Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை -

'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேட்டி போலவே, உங்கள் பேட்டியும் உள்ளதே; ஒரே உறையில் இரண்டு கத்திகளா அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா என்ற சந்தேகம் எழுகிறது' என, கேட்கத் துாண்டும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. வார்டுகளை முறையாக பிரிக்காமல், இட ஒதுக்கீடு சரி வர வழங்காமல், தேர்தலை நடத்தக் கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். அதற்காகத் தான், உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.


'அங்கு, பிரெஞ்சு மொழியும் உள்ளதே... அதெற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டீர்களே...' என, கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: 'கிடப்பது கிடக்கட்டும்; கிழவனை துாக்கி மனையில் வை' என்பது போல, தமிழக அமைச்சர் பாண்டியராஜன், சென்னையில் உள்ள தமிழாராய்ச்சி மையத்தில், ஹிந்தி மொழிக்கு நடை பாவாடை
விரித்துள்ளார். இது, கண்டனத்திற்குரியது.


'உண்மை தான்; ஆனால், இந்த குடும்பத்தில் சங்கத்தினர் ஜாஸ்தி...' என, கூறத் துாண்டும் வகையில், ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ் பேச்சு: இந்திய ரயில்வே, ஒரு குடும்பம் போன்றது. இந்தியா முழுவதும், இந்த குடும்பத்தினர் உள்ளனர்.ராணுவத்திற்கு அடுத்தபடியாக, ரயில்வே ஊழியர்கள் தான், 24 மணி நேரமும் உழைக்கின்றனர்.

'அவர் வகித்த துறையின் அமைச்சர் நீங்கள் அல்லவா... அதனால், உங்கள் செயல்பாட்டை அவர் இப்படி கண்காணிக்கிறார் போலும்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், நாங்கள் தான் முதல் முதலாக, ஹிந்தி மொழியை அறிமுகம் செய்தோம் என்ற ரீதியில், தி.மு.க., முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.துவக்கத்தில் இருந்தே, அந்த நிறுவனத்தில் ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. இப்போது தான், அந்த,'மாஜி'க்கு அது தெரிந்துள்ளது.


'வரிசையாக ஒவ்வொரு கட்சியினராக போய், பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து வருகிறீர்களே... யாராவது அந்த மக்களுக்கு நிதியுதவி அல்லது பிற உதவி அளிக்கிறீர்களா என்றால் இல்லை...' என, கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 17 பேர் இறந்த விவகாரத்தில், போராடியவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement