Advertisement

மகிழ்ச்சி! மெஷின் முதலீட்டு மானிய வரம்பு உயர்வு: சிறு, குறு ஆடை உற்பத்தியாளர்களுக்கு

திருப்பூர்:மெஷின் முதலீட்டுக்கான மானிய உச்சவரம்பு தொகை உயர்த்தப்பட்டிருப்பது, திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக, புதிய மெஷினரிகள் கொள்முதலுக்கு, தமிழக அரசு, முதலீட்டு மானியம் வழங்குகிறது.
மெஷினரி மதிப்பில், 15 சதவீதமாக இருந்த முதலீட்டு மானியம், கடந்த 2013ல், 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.அதன்படி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மெஷினரி முதலீட்டுக்கான தொகையில், அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கப்பட்டுவந்தது.
இந்த மானிய உச்சவரம்பு தொகையை, தமிழக அரசு தற்போது, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. மானிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பது, திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
ஆடிட்டர் அஸ்வின் அரசப்பன் கூறியதாவது:திருப்பூரில் உள்ள சிறு, குறு, நடுத்தர பின்னலாடை நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு, மாநில அரசின், முதலீட்டு மானிய திட்டம் கைகொடுக்கிறது. இந்த திட்டத்தில், 1.20 கோடி ரூபாய் வரையிலான மெஷினரி முதலீட்டுக்கு, அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் மட்டுமே மானியம் வழங்கப்பட்டுவந்தது. 1.20 கோடிக்கு மேல் மதிப்புள்ள மெஷின்களை கொள்முதல் செய்தாலும்கூட, 30 லட்சத்துக்கு மேல் மானியம் பெறமுடியாதநிலை இருந்தது.
தற்போது, மானிய உச்சவரம்பு 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை அதிக முதலீடு செய்ய தயங்கிய நிறுவனங்கள் இனி, 2 கோடி ரூபாய் வரையிலான மெஷினரிகளை கொள்முதல் செய்து நிறுவமுடியும்.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், வாய்ப்பை பயன்படுத்தி, அதிநவீன மெஷினரிகளை நிறுவி, தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.மானிய வரம்பு உயர்வு, ஆடை உற்பத்தி உட்பட, பல்வேறு தொழில் சார்ந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, உற்பத்தியையும், வர்த்தகத்தையும் வளர்ச்சி பெற கைகொடுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement