Advertisement

அழுகல் நோயால் விலையேறியது வெங்காயம்

Share
வெங்காய விலையேற்றத்திற்கு காரணம்....?
வெங்காய விலையேற்றம் விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் அல்ல. நாடு முழுவதும் நிலவுகிறது. வெங்காயத்தில் பருவநிலையால் அழுகல் நோய் ஏற்படுகிறது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்துவிட்டது. நம் அன்றாட உணவில் வெங்காயம் முக்கிய பங்கு வகிப்பதும் விலையேற்றத்திற்கு ஒரு காரணம்.
மாவட்டத்தில் வெங்காய பயிர் உற்பத்தி....?
விருதுநகர் மாவட்டத்தில் 692 எக்டேரில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. காரியாபட்டி, திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதை 90 முதல் 110 நாட்களில் அறுவடை செய்து விடலாம்
வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் ஏன்...?
பொதுவாக விவசாயிகள் 'விதை வெங்காயம்' மூலமே வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர். அதை வாங்கும் போது நல்ல திரட்சியான, நோய் தாக்காத, அழுகலற்ற விதை வெங்காயத்தை வாங்க வேண்டும். தவறும் பட்சத்தில் வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் தாக்கப்படுகிறது.
மாவட்டத்தில் நோய் பாதிப்பு உள்ளதா...?
2 ஆண்டுகளுக்கு முன்பு காரியாபட்டி பகுதியில் அழுகல் நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. தொடர்ச்சியாக நடத்தப்பட்ட முகாம்கள் மூலம் தற்போது பெருமளவில் குறைந்து விட்டது. திருச்சுழி களத்துாரில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டது. அதையும் துவக்க கட்டத்திலே கண்டறிந்து நடவடிக்கை எடுத்துவிட்டோம்.
கட்டுப்படுத்த என்ன செய்யலாம்....?
வெங்காய பயிரை நடும்போது சூடாமோனாஸ், டிரைக்கோடெர்மா, விரிடி ஆகிய இயற்கை பூஞ்சாணங்களை கலந்து வேரில் நனையும் படி தெளிக்க வேண்டும். இதன் மூலம் வேர் அழுகல் நோயை தவிர்க்கலாம். இல்லையெனில் தோட்டக்கலைத்துறையில் வழங்கப்படும் வெங்காய விதைகளை வாங்கி நாற்று நட வேண்டும். இதில் நோய் தாக்கம் ஏற்படாது.
விவசாயிகள் கவனிக்க வேண்டியவை...?
பருவநிலை மாற்றத்தின் காரணமாக மிளகாய், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களில் இலை புள்ளி நோய் ஏற்படுகிறது. துவக்க கட்டத்தில் கண்டறிந்தால் எளிதில் கட்டுபடுத்தி விடலாம். பொதுவாக காய்கறி பயிர்களை இடைவெளி விட்டு நடுவதன் மூலம் நோய் தாக்கம், பூச்சி தாக்கத்தை குறைக்கலாம்.துறை ரீதியான நடவடிக்கைகள்...?நோய் தாக்குதல் குறித்து தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் மீண்டும் நோய் தாக்கம் ஏற்பட்டால் அங்கு முகாமிட்டு பயிர்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement