Advertisement

கேரள மாணவி மரணத்தின் பின்னணி என்ன?

Share
ஐ.ஐ.டி., அறிக்கை தர உயர்கல்வி துறை உத்தரவு

சென்னை:சென்னை ஐ.ஐ.டி.யில், மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்த, உண்மை நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கு, மத்திய உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்த, அப்துல் லத்தீப்பின் மகள், பாத்திமா லத்தீப், ௨௧. இவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தார். ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, விடுதியில் தங்கியிருந்த மாணவி, ஒரு வாரத்திற்கு முன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டைரியில் பதிவுஇதுகுறித்து, சென்னை, கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பின், மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு, வழக்கு மாற்றப்பட்டது.மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து மனு அளித்துள்ளார். டி.ஜி.பி., திரிபாதியிடமும் மனு கொடுத்தார். அதேநேரத்தில், 'தன் தற்கொலைக்கு, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் சுதர்ஷன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கரா, மிலின்ட் பிரமே ஆகியோரே காரணம்' என, அவர்களின் பெயர்களை, மாணவி பாத்திமா எழுதி வைத்துள்ளார். தன் மொபைல் போனில் உள்ள, டைரியில் இதை பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை ஐ.ஐ.டி.,யில், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும், அதிகாரிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. அதனால், மத்திய உயர்கல்வி செயலர் சுப்ரமணியம், நேற்று சென்னை ஐ.ஐ.டி.,க்கு வந்து, முதல் கட்ட விசாரணை நடத்தினார். அவருடன், மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளும் வந்திருந்தனர்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, மாணவர் விவகாரத்துறை இயக்குனர் சிவகுமார் மற்றும் மாணவி பாத்திமா படித்த, சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையின் பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஐ.ஐ.டி.,யில் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் வகையில், பேராசிரியர்களின் துன்புறுத்தல் உள்ளதா?மாணவ, மாணவியரிடம் ஜாதி, மத ரீதியான பாகுபாடு காட்டப்படுகிறதா; மாணவியருக்கான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ள, மாணவர் மற்றும் பேராசிரியர்களின் ராகிங் ஒழிப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்றும், மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
காரணம் என்ன?
இதுவரை, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் தற்கொலை செய்த மாணவர்கள் யார்; அவர்களின் விபரங்கள்; தற்கொலைக்கான காரணம்; போலீஸ் விசாரணையின் முடிவுகள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவும், ஐ.ஐ.டி.,க்கு உத்தரவிட்டுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில், தற்கொலை செய்த மாணவ, மாணவியர் தொடர்பாக, துறை ரீதியாக விசாரணை நடத்தியது குறித்த, அறிக்கை தாக்கல் செய்யும்படியும் தெரிவித்தனர். பின்னணி விபரங்கள்இந்த விவகாரத்தில், அரசியல் மற்றும் அதிகார மையங்களை தாண்டி, வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு, உண்மை நிலையை வெளிச்சத்துக்கு எடுத்து வர வேண்டும்.
இது போன்ற சம்பவங்களுக்கு, இனி துளியும் இடம் அளிக்காமல், பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். மாணவி பாத்திமா விவகாரத்தில், சர்ச்சைக்குள்ளான பேராசிரியர்களின் பின்னணி விபரங்களை ஆய்வு செய்து அறிக்கை தரவும், மத்திய குழுவினர் உத்தரவிட்டுள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.மாணவி மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட உயர்கல்வி செயலர் சுப்ரமணியம், 'இந்த விவகாரத்தில் உண்மை விரைவில் வெளிவரும். அதுவரை, வதந்திகளுக்கு இடம் அளிக்க வேண்டாம்' என, செய்தியாளர்களிடம் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement