Advertisement

ரெண்டு வீடு... கூடவே ரோடு...: ஊரு காச உலையில போடு!

'' காலேஜ் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோவிலுக்கு, சித்ராவும், மித்ராவும் சென்று கொண்டிருந்தனர். திடீரென மழை வரவே, பெருமாள் கோவிலுக்குள் சென்றனர்.
கோவில் வளாகத்தில், தெப்பக்குளம் 'பளிச்' என இருந்ததை பார்த்த மித்ரா, '' அக்கா... என்னால நம்ப முடியலைங்கக்கா. பெருமாள் கோவில் தெப்பக்குளமா, இதுன்னு,'' ஆச்சர்யப்பட்டாள்.

'' அட, உனக்க விஷயம் தெரியாதா? ஐயப்பன் கோவில் ஆறாட்டு விழாவுக்காக குளத்தை பக்தர்களே சுத்தம் பண்ணிட்டாங்க,''


''அதெப்படிங்க்கா... பக்தர்களை சுத்தம் செய்ய விட்டாங்க''


'' அறநிலையத்துறை செயல்படுதா, இல்லையான்று கேள்வியே வந்திருச்சு. ஐயப்பன் கோவில், நிர்வாகத்தினர், ஒரு மாசத்துக்கு முன்னரே, ஆறாட்டு விழாபத்தி, கோவில் இ.ஓ.,வுக்கு தபால் குடுத்திட்டாங்க,''


''ஆனா, அவர் கண்டுக்கலை. ஆறாட்டு தேதியும் நெருங்கியதால், ஐயப்ப பக்தர்களே, மாசுபட்டிருந்த தெப்பக்குளத்தை சுத்தம் பண்ணிட்டாங்க. அப்ப, பல ஆயிரக்கணக்கான காசு இருந்துச்சு. அதையெல்லாம் எடுத்து இ.ஒ.,கிட்ட ஒப்டைச்சுட்டாங்களாம்,''


''ஒரு வேளை நிறைய காசு இருந்துச்சுன்னு, சொன்னா என்ன பண்றதுன்னுட்டு, அவங்க செலவுலயே வீடியோ எடுத்து, ஒரு 'சிடி'யை கோவில் நிர்வாகத்துக்கும் கொடுத்துட்டாங்களாம். இப்ப நீயே சொல்லுடி, கோவில் நிர்வாகத்தின் செயல்பாட்டை...''


'' இதென்னங்க்கா... இப்படி பண்றாங்க? ஏன், அவங்க சுத்தம் பண்ணி கொடுத்தா என்னவாம்? எல்லாத்தையும் பெருமாள் பார்த்திட்டுத்தான் இருக்கிறாரு. டிரஸ்ட் போர்டு இல்லாதது, அதிகாரிகளுக்கு ரொம்ப சவுரியமா போச்சுங்க்கா,'' என, ஆதங்கப்பட்டாள் மித்ரா.


'' ஆமாம்... மித்து, கெட்டுப்போன முட்டை விவகாரம் என்னாச்சுடி?'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


'' இந்த விஷயம் தெரிஞ்ச, கலெக்டர் 'செம காண்டு' ஆகி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிதிட்ட அதுிகாரிகளை கூப்பிட்டு 'செம டோஸ்' விட்டாராம்,''


'' அதுக்கப்புறம், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மையத்துக்கு போய், பேரன்ட்ஸ் முன்னாடி, முட்டையை சாப்பிட்டு காண்பித்து, சமாதானம் செஞ்சாங்களாம்''


'' இதைக்கூட கவனிக்காம அதிகாரிகள் இருக்கிறாங்கன்ன, என்னத்தை சொல்றது மித்து. இதைவிட கொடுமையான மேட்டரு ஒன்று சொல்றேன் கேளு,''


'' சொல்லுங்கக்கா...''


''சமூக பாதுகாப்பு திட்ட ஆர்.ஐ., 30 லட்சம் ரூபாயை ' அபேஸ்' பண்ணிட்டு, கம்பி எண்ணிட்டு இருக்காரில்ல. அவங்க அப்பா, கவர்மென்ட் ஜீப் டிரைவரா இருந்திருக்காரு. டியூட்டி டைமில் இறந்ததால, அவர் மகனுக்கு, கருணை அடிப்படையில் வேலை கிடைச்சிடுச்சு,''


'' சரி கவர்மென்ட் வேலை கிடைச்சிடுச்சுன்னு ஒழுங்கா இருக்காம, கலெக்டர் 'சைன்' போட்டு, பணத்தை லவட்டிட்டாரு. அவரால, ஒட்டுமொத் மாவட்ட நிர்வாகத்துக்கே கெட்ட பேரு வந்திடுச்சுன்னு, அதிகாரிகளும், அலுவலர்களும் நொந்து போயிட்டாங்களாம்,''


''ஆமாம், இப்டி பண்ணா நல்லா பேரா வருங்க்கா.. அக்கா, நீங்க இப்படி சொல்றீங்க. அதே 'டிஸ்ட்ரிக்ட் அட்மினில்' முக்கிய அதிகாரிங்க இரண்டு பேரும் பண்ற வேலையாலும், கெட்ட பேர்தான் வருது,''


''கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடி மித்து,''


''அக்கா.. கிராமங்களில் வளர்ச்சி திட்டத்தை கண்காணிக்கிற பெரிய அதிகாரியும், அவருக்கு அடுத்தபடி உள்ளவரும், 'வைட்டமின் ப' இல்லாம, எந்த வேலையும் பண்றதில்லைன்னு போன வாரம் பேசினோம். ஞாபகம் இருக்குதுங்களா?''


'' இந்த விஷயம் பெரிய அதிகாரிக்கு தெரியக்கூடாதுன்னு, மறைச்சுட்டாங்களாம். இப்படியெல்லாம் பண்றதுக்கு, பேசாம... எம்.பி., எம்.எல்.ஏ., நிதியில் செய்ழ வேலைக்கு, 'ஒர்க் ஆர்டர்'களை எடுத்து கொடுத்திருக்கலாமேன்னு, பி.டி.ஓ.,க்கள் கிண்டலடிக்கிறாங்களாம்,'' என கூறி சிரித்தாள் மித்ரா.


'' ஏன்... மித்து, 'சீப்ப ஒளிச்சு வைச்சிவ்வா, கல்யாணம் நின்னுடுமா? இதெல்லாம் 'டூமச்'டி'' என கோபப்பட்ட சித்ரா, '' அது கிடக்கட்டும்,உள்ளாட்சி தேர்தல் மேட்டர் உண்டா?''


'' அத இல்லாமலாங்க்கா.. மேயர் 'சீட்' கேட்டு, 'மாஜி' சென்னையில் கேம்ப் போட்டிருக்காராம்,''


''ஓஹோ...!''


''மேயர் சீட் வாங்குறதில், ரெண்டு மாஜிக்கும் கடும் போட்டி நிலவுவதாம். வேற கட்சிக்கு போயிட்டு மீண்டும் வந்த'... சாமி'யும் 'சீட் கேட்கிறாராம். இப்படி போட்டி வந்தால், தனக்குத்தான், வார்டு செயலாளர்கள் சப்போர்ட் இருக்குதுன்னு சொல்லி 31 செயலாளர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு 'ஆனந்த' மா 'பெட்டி'யோட பறந்துட்டாராம்,'' என்று சொன்ன மித்ரா,


'' அக்கா... மழை நின்னுடுச்சு..கிளம்பலாங்க்கா,'' என்றதும், சித்ரா வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.புஷ்பா சந்திப்பு வழியாக இருவரும் சென்ற போது, ''ரூரல் ஸ்டேசனில் நடந்தது தெரியுங்களா? என்றால் மித்ரா.


'' ஏன்டி.. என்னாச்சு?''


''அக்கா.. அந்த ஸ்டேசனில், குடும்ப பிரச்னை தொடர்பாக கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த ஒரு பெண்ணிடம் ஒரு ஏட்டு, தரக்குறைவாக பேசியிருக்கிறார்.இது, அதிகாரிகளின் காதுக்கு சென்றதால், அடுத்த நாளே ஏ.ஆர்.,-க்கு மாத்திட்டாங்களாம். அங்கே போய் ஜாயின் பண்ணின அவரிடம் ஏங்க.. 'பாஸ்...'இப்படி செஞ்சீங்கன்னு,' கேட்டாங்களாம்,'' என்றால் மித்ரா.


''லேடீஸ் கிட்ட எப்படி 'பிகேவ்' பண்றதுன்னு தெரியாதா? கரெக்ட் தான், அப்ப தான் மத்தவங்க திருந்துவாங்க,'' என்று சொன்ன சித்ரா, '' ஆனா.. எவ்வளவு சொன்னாலும், திருந்தாத அதிகாரியை என்ன செய்வது?''


''யாருங்க.. அப்படியான அதிகாரி?'' ஆர்வமாக கேட்டாள் மித்ரா.


''நம்ம டிஸ்ட்ரிக்ட் பார்டரில் 'மூல'மா இருக்கிற யூனியனில் உள்ள இன்ஜினியர், பசுமை வீடு திட்டத்தில், தன்னோட கணவர் பெயரில், ரெண்டு ஊரிலும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், மாமனார் பெயரிலும் அரசு நிதியை வாங்கி தந்திருக்கிறார்,''


'' இதுபோக, அவர் வசிக்கும் வீட்டுக்கு போறதுக்கு, 40 லட்சம் ரூபாய் கவர்மென்ட் நிதியில் புதுசா ரோடு போட்டுக்கிட்டாராம். இந்தமாதிரி, தன்னோட வீட்டுக்கு காட்டற அக்கறையை, மத்த பகுதியிலும் காட்டினா, நல்லாருக்கும்னு, கிராம ஜனங்க பேச்கிறாங்களாம்,'' என்று விளக்கிய சித்ரா, 'காந்திமதி ஸ்டோர்ஸ்' என்ற கடை முன் வண்டியை நிறுத்தி, பூஜை பொருட்களை வாங்கினாள்.


அப்போது, வண்டியில் உட்கார்ந்த மித்ரா, '' எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றவருடையது, '' என்றாள்.


'' என்னடி... திடீர்னு தத்துவமெல்லாம் பேசறே'' என கேட்டவாறே, சித்ரா வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.


''ஆமாங்க்கா.. தனியார் சேவை அமைப்பினர் கொடுத்த 'கூலிங் கிளாஸ்'களை அதிகாரி ஒருத்தர் சுருட்டிட்டாருன்னு, போன வாரம் பேசினோம்ல. உடனே, கொடுத்திட்டாங்களாம். இப்படி இருந்தால் மட்டுமே, தன்னார்வலர்கள் உதவி செய்ய முன்வருவாங்கன்னு, அந்த அதிகாரிக்கு ' அட்வைஸ்' பண்ணுவாங்களா? '' என, 'படபட'வென பேசினாள் மித்ரா.


'' என்னடி 'கஜா' புயல் வீசுன மாதிரி பேசுற. அட்வைஸ் பண்ணிட்டா மட்டுமம், திருந்திடுவாரா என்ன? '' என்ற சித்ரா,


'' இந்த இருட்டுக்குள்ள நின்னு வாகன சோதனை நடத்துறதை எப்பதான் நிறுத்துவாங்களோ, தெரியலை'' என ஆவேசப்பட்டாள்.


''எங்க்கா.. கள்ளக்குறிச்சியில ஆன மாதிரி, இங்கேயும் ஏதாவது...'' இழுத்தாள் மித்ரா.


''இல்லடி, அப்படி ஆகாம இருக்கோணும்னா, அதிகாரிகள் திருந்தணும். எப்ப பாரு, பழைய பஸ் ஸ்டாண்ட்டுக்கு எதிரிலுள்ள பாலத்துக்கடியில், சவுத் போலீஸ்காரங்க நின்னுட்டு, 'கை நீட்டுறது பாத்தாதுனுட்டு, டூவிலரை நோக்கி குச்சியுயையும் நீட்டுறாங்க. பகல்னா பரவாயில்லை. ராத்திரி, பன்னிரெண்டு மணிக்கும் இப்படித்தான் பண்றாங்க,''


''வெளிச்சமா இருந்த கூட தெரியாது. திடீர்ன்னு குச்சியை நீட்டினா, யாராவது கீழே விழுந்தாதான் தெரியும். இந்த மாதிரி சோதனை பண்ணுங்கன்னு, யாரு சொன்னது தெரியலே?''


'' அக்கா... இருட்டா இருந்தாதான், 'மாமுல்' வாங்க வசதியாக இருக்கும். ராத்திரி வேலை முடிச்சுட்டு, எப்படா வீட்டுக்கு போவோமுன்னுட்டு, பனியன் கம்பெனி தொழிலாளி போறப்ப குச்சியை நீட்டினா, எரிச்சலாத்தான் இருக்கும், '' என கோபமாக பேசினாள் மித்ரா.


'' ஏன்... இப்படி பண்றாங்கன்னு தெரியலை. இங்க இப்படின்னா, '... ம லை' சப் டிவிஷனில், ரெண்டு டிரைவரோட ஆட்டம் ஜாஸ்தியாயிடுச்சாம், ''


'' அப்படிங்களா.. அது என்ன மேட்டருக்கா?''


'' அங்குள்ள அதிகாரிக்கு டிரைவராக, ரெண்டு போலீஸ்காரங்க பல வஷஷமா, இருக்காங்க. இவங்க ரெண்டு பேரும், 'பார்ட்னர்' போட்டுகிட்டு, பல வேலைகளை செய்யறாங்களாம்.குறிப்பா, சொல்லப்போன, ஏதாவது ரெய்டுன்னா, முன்கூட்டியே , சம்பந்தப்பட்டவர்களுக்கு, 'அலர்ட்' பண்ணிடளாங்களாம்,''


''இது மட்டுமில்ல, அதிகாரியோட பேர சொல்லிட்டு, தினமும் வசூலில்பட்டய கிளப்புறாங்களாம்,'' என்றாள் சித்ரா.


''அட...'ராம...ராம...' இதை யெல்லாம் நீதான் பார்த்துக்கோணும்'' என்ற மித்ரா, '' அக்கா லிங்கேஸ்வரர் ஊரில், செய்யாத வேலைக்கு பிப் போட்டு லவட்டிட்டாங்களாம்,'' புதிர் போட்டாள்.


''அப்படிய... என்ன விஷயம்டி?''


''ரோடு போடற ஆபிசர்கள் வட்டாரம் முழுவதும் மராமத்து வேலை செஞ்சதா சொல்லி, ' டூப்ளிகேட்' பில் போட்டு, பல லட்சத்தை சுருட்டிட்டாங்களாம்.இப்படி இந்த மேட்டர் கசிந்தவுடன், 'பக்... பக்...' ன்னு இருக்காங்களாம். இந்த கூட்டணியில், ஆபிசில் உள்ள அத்தனை பேரும் சம்பந்தப்பட்டிருக்காங்களாம்,''


'' எல்லா டிபார்ட்மென்ட்டும் இப்படித்தான், 'கரெப்ஷனில்' ஊறுது. யாருதான் பூனைக்கு மணி கட்டுவாங்களா?'' என்ற சித்ரா, '' அந்த லிங்கேஸ்வரர் தான் கண்ணை திறக்கணும்''என்றாள்.


''அட.. நீங்க வேற? அவருக்கே பிரச்னைன்னா பாருங்கறேன்...''


''என்னடி மித்து, சொல்றே. ஆண்டவனுக்கே பிரச்னையா?''


''ஆமாங்க்கா. அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 வருஷம் முடியப்போகுது. அடுத்த விழா நடத்தறதுக்கு எந்த ஏற்பாடும் இதுவரை பண்ணலயாம். பெரியே காவிலா இருக்கறதா, இந்த இருந்து ஆரம்பிச்சாதான், ஆறு மாசத்திலாவது வேலை முடியுமாம்,''


''இந்த 'லோக'த்தை ஆளும் 'நாதன்' தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும், '' என்று சொன்ன சித்ரா, ஐயப்பன் கோவில் பார்க்கிங் ஸ்டாண்டியில் வண்டியை நிறுத்தினாள். இருவரும் கோவிலுக்குள் நுழைந்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement