Advertisement

அமைச்சர் மனைவியை ஜெ.,யாக மாற்ற முயற்சி!

Share
''முரசொலி விவகாரம், நாடு கடந்தும் பேசப்படுறது ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''விஷயத்தை சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னையில் உள்ள, முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்துல இருக்கறதா, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கொளுத்தி போட்டார்...

இதையடுத்து, பா.ஜ.,வும், அந்த விவகாரத்தை ஊதி பெரிசாக்கிண்டு இருக்கு ஓய்...

''மறுபக்கம், தி.மு.க.,வும், பதிலடி கொடுத்துண்டு இருக்கு... வழக்கு, 'நோட்டீஸ்' என, விவகாரம் அப்பப்போ கிளம்பறது... இந்நிலையில, பா.ஜ.,வைச் சேர்ந்த, மதுரை இளைஞரணி கோட்ட பொறுப்பாளர் சங்கர்பாண்டி, ஜெர்மனிக்கு போய் போராட்டம் நடத்தியிருக்கார் ஓய்...

''சர்வதேச பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தற இடமான, ஜெர்மனியின், கோலன் நகர்ல, 'முரசொலி மூலப்பத்திரம் எங்கே' என, பதாகையுடன், தனிநபராக போராட்டம் நடத்திட்டு வந்துருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''முரசொலி விவகாரத்தை, சர்வதேச பிரச்னையாக்கிட்டாங்களா... ரொம்ப முக்கியம் பாருங்க...'' என, 'கமென்ட்' அடித்தார், அன்வர்பாய்.

''கஞ்சா சோதனை நடத்தியதால, ஐ.பி.எஸ்., அதிகாரிய இடம் மாத்திட்டாங்கன்னு பேசிக்கிறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''என்ன வே, சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திருச்சி, திருவெறும்பூர் ஏ.எஸ்.பி.,யாக இருந்தவர், டோங்ரே பிரவீன் உமேஷ். இளம் ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், 27ம் தேதி, கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி, மாமரத்துப்பட்டியில் பயிரிட்டிருந்த, கஞ்சா செடிகளை அழிச்சாருங்க...

''அந்த கஞ்சா செடியை வளர்த்து வந்த ரெண்டு பேர், ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகருக்கு, ரொம்ப நெருக்கமானவங்களாம்... அதனால, கஞ்சா செடிய அழிச்ச, அதிகாரி மேல, நடவடிக்கை எடுக்கணுமுன்னு, ரெண்டு பேரும் சொல்லிருக்காங்க...

''அரசியல் பிரமுகரின் உத்தரவுபடி, உடனடியாக டோங்கரேவை, சென்னை கவர்னர் மாளிகை ஏ.எஸ்.பி.,யாக பணியிட மாறுதல் செஞ்சிட்டாங்கன்னு பேசிக்கறாங்க... இந்த அநியாயத்தை எல்லாம் யாரு தட்டி கேட்குறதுங்க...'' என, பெருமூச்சு விட்டார், அந்தோணிசாமி.

''ஜெயலலிதா மாதிரி, அமைச்சரின் மனைவிய மாத்திடுவாங்களோ...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.

''என்ன வே, குண்டை துாக்கி போடுதீரு...'' என, அதிர்ச்சியுடன் கேட்டார், அண்ணாச்சி.

''மதுரையை சேர்ந்த அமைச்சர் ராஜுவின் மனைவி ஜெயந்தி, 'தமிழ்மணி சாரிடபிள் மற்றும் கல்வி அறக்கட்டளை' எனும் அமைப்பை துவங்கி, அதன் தலைவராக இருக்காரு... அவரோட சேவையை பாராட்டி, சென்னை குளோபல் பீஸ் யுனிவர்சிட்டி, சமீபத்தில், கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்துருக்கு பா...

'' இதனால, ரோட்டரி பிளாசம் சங்கம் சார்புல, அமைச்சர் மனைவிக்கு பாராட்டு விழா, மதுரையில நடந்துச்சு... ஜெயந்தியை புகழ்ந்து, கவிதை அரங்கம் நடந்துச்சு... பலர், ஜெயந்தி காலில் விழுந்தாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''அப்போ, நீர் கொடுத்த, 'லீட்' சரிதான் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா, இடத்தை காலி செய்ய, நண்பர்களும் கிளம்பினர்.

எல்லை தாண்டி தொல்லை தரும் தி.மு.க., 'பெரியண்ணன்!'
''நாம எல்லாம், ஒரு வாரம் காணாம போனா, யாரும் தேட மாட்டா... ஆனா, எம்.எல்.ஏ.,ன்னா தேடாம இருப்பாளோ...'' என, யாரிடமோ போனில் பேசியபடியே வந்தார், குப்பண்ணா.

அவர், போனை வைக்கும் வரை காத்திருந்த அண்ணாச்சி, ''எந்த, எம்.எல்.ஏ., காணாம போயிட்டாரு வே...'' எனக் கேட்டார்.

''மதுரை வடக்கு தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, ஊர்ல இருந்தா, தினமும் காலையும், மாலையும், தன் ஆபீசுக்கு வந்துடுவார்... போன வாரம், அஞ்சு நாளா, அவரை ஆபீஸ் பக்கம் பார்க்கவே முடியலை ஓய்...

''சென்னைக்கும் போகலை... இதனால, அவரை தேடி வந்த தொகுதி மக்கள் குழம்பி போயிட்டா... விசாரிச்சப்ப, ராஜன் செல்லப்பா, அஞ்சு நாள் பயணமா, துபாய் போனது தெரிஞ்சுது...

''அரசு சார்புல, வெளிநாடு போக, முதல்வரிடம் அனுமதி கேட்டுண்டே இருந்திருக்கார்... அது தாமதம் ஆனதால, வெறுத்துப் போனவர், சொந்த பயணமா துபாய் போயிட்டு வந்துட்டார்னு சொல்றா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''மரபை உடைச்சு எறிஞ்ச தமிழிசைக்கு பாராட்டுகள் குவியுதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அந்தோணிசாமி.

''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''தெலுங்கானா மாநிலத்துல, சமீபத்துல ஒரு பெண் டாக்டரை, சிலர் பாலியல் பலாத்காரம் பண்ணி கொலை செஞ்ச சம்பவம், நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கே... மாநில கவர்னரான தமிழிசை, பெண் டாக்டர் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல கிளம்பியிருக்காங்க...

''அதுக்கு, கவர்னர் அலுவலக அதிகாரிகள், 'கவர்னர் நேரடியா போறது மரபு கிடையாது... அந்த குடும்பத்தை, கவர்னர் மாளிகைக்கு அழைச்சு ஆறுதல் சொல்லுங்க'ன்னு ஆலோசனை குடுத்திருக்காங்க...

''அதுக்கு தமிழிசை, 'இதுக்கெல்லாம் மரபு பார்க்க வேண்டிய அவசியமில்லை... துக்கத்துல இருக்கிற, அவங்களுக்கு நேர்ல போய் ஆறுதல் சொல்றது தான் முறை'ன்னு, டாக்டர் வீட்டுக்கு போய், ஆறுதல் சொல்லிட்டு வந்திருக்காங்க... இதுக்காக, தமிழிசைக்கு பாராட்டுகள் குவிஞ்சிட்டு இருக்குங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எல்லை தாண்டி மூக்கை நுழைக்கிறார்னு புலம்புதாவ வே...'' என, கடைசி விஷயத்தை கையில் எடுத்தார், அண்ணாச்சி.

''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''திருவண்ணாமலை மாவட்ட, தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ஒருத்தர், தன் சொந்த மாவட்டத்துல மட்டுமல்லாம, மற்ற மாவட்ட கட்சி நிர்வாகிகள் நியமனத்துலயும் தலையிடுதாரு... குறிப்பா, தகுதி இல்லாதவங்களுக்கும், தனக்கு வேண்டியவங்களுக்கும் பதவிகள் குடுங்கன்னு, பரிந்துரை செய்தாரு வே...

''இவரது பெரியண்ணன் போக்கு பிடிக்காம, மூத்த மாவட்டச் செயலர்கள், கடும் அதிருப்தியில இருக்காவ... சமீபத்துல நடந்த, பொதுக்குழு கூட்டத்துக்கு முன்ன, மாநில அளவுல கட்சியில முக்கிய பதவியை வாங்கிடணும்னு, 'மாஜி' அமைச்சர், தலையால தண்ணி குடிச்சாருவே...

''ஆனா, இவரது நாட்டாமையால பாதிக்கப்பட்ட மூத்த மாவட்டச் செயலர்கள், தலைமையிடம் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சதால, அவரது முயற்சி தோல்வியில முடிஞ்சிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி.

''வேலு வரார்... சூடா டீ போடும்...'' என, நாயரிடம் கூறியபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    கஞ்சாச்செடியை அழித்ததால் IPS அதிகாரி மாற்றப்பட்டார். செய்தி. ஆளும்கட்சி பேர்வழிகள் தூண்டுதல். இப்போதெரியுதா நாட்டில் நடக்கும் 98% தில்லுமுல்லு அடாவடி செயல்களுக்கு அரசியல்வாதிகளே காரணம். கட்சியில் உறுப்பினராக இருப்பதே இந்தமாதிரி செயல்களுக்குத்தான்...

  • A R J U N - sennai ,இந்தியா

    கஞ்சாவை அழித்தால் பாராட்டுக்கூட வேண்டாம்,இடமாற்றம் அவசியம் தானா.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்த மாஜிகள் ஆட்டம் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி, தொண்டர்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொடுத்துவிடும் தலைமையோ தாட்சண்யத்தால் அடக்கி வாசிக்க வேண்டி உள்ளது அப்பா இடத்தை வேண்டுமானால் பிடிக்கலாம், அவர் ஆளுமை வருமா என்பது சந்தேகமே

Advertisement