மூன்றாண்டுகளுக்கு முன், சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் நிகழும் மாநிலங்களில், தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது. விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, உச்சநீதிமன்றமும், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும் உத்தரவிட்டன. இதையடுத்து, 'ஹெல்மெட், சீட் பெல்ட்' அணிவதை கட்டாயமாக்கியதுடன், விதிமீறல்களுக்கான கட்டணத்தை அதிகரித்து, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால், விபத்துக்கள் பெருமளவு குறைந்தன. அதனால், 2018 - -19ம் ஆண்டில், விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுத்த மாநிலங்களில், முதன்மையான மாநிலமாக, தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விழா, டில்லியில் நேற்று நடந்தது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விருதை வழங்கினார்; தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் ஜவஹர், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் பிரமோத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விபத்துக்கள் குறைந்தது எப்படி?
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தொழில் துறையில் முன்னேறிய மாநிலமான தமிழகத்தில், மக்கள் தொகையும், வாகன எண்ணிக்கையும் அதிகம். சாலைகளும் தரமாக உள்ளதால், வேகமாக பயணம் செய்கின்றனர். இதனால், விபத்துக்கள் அதிகரித்தன.சாலை பாதுகாப்புக்காக, 65 கோடி ரூபாய் ஒதுக்கினோம். இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரிகளில், சாலை பாதுகாப்பு மன்றங்களை ஏற்படுத்தி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால், விபத்துக்கள் பெருமளவு குறைந்துள்ளன.'சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளில், மற்ற மாநிலங்கள், தமிழகத்தை பின்பற்ற வேண்டும்' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.
வயிற்றுஎரிச்சலின் தலைவர் இந்த செய்தியை,பார்க்கவில்லையா?அறிக்கை எதுவும் வரவில்லையே.