Advertisement

சென்னை மக்களிடம் மாநகராட்சி கமிஷனர் கெஞ்சல்!

''சென்னையை, குப்பையில்லா பகுதியாக மாற்ற, மக்களின் ஒத்துழைப்பு அவசியம்'' என, கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி சுற்று வட்டார பகுதிகளை, குப்பை தொட்டியில்லா பகுதிகளாக மாற்றுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம், மந்தைவெளிப்பாக்கம், மேற்கு சர்குலர் சாலையில் உள்ள, கல்யாண் நகர் நலச்சங்கம் சார்பில், சங்க கட்டடத்தில், நேற்று நடந்தது.


இதில், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், தேனாம்பேட்டை மண்டலம், 123,- 126 வார்டுகளில் உள்ள, நலச்சங்க நிர்வாகிகள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், மக்கும் குப்பை, மக்காத குப்பை, சானிட்டரி கழிவுகள் உள்ளிட்டவைகளை, தரம் பிரிப்பது குறித்தும், மக்கும் குப்பையில் இருந்து, உரம் தயாரித்து செடிகளுக்கு பயன்படுத்துவது குறித்தும், விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும், 'டெங்கு' காய்ச்சலுக்கு காரணமான, 'ஏடிஸ்' கொசு உற்பத்தியை ஒழிப்பது குறித்த ஆலோசனைகளை அதிகாரிகள் வழங்கினர்.


கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் பேசியதாவது: நலச்சங்கங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும், மாநகராட்சி முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளது. சென்னையை, குப்பையில்லா பகுதியாக மாற்ற, மக்களின் ஒத்துழைப்பு அவசியம். உங்கள் பகுதியில், வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடம், குப்பை தரம் பிரித்தல் குறித்து, நலச்சங்கங்கள் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.வீட்டில், நீங்களே, குப்பையை தரம் பிரிக்கும் பட்சத்தில், பாதி பிரச்னை தீர்ந்து, மிக விரைவில், உங்கள் பகுதியில், குப்பை தொட்டியில்லாத நிலையை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பங்கேற்றோருக்கு, மாநகராட்சி சார்பில், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement