Advertisement

களத்தில் குதிக்கும் ஆசை, பலருக்கும் தலைவரு, நாந்தான்...!

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத் தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், இன்று தொடங்குகிறது. பல்வேறு ஊராட்சிகளில், தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களுடன், ஊர் மக்கள் ஆலோசனை நடத்தி, போட்டியைத் தவிர்க்க விரும்பினர்.
ஆனால், பெரும்பாலான போட்டியாளர்கள், போட்டியில் இருந்து விலக விரும்பாததால், கிராமங்கள் தேர்தல் மல்லுக்கட்டுக்குத் தயா ராகி வருகின்றன.மாநில தேர்தல் ஆணையம், ஒன்பது மாவட்டங்கள் நீங்கலாக ஊரக உள்ளாட்சி தேர்தல், இரு கட்டங்களாக நடக்கும் என அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 27ம் தேதி, முதல் கட்டமாக, திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனுார் மற்றும் தாராபுரம் ஆகிய ஏழு ஒன்றியங்கள்; 30ம் தேதி, இரண்டாம் கட்டமாக, அவிநாசி, பொங்கலுார், குண்டடம், குடிமங்கலம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய ஆறு ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அதன் வாயிலாக, 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்; 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்; 265 ஊராட்சி மன்ற தலைவர்கள்; 2295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.மொத்தம், ஒன்பது லட்சத்து, 95 ஆயிரத்து, 765 வாக்காளர்கள் உள்ள நிலையில், 13 ஊராட்சி ஒன்றியங்களில், 1704 ஓட்டுச்சாவடிகள், 129 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணிக்கைக்கு, 13 ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரே நேரத்தில், நான்கு பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதால், அதற்கு வெவ்வேறு நிறங்களில் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளது.வேட்புமனுதாக்கல் இன்று துவங்கி, வரும், 16ம் தேதி வரை நடக்கிறது. 17ம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலனை, 19ம் தேதி, வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு நாளன்று, காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை, 5:00 வரை நடக்கிறது.
ஓட்டு எண்ணிக்கை, ஜன., 2ம் தேதி நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர் பதவி ஏற்பு, 6ம் தேதி நடக்கிறது.மாவட்டக்குழு தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல், ஜன.,11ம் தேதி நடக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளில் இருந்தே, கிராமங்களில், தலைவர் பதவிக்கு போட்டியிட பலரும் ஆயத்தமாகிய நிலையில் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யவும் உள்ளனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. பல்வேறு ஊராட்சிகளில், போட்டியிட விரும்புபவர்கள் மற்றும் ஊர் மக்கள் கூட்டம் நடந்துள்ளது.
இதில், பெரும்பாலும் போட்டியாளர்கள் சமரசத்துக்கு வரவில்லை. 'நாந்தான் ஊராட் சித் தலைவராகணும்' என்று கூறி வருகின்றனர்.இதேபோல், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் போட்டி கடுமையாகியுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்களும் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement