படைத்து 'பொங்கலோ பொங்கல், மாட்டுப் பொங்கல், பட்டி பெருக, பால் பானை பொங்க, நோயும், பிணியும் தெருவோடு போக,' எனக்கூறி வணங்கி மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி, அந்த எச்சில் நீரை மாட்டு தொழுவத்தில் தெளிப்பார்கள். பின் மாடுகளை தெருவில் ஓட்டி சென்று அவிழ்த்து விடுவார்கள்.

அதனை மடக்கி அதன் கொம்புகளின் கட்டியிருக்கும் புதுத் துண்டு மற்றும் பண முடிப்புக்களை கழற்றுவதை வீரமாகக் கருதி போராடுவார்கள். இதனை எருதுபிடி, மாடுபிடி, காளைப்போர், மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல் என்ற பெயர்களில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. பண்டைய காலத்தில் வீட்டில் தான் வளர்க்கும் காளையை அடக்குபவர்களை தான் ஆண் மகனாக கருதி திருமணத்திற்கு சம்மதித்தனர் பெண்கள்.ஜல்லிக்கட்டு வீரம்இந்த மாடுபிடி விளையாட்டுக்கள் தான் பின்னாளில் 'ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் நடந்து வருகின்றது.


காளையை அடக்கி அதன் கழுத்தில் இருக்கும் 'ஜல்லி' எனும் வளையத்தை கழட்டி வெற்றி பெறுவதே 'ஜல்லிக்கட்டு' என அழைக்கப்பட்டது என்று கூறுவர். காளைகளை வாடிவாசல் வழியாக திறந்து விட்டவுடன் அதன் திமிலை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை விடாமல் பிடித்திருந்தால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர். தோல்வியுற்றால் காளை வெற்றி பெற்றதாக அறிவித்து பரிசும், விருதும் வழங்கி கவுரவிப்பர்.பஞ்சபூத படையல்இந்த வீர விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டபோது அதை ஒரு கவுரவப் பிரச்னையாக எடுத்து கொண்டு தமிழர்கள் போராடினர். தமிழர்கள் தங்கள் அடையாளமாக ஜல்லிக்கட்டை நினைக்கின்றனர். பொங்களன்று ஜல்லிக்கட்டு மட்டுமன்று கபடி, ஓட்டப்பந்தயம், ரேக்ளா ரேஸ், பானை உடைத்தல், பந்து விளையாட்டு மற்றும் மாறு வேடப் போட்டிகளும் நடைபெறும். பெண்கள் தனக்கு முறை மாப்பிள்ளையாக இருப்பவர்கள் மற்றும் மனம் விரும்புவர்கள் மீது மஞ்சள் தண்ணீரை பீச்சியபடித்து விளையாடுவார்கள்.

அன்று மாலை வேளையில் மங்கையர்கள் தயிர் சாதம் மற்றும் பல வண்ணச்சாதங்கள் தயார் செய்து மொட்டை மாடியில் கொண்டு சென்று பஞ்சபூதங்களுக்கு படைத்து விட்டு உண்டு மகிழ்வர். சகோதரர்கள் வாழ்வு சிறக்க வேண்டும், என வணங்குவர். காக்கைக்கும் சோறு படைப்பர்.தித்திக்கும் வாழ்வுஇளம் பெண்கள் ஆற்றோரம் கூடி பொங்கல் வைத்து படைத்து வணங்கி உண்டு விட்டு மாலை வீடு திரும்புவர். இதற்கு 'பூப் பொங்கல்' என்றும் 'கன்னிப் பொங்கல்' என்றும் கூறுவர். வேத, புராண காலங்களில் 'இந்திர விழா' என்ற பெயரில் 27 நாட்கள் கொண்டாடப்பட்ட இந்த விழா ஒரு நாள் விழாவாக 'போகிப் பண்டிகையாக' கொண்டாடப்படுகின்றது.

இந்திரனின் கர்வம் நீங்கிய பிறகு போகிப் பாண்டிகையும் பொங்கலும் வருகின்றது. மகாசங்கராந்தியாகக் கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவை 1876 - 1931 ல் வாழ்ந்த கா.நமச்சிவாயம் எனும் புலவர் பொங்கல் பண்டிகையாக கொண்டாடினார். அன்று முதல் பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகின்றது. முதல் பொங்கல் வாழ்த்துப்பாடலையும் இவர் தான் எழுதினார்.சர்க்கரை பொங்கலை போலவே நம் வாழ்வின் எல்லா செயல்களும் பிறருக்குப் பயன்பட தரணியில் சிறந்து விளங்கு வோமாக!- இரா.ரெங்கசாமிஎழுத்தாளர், வடுகபட்டி90925 75184

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement