Advertisement

சவால் விட்டு தோற்றுப் போன, எம்.பி.,க்கள்!

Share
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம், வட கிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவிற்கு வந்திருக்கும் ஹிந்து, சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் இது.லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஒரு நாள் கழித்து ராஜ்யசபாவில் நிறைவேற்ற தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைப்பட்ட நாளில், பார்லிமென்டின் சென்ட்ரல் ஹாலில் என்ன நடந்தது என்பதை, ஒரு தமிழக எம்.பி., விரிவாக விளக்கினார்.எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர் கூடியிருந்தனர். தி.மு.க.,- எம்.பி., சிவாவும், சிவசேனா மூத்த எம்.பி., சஞ்சய் ராவத்தும் ஒன்றாக இருந்தனர். 'லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறி விட்டது. ஆனால், ராஜ்யசபாவில் இதை நிறைவேற்ற விட மாட்டோம். இங்கே, பா.ஜ.,விடம் பெரும்பான்மை இல்லை. மசோதாவை தோற்கடிக்க, எங்களிடம் ஒரு ரகசிய திட்டம் உள்ளது. அமித் ஷாவின் முகத்தில் கரியைப் பூசுவோம்' என, இந்த இருவரும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களிடம் மார்தட்டிக் கொண்டனர். பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த பா.ஜ., - எம்.பி.,யும், அமித் ஷாவிற்கு நெருக்கமானவருமான பூபேந்தர் யாதவ், 'எங்களுக்கு ஆதரவாக, 125 எம்.பி.,க்கள் உள்ளனர்; இது, பெரும்பான்மையை விட அதிகம்; உங்கள் முகத்தில் தான் கரி பூசப்பட உள்ளது' என்றார். ஆனால் சிவாவும், சஞ்சய் ராவத்தும், 'பார்த்துக் கொண்டேயிருங்கள்... உங்கள் முகத்தில் கரி பூசுவது நிச்சயம்' என, அதீத நம்பிக்கையுடன் சவால் விட்டனர்.கடைசியில், குடியுரிமை மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. சிவாவுடன் கை கோர்த்து சவால்விட்ட சஞ்சய் ராவத் கூட, அரசுக்கு எதிராக ஓட்டளிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டார். 'அவ்வளவு நம்பிக்கையுடன் பேசினீர்களே, என்னாச்சு உங்க ரகசிய திட்டம்' என, மற்ற எம்.பி.,க்கள் கேட்க, சிவாவும், சஞ்சய் ராவத்தும் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர்.'சிவாவின் பதவிக்காலம் இன்னும் நான்கே மாதங்களில் முடியப்போகிறது; எதற்கு இவருக்கு இந்த தேவையில்லாத வேலை' என, சில எம்.பி.,க்கள் கேட்கின்றனர்.

மோடி வாரிசு யார்? பார்லி.,யில் வெளிப்படைகுடியுரிமை சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்ட போது, பிரதமர் மோடி சபையில் இல்லை; ஜார்க்கண்ட் மாநில, சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இருந்தார். ராஜ்யசபாவில், இந்த மசோதா விவாதிக்கப்பட்ட போது, பிரதமர் மோடி பேசுவார் என, அனைவரும் எதிர்பார்த்தனர். அப்போது அவர், தேர்தல் பிரசாரத்தில் இருந்து, டில்லி திரும்பி விட்டாலும் சபைக்கு வரவில்லை. லோக்சபா, ராஜ்ய சபா என இரண்டிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான், எதிர்க்கட்சி வாதங்களை எதிர் கொண்டு பதில் அளித்தார். 'குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முழு காரணம் அமித் ஷா தான். இரவு, பகலாக பாடுபட்டு, ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத போதும், கூட்டணி கட்சிகளுடன் பேசி, மசோதாவை நிறைவேற்ற வைத்துள்ளார். இது, அமித் ஷாவின் கடும் உழைப்பு; எங்கே தான் சபையில் பேசினால், அது, அமித் ஷாவின் உழைப்பை குறைத்துவிடும் என்பதால் தான், மோடி பேசவில்லை' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.'காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலும், அமித் ஷா தான் அனைத்து வேலைகளையும் பார்த்தார். மோடி இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்ட விவகாரம் என, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விஷயங்களை அமித் ஷா நிறைவேற்றிவிட்டார்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.'அமித் ஷா தைரியமானவர்; எந்த ஒரு எதிர்ப்பையும் சமாளித்து, எதிர்க்கட்சிகளை ஓட விடுவார். பிரதமர் மோடி போல, அவருக்கு மக்களைக் கவரும் சக்தி இல்லையென்றாலும், வேலை செய்வதில் அவர் கில்லாடி. அமித் ஷா தான் மோடியின் வாரிசு என்பதை, குடியுரிமை சட்டம் நிரூபித்துவிட்டது' என்கின்றனர் சீனியர் பா.ஜ., தலைவர்கள்.

டிபன் பாக்சுக்காக காத்திருக்கும் தோழியர்!மஹாராஷ்டிர மூத்த அரசியல்வாதி சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே. இவர், பாரமதி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று, லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். ஏற்கனவே ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்தவர். கட்சி பாகுபாடு இல்லாமல், அனைத்து எம்.பி.,க்களும் இவருடன் நட்பாக பழகி வருகின்றனர்.மஹாராஷ்டிராவில், சரத் பவாரின் அதிரடி அரசியல் காரணமாக, பா.ஜ., ஆட்சி அமைக்க முடியாமல் போய், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்தன. அதிலிருந்து, சுப்ரியாவின் மதிப்பு அதிகமாக உயர்ந்துவிட்டது. இவருக்கென, தோழியரின் கோஷ்டி ஒன்று உள்ளது. நம்ம ஊர் கனிமொழி, இவருடன் படு நெருக்கம்.இவர் பார்லிமென்டிற்கு வரும் போது, ஒரு பெரிய டிபன் பாக்சுடன் வருகிறார். அதில், வீட்டில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் நிறைந்திருக்கும். பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில், இவர் வருகைக்காக தோழியரின் கோஷ்டி காத்திருக்கும். அங்கு வரும் சுப்ரியா, டிபன் பாக்சை அவர்களிடம் கொடுத்து விடுகிறார். சுவையான மஹாராஷ்டிரா தின்பண்டங்களை சாப்பிட்டு, சுப்ரியாவை பாராட்டுகின்றனர் சக எம்.பி.,க்கள். தன் தோழியருக்காக எப்போதும் உதவி செய்ய தயாராக இருக்கிறார் சுப்ரியா. 'அப்பாவைப் போல உதவும் குணம் கொண்டவர் அவர்' என்கின்றனர் சீனியர் எம்.பி.,க்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement