Advertisement

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் சீன ஆதரவாளர் தீ வைத்து எரிப்பு: ஹாங்காங்கில் தீவிரமடைகிறது போராட்டம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர்.

மற்றொரு சம்பவத்தில், சீன ஆதரவாளரை, போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவங்களை அடுத்து, போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிரதேசம், ஹாங்காங். இங்கு, குற்ற வழக்குகளில் சிக்கும் கைதிகளை, சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, ஐந்து மாதங்களாக, பொதுமக்கள் தீவிரமான போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது, போலீஸ் தாக்குதலில் காயமடைந்த ஒரு இளைஞர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை, சாய் வான் ஹோ நகரில், ஏராளமான இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். போலீசார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், அவர்களை விரட்டி அடித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முகமூடி அணிந்த ஒரு இளைஞரை, போலீசார், கீழே தள்ளி, அவரது கையில் விலங்கு மாட்ட முயற்சித்தனர். அப்போது, முகமூடி அணிந்த மற்றொரு இளைஞர், போலீசாரை நோக்கி வேகமாக வந்தார். திடீரென ஒரு போலீஸ்காரர், துப்பாக்கியை எடுத்து, அந்த இளைஞரை சுட்டார். இதில், அந்த இளைஞரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி, சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மற்றொரு இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், மேலும் ஒரு இளைஞர் காயமடைந்தார். இருவரும், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மா ஆன் சான் என்ற பகுதியில், சீன ஆதரவாளர் ஒருவர், போராட்டம் நடத்திய இளைஞர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்கு வாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஒரு இளைஞர், சீன ஆதரவாளர் மீது, எளிதில் தீப்பற்றும் ஒரு திரவத்தை ஊற்றி தீ வைத்தார். இதையடுத்து, அவர் மீது தீப்பற்றியது. இதில், அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். நேற்று, ஹாங்காங் முழுவதும் வன்முறையும், பரபரப்பும் நிலவியதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement