Advertisement

நாளை துவக்கம்! வேட்புமனு தாக்கல்: கட்சியினர் சுறுசுறு

திருப்பூர்:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மீண்டும் வெளியாகியுள்ள நிலையில், இம்முறை தேர்தல் நடந்துவிடும் என்ற நம்பிக்கையுடன், கட்சியினர் களமிறங்க தயாராகி விட்டனர்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகள், 2016 அக்., 25 முதல், தனி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளன. இரண்டு முறை தேர்தல் ரத்தான நிலையில், மீண்டும் நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 வரை, மனுத்தாக்கல் நடக்கும்.
ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு மனுத்தாக்கல் நடக்கும். ஒன்றிய அலுவலகங்களில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மனுத்தாக்கல் நடக்க உள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர்கள், நாளை முதல் மனுத்தாக்கலை துவக்குகின்றனர். வரும், 16ம் தேதி வரை மனுத்தாக்கல் நடக்கும். மனுக்கள் பரிசீலனை, 17ல் நடக்கிறது. வரும், 19ம் தேதி, மனுக்கள் வாபஸ் பெற அவகாசம் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.வரும், 25ம் தேதி மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும். வரும், 27ல் முதல்கட்ட தேர்தலும், 30ம் தேதி
இரண்டாம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. தேர்தல் முடிவு, ஜன., 2ல் வெளியாகிறது.மாவட்டத்தில், திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனுார், தாராபுரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 1,250 பதவிகளுக்கு, 27ம் தேதி தேர்தல் நடக்கும். இரண்டாம் கட்டமாக, அவிநாசி, பொங்கலுார், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 1,497 பதவிகளுக்கு, 30ம் தேதியும் தேர்தல் நடக்க உள்ளது.
'டிபாசிட்' தொகை எவ்வளவு?
ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு, 200 ரூபாய்; ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 600 ரூபாய்; மாவட்ட கவுன்சிலருக்கு, 1000 ரூபாய் 'டிபாசிட்' செலுத்த வேண்டும்.எஸ்.சி., பொது மற்றும் பெண்களுக்கான பதவியாக இருந்தால், முறையே, 100, 300, 500 ரூபாய் 'டிபாசிட்' செலுத்தினால் போதும். ஓட்டுப்பதிவு மட்டும் இரண்டு கட்டமாக நடக்கிறது. மற்றபடி, வேட்புமனு, பரிசீலனை, பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கை, பொதுவாக நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிமிடத்தில் இருந்தே, மாவட்ட அளவிலான உள்ளாட்சி தேர்தல் பணி மீண்டும் சுறுசுறுப்படைந்து உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement