Advertisement

கோவையில் பதற்றமான ஓட்டுச்சாவடி 214:கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு

Share
கோவை:கோவை மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில், 84 பள்ளிகளில் உள்ள,214ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. கூடுதல் போலீசார் நியமிப்பதோடு, 'சிசி - டிவி' கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.வரும், 27 மற்றும், 30ம் தேதிகளில், கோவையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
நன்னடத்தை விதிகள் தொடர்பாக விளக்கும், அனைத்து கட்சிகூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், செலவினம் குறித்து, கலெக்டர் ராஜாமணி விளக்கினார்.

அதன்பின், அவர் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், 2,447 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 1,520 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 8,93,645 வாக்காளர்கள் உள்ளனர். 12,336 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு முழுமையாக நடைபெறுவதை உறுதி செய்ய, 119 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விதிமுறைகள் மீறப்படுவதை கண்காணிக்க, இரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒன்று வீதம், 18 பறக்கும் படைகள் மூன்று 'ஷிப்ட்' முறையில் இயங்கும்.கோவை மாவட்டத்தில், 84 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள, 214ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு, கூடுதல் போலீஸ் நியமிப்பதோடு, 'சிசி - டிவி' மூலம் கண்காணிக்க உள்ளோம். ஊரக தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள, 16 சோதனை சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.வேட்பு மனு கொடுக்க நாளை (16ம் தேதி) கடைசி நாள்; 19ம் தேதி வாபஸ் பெறலாம்.
அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி மேற்கொள்ளப்படும். ஜன., 2ல் நடைபெறும் ஓட்டு எண்ணிக்கைக்கு, 12 மையங்கள் தயாராக உள்ளன.உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது போன்ற புகார் ஏதுமில்லை; அதுபோன்ற தகவல் கிடைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
எவ்வளவு செலவு செய்யலாம்?
தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, கடந்த, 9ம் தேதி முதல் வேட்பு மனு பெறப்படுகிறது. ஆறாம் நாளான நேற்று, 1,431 பேர் தாக்கல் செய்தனர். இதுவரை, மொத்தம், 4,295 பேர் தாக்கல் செய்துள்ளனர்.மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 1.70 லட்சம் ரூபாய், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 85 ஆயிரம், கிராம ஊராட்சி தலைவர் - 34 ஆயிரம், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 9,000 ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் செலவின கணக்குகளை உரிய அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement