Load Image
dinamalar telegram
Advertisement

தீர்க்க தரிசன மகான்

Tamil News
ADVERTISEMENT
பாரதத்தாய் ஈன்றெடுத்த கவிஞர்களில் முதன்மையானவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தமிழ்நாடு செய்த தவப் பயனாய் அவர் நம்மிடையே தோன்றினார். வள்ளுவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் கவிச்சக்கரவர்த்தி கம்பன் அவதரித்தார். கம்பருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மகாகவி பாரதியார் தோன்றினார்.

இவ்வுலகம் உய்வுற வேண்டும் என்றும், நம் தாய் நாடு சிறப்புற்று மேன்மையுற வேண்டும் என்றும், தமிழ்மொழி எந்நாளும் தழைத்தோங்க வேண்டும் என்றும், அயராது பாடுபட்டு 39 வது வயது வரை மட்டுமே வாழ்ந்து அமரத்துவம் அடைந்த அந்த மாபெரும் கவிஞனை தமிழராய் பிறந்த அனைவரும் போற்றி கொண்டாட கடமைப்பட்டுள்ளோம்.

பாரதியின் கவிதைகள் தாகூரின் கீதாஞ்சலியை காட்டிலும் உயர்வானது என்பது அறிஞர்களின் கருத்து. கவிஞர்களில் யார் உயர்ந்தவர் என்று கேட்பது உசிதமல்ல. ஆயினும் பாரதி மிக உயர்ந்த கவிஞன். ஏனெனில் அவர் உயர்ந்த எண்ணங்களை கொண்ட ஒரு சிறந்த மனிதர்; அற்புத மாமனிதர்.

சிலாகித்த கவிமணி''பாட்டுக்கொரு புலவன் பாரதி அடா! - அவன்பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானே, அடா!கேட்டுக்கிறு கிறுத்துப்போனேனே அடா!- அந்தகிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!,''

என்று பாரதியின் கவிதைகளை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலாகித்து எழுதியிருக்கிறார். அவர் தேசிய கவிஞர் என்று தெரிந்திருந்தாலும், அவரது கவிதைகள் அவரை நமக்கு அவர் ஓர் சிறந்த முற்போக்குவாதி, நேர்மறை சிந்தனையாளர், ஆன்மிக வாதி, சமதர்ம நோக்கர், தீர்க்கதரிசி, பெண்ணுரிமை வாதி, பெண் விடுதலை சிந்தனையாளர் என அடையாளம் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மனித நேய செம்மல் என்றும் பல்வேறுபட்ட முகங்களை கொண்ட நற்பண்புகள் நிறைந்த ஓர் மாமனிதர் என்றும் அடையாளம் காட்டுகின்றன.

தேச சேவை, மக்கள் சேவை, தமிழுக்கு சேவை என்று தன் வாழ்வை அர்பணித்த ஒரு அவதார புருஷன் என்றே விளக்குகின்றன. தேசியம், தமிழ் என்பது போக அவர் கவிதைகளில் மிக துாக்கலாக நிற்கும் மூன்று விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

முற்போக்கு சிந்தனைகளும், சுய முன்னேற்ற கருத்துக்களும், நேர்மறை எண்ணங்களும். சமத்துவ சமதர்ம சமரச சமூக நோக்கு. பெண்மைக்கு அளிக்கும் பெருமையும், உயர்வும், எனலாம்.தேச பக்தி வீரர்உண்மையான தேசபக்தி என்றால் என்று தன் வாழ்விலும், பாடல்களிலும் சொல்லிச் சென்றவர் பாரதி. ''பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு,'' என்று தொடங்கி நம்நாட்டு பெருமைகளை பறைசாற்றியவர்.''எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிஇருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்துசிறந்ததும் இந்நாடே,'' என்று தாய்நாட்டு சிறப்புக்களை கூறி வணக்கம் செலுத்துகிறார். அத்துடன்...''செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே,'' என்று தமிழ் நாட்டின் பால் கொண்ட ஆழ்ந்த அன்பையும் வெளிப்படுத்துகிறார்.''வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்!வாழிய பாரத மணித்திருநாடு!,'' என்று பாடினார். மேலும், ''செப்பு மொழி பதினெட்டுடைபோள்; எனிற்சிந்தனை ஒன்றுடையாள்,'' என்றும் கூறி தேச ஒற்றுமையின் இன்றியமையாமையை எடுத்துக் கூறுகிறார்.

விடுதலை தாகம்
''என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்என்றே எமதன்னை கை விலங்குகள் போகும்?என்றெ எமதின்னல்கள் தீர்ந்து போய் யாகுமே?,'' என்று நம் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக ஏங்கியவர்.''தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைகண்ணீராற் காத்தோம்; கருகத்திருவுளமோ?ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்வாராது போல் வந்த மாமணியைத் தோற்போமோ?,'' என்று ஆதங்கப்படுகிறார்.பாரதியின் கனவுஅன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு ஆளாகி அல்லல்கள் அனுபவித்து, அந்த அல்லல்களால் மனம் உடையாமல், நோக்கம் மாறாமல் நிமிர்ந்து நின்றவர் பாரதி. அன்று, அவர் கண்ட கனவு - சுதந்திர கனவு இன்று நனவாயிற்று.

தேசிய பண்பு கொண்டு நாட்டு மக்களை தட்டியெழுப்பிய பெருமை பாரதியை விட வேறு யாருக்கும் கிடையாது.''நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல்,இமைப்பொழுதும் சோராதிருத்தல்,'' என்று தன்னிலை விளக்கம் கூறி விட்டு...'' என்றன் பாட்டுத் திறத்தாலே - இவ்வையகத்தை பாவித்திட வேணும்,'' என்றும் அவாவுற்றார்.தமிழ் மீது காதல்தமிழ் மீது அவருக்கிருந்த காதலும், பற்றும் அளவிடற்கரியது.''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போலஇனிதாவது எங்கும் காணோம்;யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,வள்ளுவர் போல், இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,'' என்றார்.மொத்தம் 11 மொழிகள் பேசத் தெரிந்தவர் பாரதியார். அவரை தவிர யாருக்கு, ''யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்,'' என்று கூற தகுதியிருக்கிறது? எல்லா மொழிகளையும் ஒன்றாகக் கண்டதால் தான், ''சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்தே' என்றும் பாடினார்.

''கற்றாரை கற்றாரே காமுறுவர்,'' என்பது போல் தான் ஒரு உயர்ந்த கவிஞனாக இருந்த படியால் தான் வள்ளுவரையும், கம்பனையும், இளங்கோவையும் அவரால் மனதார போற்ற முடிந்தது.ஆனந்த சுதந்திரம்எவரெஸ்ட் சிகரத்தில் டென்சிங் முதலில் ஏறி சாதனை படைத்தது 1953ல். ஆனால் பாரதியார் 1921 லேயே ''வெள்ளிப்பனி மலையில் மீதுலாவுவோம்- அடிமேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்,'' என்று தீர்க்கத் தரிசனத்தோடு பாடினார்.வானொலி கருவியைப்பற்றி இந்தியா அறிந்து கொள்வதற்கு முன்னரே, ''காசி நகர்ப்புலவர் பேசுமுரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்,'' என்றும் பாடியவர், நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகளுக்கு முன்னரே 1920 ல் ''ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று... ஆடுவோமே,'' என்று பாடியது அவரது தீர்க்கத் தரிசனமன்றி வேறென்ன? ஒரு முறை பாரதியாரின் நண்பர் கிருஷ்ணமாச்சாரியார், ''மகான்கள் தீர்க்காயுசா இல்லாமல் போய் விடுகிறார்களே? என்ன காரணம்?'' என்று அவரிடம் கேட்க அவர் சொன்ன பதில், ''மகான்கள் பூலோகத்திற்கு தேவதுாதர்கள். பூவுலகில் ஜீவராசிகள் மேன்மைக்காக அவர்கள் உதிக்கிறார்கள். அவர்கள் வந்த காரியம் ஆனதும், இவ்வுலகத்தில் நிற்க மாட்டார்கள், மறைந்து விடுவார்கள்,'' என்றார்.

நற்குணங்கள்
சுவாமி விவேகானந்தர் 40 வயதில் காலமானார்; அவருடைய சிஷ்யை சகோதரி நிவேதிதா 40 வயதில் காலமானார். பாரதியின் கூற்று இந்த விஷயத்தில் பொருந்தி வருவது ஆச்சரியம். அவருடைய இறுதி காலத்தில் நோயுற்று இருந்தபோது ஒரு மருத்துவரை நண்பர் அழைத்து வந்து, அவர் பரிசோதித்த பின் மருந்து கொடுக்க விரும்பினார்.

எவ்வளவோ எடுத்து சொல்லி வேண்டிய பின்னரும் பாரதியார் மருந்து எடுத்து கொள்ள பிடிவாதமாக மறுத்து விட்டார். அவரது அவதார நோக்கம் பூவுலக வாழ்க்கையில் முடிந்து விட்டது என்று அவர் நினைத்திருக்கலாம்.

வாய்மை, வீரம், பெண்களைப் பேணல், எளியோரை ஏற்றல், சுதந்திர வேட்கை, ஒற்றுமையுணர்ச்சி போன்ற எல்லா நற்குணங்களும் பாரதியார் போற்றி பாடியவை. அவரிடம் இக்குணங்கள் நீக்கமற நிறைந்திருந்ததால் தான் இது சாத்தியமாயிற்று.உத்தமமான மனிதன்; தேசத்தை, தமிழை, மக்களை நேசித்த மாபெரும் கவிஞன்; ஓர் அவதார புருஷன் மகாகவி பாரதி. அவரை போற்றி அவர் எண்ணங்களின்படி செயல்பட்டால் தமிழும், நம் நாடும் வளம் பெற்று வளரும். - டாக்டர். எஸ். ஏகநாதபிள்ளை முன்னாள் பேராசிரியர்மதுரை மருத்துவ கல்லுாரி 98421 68136
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement