Advertisement

அடைமழை பெய்தும் சித்திரை குளத்தில் வறட்சி

மயிலாப்பூர் : சென்னையில், தொடர்ந்து மழை பெய்தும், மயிலாப்பூர் சித்திரைக்குளம், ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காமல் வறண்டு காணப்படுகிறது.

சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 125வது வார்டுக்கு உட்பட்ட, மயிலாப்பூர், சித்திரைக் குளம், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது.தனியார் கோவில் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில், இக்குளம் உள்ளது. சென்னையில், தொடர் மழை பெய்தும், குளத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:குளத்தை சுற்றி, மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள கடைகளால், சாலையில் ஓடும் மழைநீர், குளத்திற்குள் செல்ல வழியில்லாமல் உள்ளது.


கடைகளை அகற்ற, மாநகராட்சி முன்வர வேண்டும்.குளத்திற்கு, மழைநீரை கொண்டு செல்லும் வடிகால்களில், அடைப்பு உள்ளதா என, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:இந்த குளத்திற்கு, 12 இடங்களில் இருந்து, மழைநீர் வடிகால் மூலம் நீர் வருவதற்கான கட்டமைப்பு உள்ளது. இதில், தற்போது, ஏழு இடங்களில், தண்ணீர் நன்றாக வந்து கொண்டுள்ளது.

மற்ற இடங்களை ஆய்வு செய்து வருகிறோம்.செடிகள் முளைத்து காணப்படுவதே, தண்ணீர்தேங்காமல் இருக்க காரணம். துார் வாரும் பணியை, அறக்கட்டளைநிர்வாகிகள் தான் செய்திருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.கபாலீஸ்வரர் கோவில் குளம், சித்திரை குளம் ஆகியவற்றில், தண்ணீர்நிறைந்தால் தான், அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement