Advertisement

மாரநாடு கால்வாயின் குறுக்கே ஷட்டர்கள் அமைக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்புவனம்:மாரநாடு கால்வாயின் குறுக்கே டி.வேளாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல ஷட்டர்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வைகை ஆற்றின் வலது, இடது பிரதான கால்வாய் மூலம் திருப்புவனம் விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். இதில் வலது கால்வாய் மூலம் திருப்புவனம், பிரமனூர், மாரநாடு, திருப்பாச்சேத்திக்கு வைகை அணை தண்ணீர் செல்கிறது. லாடனேந்தல் தடுப்பணையில் இருந்து வலது பிரதான கால்வாய் மூலம் மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சுமார் 4 கி.மீ., தூரத்தில் டி.வேளாங்குளம் கண்மாய்க்கு தனியாக கால்வாய் பிரிகிறது. இந்த கால்வாய் முகப்பில் ஷட்டர்கள் இல்லாததால், டி.வேளாங்குளம், மாரநாடு ஆகிய இரு கண்மாயகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் பாதையை அடைத்துதான் டி.வேளாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்த ஆண்டு அக்கால்வாயை அடைக்க பொதுப்பணித்துறையினர் மறுத்துவிட்டனர்.
இதனால் சாலை மறியலில் ஈடுபட போவதாக டி.வேளாங்குளம் விவசாயிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக துரிதகதியில் டி.வேளாங்குளம் கால்வாய் தூர் வாரப்பட்டு வருகிறது. கலெக்டர் ஜெயகாந்தன் தலையிட்டு, மாரநாடு கால்வாயில் ஷட்டர்கள் அமைத்து இரு கிராமங்களுக்கும் பிரச்சனையின்றி தண்ணீர் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து டி.வேளாங்குளம் விவசாயிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் டி.வேளாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கண்மாய் நீரை நம்பி 450 ஏக்கர பாசன விவசயிகள் உள்ளனர். தென்னை, வாழை, நெல் போன்றவற்றை பயிரிட்டு வந்தும், முறையாக தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கிறது. எனவே ஷட்டர்கள் அமைத்து, தண்ணீர் வழங்கினால் பிரச்னை எழாது. இதை அரசு விரைந்து செய்யய வேண்டும், என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement