Advertisement

சிகரம் தொடு! சிறப்பு பெறு! வெற்றி வியூகம் வகுத்த தினமலர் சக்சஸ் மந்த்ரா

Share
திருப்பூர்:'தினமலர்' நாளிதழ் சார்பில் திருப்பூரில் நேற்று நடந்த 'சக்சஸ் மந்த்ரா - ஜெயித்துக் காட்டுவோம் 2.0' நிகழ்ச்சியில், அலை கடலென திரண்ட மாணவ, மாணவியர், ''புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பதற்கான ரகசி யத்தை 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சி கற்றுத்தந்தது; சிகரம் தொடுவோம்; சிறப்பு பெறுவோம்!' என, பெருமிதத்துடன் கூறினர்.
'தினமலர்' நாளிதழ், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரின் எதிர்கால நலனில் தீவிர அக்கறை கொண்டுள்ளது. 'ஜெயித்துக்காட்டுவோம்', 'வழிகாட்டி', 'உங்களால் முடியும்', 'அறம் பொருள் ஐ.ஏ.எஸ்.,' 'பட்டம் வினாடி வினா' என பல்வேறு தலைப்புகளின் கீழ், கல்வி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.மாணவ, மாணவியரின் எதிர்கால கல்வித் திட்டம், வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் போன்றவற்றில் 'தினமலர்' நாளிதழ் பங்கெடுத்து வருகிறது.
தற்போது, மாணவ, மாணவியரின் வாழ்வியல் வெற்றியை உறுதி செய்யும் வகையில், 'சக்சஸ் மந்த்ரா - ஜெயித்து காட்டுவோம் 2.0' எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.அமிர்தா விஸ்வ வித்யா பீடம் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியின் வாயிலாக பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளவும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் புதியதொரு எதிர்காலத்தை பெறவும், தேர்வு காலங்களில் உடல் நலம், மன நலத்தை பாதுகாக்கவும், மாணவர்களுக்கு ரகசியங்களை அள்ளித்தருகிறது.

'சக்சஸ் மந்த்ரா ஜெயித்துக்காட்டுவோம் 2.0' வழிகாட்டுதல் நிகழ்ச்சி, திருப்பூர் தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் கல்யாண மண்டபத்தில், நேற்று நடந்தது. காலை 8:00 மணி முதலே பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் அரங்கில் குவியத் துவங்கினர்.நிகழ்ச்சியின் துவக்கத்தில், கோவை அமிர்தா பல்கலை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் அன்பு உதய சங்கர் பேசியதாவது:அறிவைப் பெறுவதற்கும், சிறந்த குடிமக்களாக உருவாகி, வாழ்க்கையில் வெற்றி மட்டுமின்றி மேன்மை அடையச் செய்ய உதவுவதே கல்வியின் நோக்கம்.இறைவழிபாடும், குரு வழிபாடும் இருந்தால் மட்டுமே ஒவ்வொருவரும் தனது வெற்றியை நிரூபிக்க முடியும்.
பெற்றோர்களின் வழிகாட்டுதல், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையை வளர்க்கும். இன்னும் சில மாதங்களில், தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், அதற்கான நேர விரயத்தை தவிர்க்க வேண்டும்.மொபைல் போன்களை தவிர்த்து, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கான 'டிவி', உள்ளிட்ட பொழுதுபோக்குகளை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தைசிறப்பாக கொண்டு செல்ல கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். அங்கு, நேரடியாகச் சென்று, அக்கல்லுாரியில் உள்ள கட்டமைப்பு வசதி, அங்குள்ள பாடப்பிரிவுகள், மாணவர்களின் ஒழுக்கம், பேராசிரியர்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்து கொள்ள வேண்டும், காரணம், வேலைவாய்ப்புக்கு, தேர்வு செய்யும் பாடப்பிரிவு, 40 சதவீதம் அவசியம் என்றால், 60 சதவீதம், கல்வி பயிலும் கல்லுாரியைப் பொறுத்து அமைகிறது.
பாடத்திட்டத்திற்குள் முடங்கி விடாமல், புதிய தேடுதல்களை கண்டறிய வேண்டும். மாணவர்களின் சுயசிந்தனைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வியைச் சுகமான உணர்வாக கருதுங்கள்.இவ்வாறு, அன்பு உதயசங்கர் பேசினார்.
நிகழ்ச்சியில், பொதுத் தேர்வை பயமின்றி எழுதுவதற்கான ஆலோசனைகள், புதிய பாடத்திட்டம் தயாரிப்பதற்கான காரணம், நோக்கம், புதிய பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு நடைபெறும் விதம் உட்பட பல்வேறு தலைப்புகளில் ஆலோசனை வழங்கப்பட்டது. தவிர, மாணவ, மாணவியர் அனைவருக்கும் குறிப்புகள் மற்றும் வினாக்கள் அடங்கிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அலைகடலென திரண்ட மாணவ, மாணவியர், 'புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பதற்கான ரகசியத்தை 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சி கற்றுக்கொடுத்தது; சிகரத்தைத் தொடுவோம்; சிறப்பு பெறுவோம்' என்று பெருமிதத்துடன் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement