Advertisement

பனிப்பொழிவு!கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக...மழைநீரை சேமிக்க நடவடிக்கை தேவை

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பனி பொழிவு இருப்பதால் இனி, பருவமழை பெய்யுமா என சந்தேகம் எழுந்துள்ளது
.தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை காலம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களாகும். இந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்கியது. அக்டோபர் மாதத்தில் சராசரி மழையளவான 220 மி.மீட்டருக்கு 233 மி.மீ., மழை பெய்துள்ளது.நவம்பர் 1ம் தேதிக்கு பின் மழை பெய்வது முற்றிலுமாக நின்று விட்டது. இதற்கு காரணம் அரபிக்கடலில் 'கியார், மகா' புயல்கள் உருவானதால் அவை தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்துச் சென்றதேயாகும். இதனால் வட மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குளிர் காற்று வீசுவதற்கு பதில் வெப்ப காற்று வீசி வருகிறது.இந்நிலையில், இரவு நேரங்களில் ஜனவரி மாதத்தை போல் கடும் பனிப் பொழிவு இருந்து வருகிறது. இரவு 9 மணிக்கு துவங்கும் பனிப்பொழிவு மறுநாள் காலை 8 மணி வரை நீடிக்கிறது.பனி பொழிவு உள்ளதால், மழை பொழிவதற்கான அரிகுறியே இல்லாமல் உள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால், இனி பருவ மழை பெய்யுமா என சந்தேகம் எழுந்துள்ளது.நவம்பர் மாதம் இயல்பான மழையளவு 290 மி.மீ., ஆனால், இதுவரை 4.5 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நீடிக்கும்; மழை இருக்காது என தனியார் வானிலை மையம் கணித்துள்ளது.கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், இந்தாண்டும் பொய்த்துவிடுமோ என கடலுார் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு சாத்தனுார் அணை 50 சதவீதம் கூட நிரம்பாததால், தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. மாவட்டத்தில் உள்ள ஓரிரு நீர்நிலைகளை தவிர மற்றவை நிரம்பாமல் உள்ளன.
கடலுார் பகுதிகளில் உள்ள 210 நீர்நிலைகளில் 15 மட்டுமே முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. 30 ஏரிகள் 91 முதல் 99 சதவீதம் வரையும், 36 ஏரிகள் 81 முதல் 90 வரையும் நிரம்பியுள்ளன. 56 ஏரிகள் 26 முதல் 50 சதவீதம் வரையும், 72 ஏரிகள் 25 சதவீதம் வரையும் நிரம்பியுள்ளன. 128 ஏரிகளில் 50 சதவீதம் கூட தண்ணீர் நிரம்பாத நிலை உள்ளது.இதே நிலை நீடித்தால் கோடை காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே கிடைக்கும் மழைநீரை சேமித்து வைக்க மாவட்ட நிர்வாகமும், பொது மக்களும் முன் வர வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement