Advertisement

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட குட்டி கட்சிகள்!

Share
''புது மாவட்டத்துக்கு போக மாட்டேன்னு அடம் பிடிக்கறா ஓய்...'' என, முதல் விஷயத்தை பேச ஆரம்பித்தார், குப்பண்ணா.

''சமீபத்துல, நிறைய மாவட்டங்களை பிரிச்சாங்களே... நீங்க, எந்த மாவட்டத்தைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''காஞ்சிபுரத்தை பிரித்து, செங்கல்பட்டு மாவட்டம் ஆரம்பிச்சிருக்காளே... செங்கல்பட்டுல பணியாற்ற, வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கினா ஓய்... ''இப்படி, தாசில்தார், துணை தாசில்தார், உதவியாளர், ஓட்டுனர்னு பலரும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு போனா... புது மாவட்டத்துல, துணை தாசில்தார்கள் குறைவா இருந்ததால, ஜூனியர் நிலையில இருந்த ஏழு துணை தாசில்தார்களை, அங்க மாத்தி, அதிகாரிகள் உத்தரவு போட்டா... ''ஆனா, அவாள்லாம் காஞ்சிபுரத்தை விட்டு, நகர மாட்டேன்னு அடம் பிடிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''உதவித் தொகை நிலுவை வச்சிருக்காங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அன்வர்பாய்.

''யாருக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில, முதுநிலை மருத்துவ படிப்புல, வருஷா வருஷம், 100 டாக்டர்களை சேர்க்கிறாங்க... இதுல, 50 சதவீதம் அரசு பணியில இருக்கிற டாக்டர்களுக்கும், 50 சதவீதம் மத்த டாக்டர்களுக்கும், 'சீட்' குடுக்கிறாங்க பா... ''இவங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை குடுப்பாங்க... அந்த வகையில, 2017, 2018ம் வருஷம், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகள்ல சேர்ந்த அரசு டாக்டர்களுக்கு, மாதாந்திர உதவித் தொகையை, இதுவரைக்கும் தரலை பா...

''அரசு டாக்டர்களின் மாதச் சம்பளத்துக்கு இணையான இந்த உதவித்தொகை மட்டும், ஒவ்வொருத்தருக்கும், அஞ்சுல இருந்து, 10 லட்சம் ரூபாய் வரை பாக்கி இருக்குது... இது சம்பந்தமா, சுகாதாரத் துறை அமைச்சரை பார்த்து முறையிட, அவங்க முடிவு பண்ணிஇருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டுனவங்க கதை கந்தலாயிட்டுல்லா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாருங்க அவங்க...'' என, விசாரித்தார் அந்தோணிசாமி.

''முக்குலத்தோர் புலிப்படை, கருணாஸ், மனித நேய ஜனநாயக கட்சி, தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை, தனியரசு ஆகிய மூணு பேரும், 2016 சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க., கூட்டணியில, இரட்டை இலை சின்னத்துல நின்னு, எம்.எல்.ஏ., ஆனாங்கல்லா... ''ஜெயலலிதா இறந்ததும், இவங்க மூணு பேரும், ஒரு நாள் தினகரன், மறுநாள் ஸ்டாலின்னு, தாவல் அரசியல் நடத்தி, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி குடுத்துட்டு இருந்தாவ வே...

''இப்ப, ஆளுங்கட்சிக்கு முழு மெஜாரிட்டி இருக்கிறதால, இவங்க மூணு பேரையும், அ.தி.மு.க., தலைமை கண்டுக்கலை... உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பேச்சுக்கும், இந்த மூணு கட்சிகளையும் கூப்பிடலை... ''இதே மாதிரி, கிருஷ்ணசாமியின், புதிய தமிழகம், ஜான் பாண்டியனின், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தையும், அ.தி.மு.க., தரப்பு, 'கழற்றி' விட்டுட்டு... இதனால, அஞ்சு பேரும் அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாம முழியா முழிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட கதையாகிடுச்சுன்னு சொல்லுங்க...'' என சிரித்தபடியே, அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • karutthu - nainital,இந்தியா

    ஏன் இவர்கள் தினகரனிடம் சீட் கேட்டு போகவேண்டியது தானே

Advertisement