Advertisement

தொகுதிக்கு துண்டு போடும் பெண் அமைச்சர்!

Share
தெருவெங்கும் பழைய பொருட்களை எரித்து, மேளம் அடித்தபடி, சிறுவர்கள் போகி கொண்டியிருக்க, புகை மூட்டத்தின் நடுவே, பெஞ்சில் பெரியவர்கள் ஆஜராகினர்.

''நாயரே, பழைய பஜ்ஜி, வடை எல்லாம் இருந்தா, நெருப்புல எடுத்து போடும்...'' என, கிண்டலடித்தபடியே, ''20 பேர் பட்டியல், ஸ்டாலின் கைக்கு போயிருக்கு வே...'' என, மேட்டருக்கு வந்தார்.

''என்ன பட்டியலைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஜெயலலிதா இருந்தப்ப, அ.தி.மு.க., பிரமுகர்களின் நெருங்கிய சொந்தங்கள், தி.மு.க.,வுல இருந்தாலும், அவங்களிடம் பேசக் கூட மாட்டாவ... அவங்க மறைவுக்கு அப்புறம், ரெண்டு கட்சியினரும், 'நண்பேன்டா' மாதிரி பழகிட்டு இருக்காவ வே... ''ரெண்டு தரப்புலயும் தொழில் தொடர்புகளும் இருக்கு... இதைக் கேள்விப்பட்ட ஸ்டாலின், 'நிறுத்தணும்... எல்லாத்தையும் உடனே நிறுத்தணும்'னு கட்சிக்காரங்களுக்கு எச்சரிக்கை குடுத்தாரு வே...

''தான் சொல்லியும் கேட்காதவங்க விபரங்களை சேகரிக்க, ஸ்டாலின் உத்தரவு போட்டிருந்தாரு... இப்படி, 20 எம்.எல்.ஏ.,க்கள் பட்டியல், ஸ்டாலின் கைக்கு போயிருக்கு... இதுல, பாதி பேரு மாஜி அமைச்சர்களாம்... இவங்க மேல என்ன நடவடிக்கை வரும்னு, பட்டியல் குடுத்தவங்க காத்துட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''எல்லாத்தையும் பகுமானமா பிரிச்சவங்க, கல்வித் துறையை மட்டும் கண்டுக்காம விட்டுட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்கு சென்றார் அந்தோணிசாமி.

''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்துார், ராணிப்பேட்டைன்னு அஞ்சு புதிய மாவட்டங்களை, போன வருஷ கடைசியில பிரிச்சாங்களே... இதுக்கு, கலெக்டர், எஸ்.பி.,ன்னு தனித்தனியா அதிகாரிகளும் போட்டாங்க... ''ஆனா, கல்வித் துறையில மட்டும், முதன்மை கல்வி அதிகாரிகளை நியமிக்காம விட்டுட்டாங்க... இதனால, அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், பணிச்சுமையால சிரமப்படுறாங்க... தேர்வு பணிகள், பள்ளிகளுக்கு நலத்திட்டப் பணிகளை செயல்படுத்துறது திண்டாட்டமா இருக்குங்க... 'சி.இ.ஓ., பணியிடங்களை சீக்கிரமே நிரப்பினா நல்லா இருக்கும்'னு அவங்க சொல்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''தொகுதி எனக்கு தான்னு தெம்பா வலம் வராங்க ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''யாரைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''உள்ளாட்சி தேர்தல்ல, திருச்சி மாவட்டத்துல, அ.தி.மு.க., படுதோல்வி அடைஞ்சுடுத்தோல்லியோ... ஒரு காலத்துல, ஜெயலலிதா, எம்.எல்.ஏ.,வா இருந்த, ஸ்ரீரங்கம் தொகுதியில அந்தநல்லுார், மணிகண்டம் யூனியன்களை, தி.மு.க., பிடிச்சுடுத்து ஓய்... ''இதுக்கு, இப்போ, 'ஸ்ரீரங்கம், எம்.எல்.ஏ.,வா இருக்கற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி தான் காரணம்'னு கட்சிக்காரா புலம்பிண்டு இருக்கா... ஆனா, இதைப் பத்தி கவலைப்படாத வளர்மதி, 'சட்டசபை தேர்தல்ல, ஸ்ரீரங்கம் தொகுதி எனக்கு தான்... இப்பவே, அதுக்கான வேலைகளை பாருங்கோன்னு முதல்வரே சொல்லிட்டார்னு, கட்சியினரிடம் தெம்பா சொல்லிண்டு இருக்காங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.

பெரியவர்கள் நகர, பெஞ்ச் அமைதியானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement