Advertisement

டவுட் தனபாலு

Share
துணை முதல்வர் பன்னீர்செல்வம்:

தமிழகத்தில் தொழில் துவங்க, அமெரிக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, எங்கள் அரசு தயாராக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி பாதையில், அமெரிக்கா வாழ் இந்தியர்களும், தொழிலதிபர்களும் இணைய வேண்டும்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தை தொழில்மயமாக்க வேண்டும் என்ற, ஒற்றைக் குறிக்கோளுடன் நீங்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறீர்கள் என்பது, உங்கள் நிகழ்ச்சிகளில் தெரிகிறது. இந்தியாவின் தொழில் வளத்தில், இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்த மாநிலத்தை, முதலிடத்திற்கு மாற்றாமல், அமெரிக்காவிலிருந்து வர மாட்டீர்களோ என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தே.மு.தி.க.,வுக்கு, உள்ளாட்சி இடங்கள் ஒதுக்கீடு தொடர்பாக, அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த, ஐவர் குழுவை, விஜயகாந்த் நியமித்துள்ளார். இதில், மாநில துணை செயலர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, அக்பர், அவை தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலர் மோகன்ராஜ் ஆகியோர், அ.தி.மு.க.,வுடன் பேசி, போட்டியிடும் இடங்களை முடிவு செய்வர்.

'டவுட்' தனபாலு: 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு குறித்து, அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் பல நாட்கள் பேசி, பலத்த இழுபறிக்கு பின் தான் முடிவானது. உள்ளாட்சி தேர்தல், பலத்த போட்டி நிலவும் தேர்தல். இதில், சுளையான இடங்களை பெற்று வாங்க, முன்கூட்டியே குழுவை நியமித்து விட்டீர்களோ... 'டவுட்' சரி தானா?


தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி: தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக, உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. வயல்களில் அவை அமைக்கப்படுகின்றன என தெரிவித்து, அவற்றை தடுக்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சிக்கின்றன. இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கின்றன. கேரளாவில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அங்கு அமைக்கும் கோபுரங்களை எதிர்ப்பதில்லை.

'டவுட்' தனபாலு: கம்யூனிஸ்ட்டுகள் விரும்பும் அரசு, இந்த மாநிலத்தில் இல்லாததால், தேவையற்ற போராட்டங்களை அக்கட்சிகள் ஊக்கவிக்கின்றன என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்கு மின்சாரம் அவசியம் என்பதை அவர்கள் அறிந்தும் தடுப்பதால், அதன் பின்னணியில் அரசியல் உள்ளதை நீங்கள் அறியவில்லையா என்பதே என், 'டவுட்!'

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: காவல் துறையை நவீனப்படுத்த, 'டிஜிட்டல் மொபைல் ரேடியோ' போன்ற கருவிகள் வாங்கியதில், 350 கோடி ரூபாய்க்கு ஊழல் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். எதிர்க்கட்சி தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா... கிடைக்கும் தகவல் உண்மையா, என்பதை ஆராய்ந்து, உண்மை இருந்தால் கூற வேண்டும். யாரோ எழுதி கொடுத்ததை, அறிக்கையாக கொடுக்கிறார்.'

டவுட்' தனபாலு: இதெல்லாம் மக்களை திசை திருப்ப நடத்தப்படும் நாடகம் என்பது உங்களுக்கு புரியவில்லையா... அதில் ஊழல், இதில் ஊழல் என்றால் தான், பரபரப்பாக பேசப்படும் என்பதை, ஸ்டாலின் நன்றாக அறிந்து வைத்துள்ளார். அவரிடம் ஆதாரம் இருந்தால், கோர்ட்டுக்கு அல்லவா போயிருப்பார்... அவ்வாறு எதுவும் இல்லாததால் தான், பப்ளிசிட்டிக்காக கூறுகிறார் என்பதை உங்களால் உணர முடியவில்லையோ என்பதே, எனக்கு, 'டவுட்' ஆக உள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது, எங்கள் கோரிக்கை இல்லை. 'முறையாக நடத்த வேண்டும்; முறையான இட ஒதுக்கீடுகள் பின்பற்ற வேண்டும்' என்றே, நீதிமன்றத்துக்கு கடந்த முறை சென்றோம். ஆனால், திரும்பத் திரும்ப, உள்ளாட்சி தேர்தலை இப்போதும் நிறுத்தப் போகிறோம் என்ற பொய்யை, அ.தி.மு.க.,வினர் சொல்லி வருகின்றனர். இதன் மூலம், தேர்தலை நிறுத்தும் எண்ணத்தில் தான், அ.தி.மு.க., இப்படி பேசுகிறதோ என்ற சந்தேகம், எங்களுக்கு எழுந்திருக்கிறது.

'டவுட்' தனபாலு: கடந்த முறை, ஓட்டு போட மக்கள் தயாராக இருந்த நேரத்தில், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று, தடையாணை வாங்கி, தேர்தலை நீங்கள் நிறுத்தியதால் தான், அ.தி.மு.க., இப்போதும் அஞ்சுகிறது. தேர்தல் நடைபெறாததால், போட்டியிட விரும்பியவர்களுக்கும், பிற கட்சிகளுக்கும் நிறைய பாதிப்பு. அந்த அச்சம் தான், இப்போதும், அ.தி.மு.க.,வை இவ்வாறு பேச வைத்துள்ளது. அவர்களின் வாயை அடைக்க, 'இந்த முறை நாங்கள் கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம்' என, உறுதியாக அறிவித்தால் என்ன என்பதே, என், 'டவுட்!'

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: கடந்த மூன்றாண்டுகளில், சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட, பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மழை நீரை முழுமையாக சேமிக்க வேண்டும் என்பதற்காக, குடிமராமத்து திட்டத்தை உருவாக்கி உள்ளோம். மூன்று ஆண்டுகளில், ௧,௦௦௦ கோடி ரூபாயில், தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தோம்; அதன்படி பணிகள் நடந்து வருகின்றன.'

டவுட்' தனபாலு: நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்... ஆனால், ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் துவங்கி, நான்கைந்து மாதங்களுக்கு, குடிதண்ணீருக்காக, மக்கள் ஆலாய் பறக்க வேண்டியுள்ளதே... ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது திட்டங்களை அறிவிக்காமல் தமிழகத்தின் தண்ணீர் தாகத்தை போக்கலாமேங்கிறது தான், என்னோட, 'டவுட்!'
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

    110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தீர்கள், நல்லது. ஆனால் அந்த நிதி உரியமுறையில் செலவு செய்யப்பட்டு திட்டங்கள் நிறைவேறினவா. அப்படி நிறைவேறியிருந்தால் அது என்ன என்ன திட்டங்கள் என்பதையும் விளக்கமாக கூறினால் நல்லது.

Advertisement