Advertisement

என்கவுன்டரை ஏன் கொண்டாடுகிறோம்?

Share
தெலுங்கானா மாநிலத்தில், இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காம கொடூரன்களான, நான்கு பேரையும், போலீசார், 'என்கவுன்டர்' செய்தது, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

உணர்ச்சி மேலிடுகையில், அங்கே நீதியை எதிர்பார்க்க முடியாது. அந்த கணத்தில், அது தான் சரியென தோன்றும். கண்ணுக்கு கண்; உயிருக்கு உயிர் என்றால், உலகில் யாரும் உயிரோடு இருக்க முடியாது.ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு, நியாயம் கிடைக்க வேண்டுமே... அதற்கு என்ன தான் வழி? அதை நோக்கி தான், நம் செயல் அமைய வேண்டும்.

தெலுங்கானா என்கவுன்டர் சம்பவம், மூன்று விஷயங்களை முன்னிறுத்து கிறது. என்கவுன்டர் சம்ப வத்தை, மக்கள் ஏன் கொண்டாடுகின்றனர்; பணக்காரர்கள் மீது மட்டும் ஏன், சட்டமும், என்கவுன்டரும் பாய்வதில்லை; ஒருவரை கொல்லும் உரிமையை, போலீசாருக்கு கொடுத்தால், நாடு என்னவாகும்?நம் தேசத்தில், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது என்பது, ஏழு மலை, ஏழு கடல் தாண்டி நடக்கிற, அபூர்வமான விஷயம். ஜாமின், வழக்கு ஒத்தி வைப்பு என, வசதிபடைத்த குற்றவாளியை, நம் சட்டம் ஒன்றுமே செய்ய முடியாது என்பதற்கு, ஏராளமான முன்னுதாரணங்கள் உள்ளன.அவநம்பிக்கைவழக்குகள் வழியே, சட்டம் ஊர்ந்து சென்று, தீர்ப்பு என்ற எல்லையை தொடும்போது, பாதிக்கப் பட்டவரும், குற்றவாளியும் இறந்து, ஒரு மாமாங்கம் முடிந்திருக்கும். அதனால் தான், உடனடி தண்டனை கிடைக்கும்போது, மக்கள் கொண்டாடுகின்றனர். என்கவுன்டரை மக்கள் கொண்டாடுகின்றனர் என்றால், அவர்கள், நீதித்துறை மீது, அவநம்பிக்கையாக உள்ளனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

சட்டத்துறையினர் வருந்த வேண்டும்.
கொண்டாடும் மக்கள் மீதும், போலீசார் மீதும் எதிர்வினை காட்ட வேண்டும் என, நீதிமன்றம் நினைப்பதை விட, இயன்றவரை, வழக்குகளுக்கு விரைந்து தீர்ப்பு வழங்க, விசாரணையை முடுக்கிவிட, சாட்டையை சுழற்ற வேண்டும்.தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என, பேசினால் மட்டும் போதுமா... நடவடிக்கை எடுக்க வேண்டாமா?'அண்ணா... என்னை அடிக்காதீங்கண்ணா... நீங்க சொல்லுறபடியே, டிரஸை கழற்றுறேன்' என, பொள்ளாச்சியில் கதறிய, அந்த தங்கைகளுக்கு, சட்டத்தின் வழியே என்ன நீதி கிடைத்தது? எப்போது கிடைக்கும்?பொள்ளாச்சியில், காமவெறி பிடித்த கொடூரன்கள், ஏழு ஆண்டுகளாக, 150க்கும் மேற்பட்ட பெண்களை, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, பலாத்காரம் செய்து, பணம் பறித்துள்ளனர் என தெரிந்தும், சட்டத்தால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே... குற்றவாளிகள் அதிகார மிக்கவர்கள் என்பதால், ஓரிரு மாதத்திலேயே, குண்டர் தடுப்பு சட்டத்தில் இருந்து வெளிவந்து விட்டனரே... அதற்கு இந்த நீதித் துறையும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் என்ன பதில் சொல்வர்?

பண பலத்திற்கும், அதிகாரத்திற்கும் வளையும் சட்டம் இருக்கும் வரை, பொதுமக்கள், என்கவுன்டர் சம்பவங்களை கொண்டாடத்தான் செய்வர். குற்றவாளிக்கு, நீதிமன்றம் தண்டனை வழங்க தாமதமாகும் என்ற உண்மையை உணர்ந்த மக்கள், போலீசாரின் என்கவுன்டரை ஆதரிக்கின்றனர்.போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்கள், ஆயுதம் எடுப்பர் என்பதை, நீதித் துறை மறந்துவிடக் கூடாது. அன்றைய நாள், நம் நாட்டில் வரவே கூடாது. அதற்கு, நீதிமன்றங்கள், வழக்குகளை விரைந்து முடித்து, பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்.பணம் படைத்தோர் மீது, ஏன் போலீசாரின் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்வதில்லை? கொடிய வர், எளியர் என்றால் ஏறி மிதிக்கும் போலீசார், வலியவர் என்றால், பதுங்குவது ஏன்?கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளைஅடித்தவன், சில கோடி ரூபாய்க்கு வழக்கறிஞர்களை நியமித்து, 100 ஆண்டுகளுக்கு, வழக்கை இழுத்தடிக்கும் கொடுமை நடக்கிறதே...நம் நீதி தேவதைக்கு, குற்றம் முக்கியமில்லை; குற்றவாளி யார் என்பது தான் முக்கியமாக இருக்கிறது!நம் நாட்டில், சட்டமே உச்சமாக இருக்க வேண்டும்; தண்டனை வழங்கும் அதிகாரம், நீதிபதிகளுக்கு மட்டுமே, உரியதாக இருக்க வேண்டும். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, தீயிட்டு எரித்த, ஐதராபாத் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

கட்ட பஞ்சாயத்துதண்டனை வழங்கும் அதிகாரம், போலீசாருக்கு யார் கொடுத்தது? மக்களின் பாராட்டு, நாளை, யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற தைரியம், போலீசாருக்கு கொடுக்குமே...போலீசார், அத்தனை பேரும் உத்தமர்களா என்ன? சாலையோர கடைகளில், கையேந்தியும், ரவுடிகளிடம் மாமுல் பெற்றும், காவல் நிலையத்தில் கட்ட பஞ்சாயத்து நடத்தும் போலீசார், என்கவுன்டர் சம்பவத்தால், நீதி காவலராகிவிட்டனரா?குற்றவாளிகள் விசாரிக்கப்பட வேண்டும்; சட்டத்தின் படி, தண்டனை பெற வேண்டும். அதுவே, நம் ஜனநாயகம்; நல்ல தேசத்திற்கான அடையாளம்.நேற்று குற்றம் நடந்தது... இன்று, இவர்கள் தான் குற்றவாளிகள் என, போலீசார் முடிவெடுத்து, என்கவுன்டர் செய்து விட்டனர் என்றால், சர்வாதிகார நாடா இது?திட்டமிடப்பட்டு நடந்த, என்கவுன்டர் சம்பவம், கொலை குற்றத்திற்கு சமமானது; தாமதிக்கப்படும் நீதி, அநீதியானது. இரண்டிற்கும் இடையே, ஊசலில் ஆடிக்கொண்டிருக்கிறது, நியாயம்.

நீதி வேண்டும்'நிர்பயா' வழக்கில் குற்ற வாளிகளை துாக்கிலிட, ஆட்கள் இல்லை; பொள்ளாச்சி சம்பவத்தில், கொடூரன்கள் யார் என, இன்னும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில் தான், ஐதராபாத் குற்றவாளிகள் மீதான என்கவுன்டர் சம்பவத்தை, மக்கள் கொண்டாடினர் என்பதை, மனித உரிமை ஆர்வலர்களும், நீதிதுறையினரும் புரிந்து கொள்ள வேண்டும்.சாதாரண பொதுஜனம் எதிர்பார்ப்பது, ஒன்று தான்... அது, நீதி! அதை விரைந்து கிடைக்க செய்ய வேண்டிய கடமையை, நீதித்துறை மேற்கொள்ள வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement