Advertisement

அசாம் மக்களுக்கு சட்ட பாதுகாப்பு: அமித் ஷாவுடன் ஆலோசனை

புதுடில்லி: அசாமில் வசிக்கும் பூர்விக குடிகளுக்கு, குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பது குறித்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

போராட்டம்:
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக வசித்து, நம் நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட, மதத்தினருக்கு குடியுரிமை அளிக்கும், தேசிய குடியுரிமை திருத்த சட்டம், சமீபத்தில் அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தால், அரசியல் சட்டத்தின், 6வது பிரிவு தங்களுக்கு வழங்கியுள்ள அரசியல், மொழி, கலாசார ரீதியிலான பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என, அசாமில் வசிக்கும் பூர்விக குடிகள் கவலை அடைந்துள்ளனர்.

இட ஒதுக்கீடு:
அவர்களின் கவலையை போக்குவதற்கும், அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்குவதற்கும், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பிப்லப் குமார் சர்மா தலைமையிலான உயர்மட்ட குழுவை, மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த குழவினர், நேற்று டில்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷாவை சந்தித்து, சில ஆலோசனைகளை தெரிவித்தனர்.

இது குறித்து, நீதிபதி பிப்லப் குமார் சர்மா கூறியதாவது: பூர்விக குடிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் வகையில், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என, மத்திய அமைச்சரிடம் சில ஆலோசனைகளை தெரிவித்தோம். அவரும், சில வழிமுறைகளை தெரிவித்தார். இது தொடர்பான முழுமையான அறிக்கையை, அடுத்த, 15 நாட்களுக்குள் அமைச்சரிடம் அளிப்போம். அசாம் மக்களுக்கு, சட்டசபையில் உரிய இட ஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்ட பல யோசனைகள் முன் வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் சட்டசபையில், காங்கிரஸ் உள்ளிட்ட, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • blocked user - blocked,மயோட்

    இதுதான் நிர்வாகம் என்பது. வெட்டி வேலைகளில் ஈடுபடாமல் நிபுணர்களை வைத்து தீர்வு காண்பது. சபாஷ்.

Advertisement